Friday, December 19, 2014

என் உயிரையே கொடுத்திடுவேன் அவள் கேட்டால்..

வளர வளர
இன்னும் அதிகமாய் என்னை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள்!

நான் வீடடைவதில் எவ்வளவு தாமதானாலும்,
அவ்வளவு தூக்கத்தையும்
தன் இமைகளுக்கு வெளியே
காத்திருக்கச் செய்து விடுகிறாள்!

சில நாட்களில்,
கை கால்கள் அசைவுகளற்று,
வாசலை நோக்கியே விழிகள் வெறித்தபடி,
கிட்டத்தட்ட..
ஒரு சிலை போலவே
மௌனமாய் அமர்ந்திருப்பாள்!

நான் எப்படியும் வந்துவிடுவேனென
அவளுக்குத் தெரியும்!

வாசற்கதவுக்கு வெளியில் இருக்கும்
இரும்புக் கேட்டின் தாளை,
நான் திறக்கும்
கிரீச் சத்தம் போதும்..
அவள் உணர்ச்சிகள்
ஒவ்வொன்றாய் மீண்டு எழும்!

கதவு விலக விலக,
என்னுருவம் தெரிய தெரிய,
கொஞ்சம் கொஞ்சமாய் அவளது உற்சாகங்கள்
உயிர்பெறுவதை பலமுறை பார்த்திருக்கிறேன்!

திறந்த இமைகளின் நடுவில்
அதுவரை உறைந்திருந்த அவளது பார்வை
என்னை மொத்தமாய் வேண்டி உருகும்!

அவளது கைகளும்..
அவளது கால்களும்..
அவற்றின் ஒவ்வொரு விரல்களுமே
அவளைத் தூக்கச் சொல்லி கொஞ்சி அழைக்கும்!

என் வாழ்வின் மூன்றாவது தாய்!
இரண்டாவது தேவதை!!
முதல் மகள்!!!

இந்த உடலென்ன உடல்,
என் உயிரையே கொடுத்திடுவேன் அவள் கேட்டால்!!

Thursday, December 18, 2014

நீ நீயேயில்லை!!

நீ செய்யும் நல்லதை
பிறருக்குத் தெரியப்படுத்தினால்
நீ தற்பெருமைவாதி!

நீ செய்யும் கெட்டதை
பிறருக்குத் தெரியப்படுத்தாமல் விட்டால்
நீ நேர்மையற்றவன்!

சரி நல்லதை
சொல்லாமல் இருப்போமென்றால்
நீ மகாநடிகன்!

கெட்டதையாவது
சொல்லித் தொலைப்போமென்றால்
நீ அயோக்கியன்!

மொத்தத்தில்..
நீ நீயேயில்லை என்பது உணர்க!!

Wednesday, May 14, 2014

குற்றவுணர்வுகள்

ஒரு உயிரிழப்பிற்கானக் குற்றவுணர்ச்சியை ஒரு உயிர் இழந்துதான் கொடுக்கிறது என்றால் எவ்வித மறுப்புமின்றி ஒப்புக் கொள்வீர்கள், பிழைத்தும் கொடுக்கிறது என்றால்? ஒப்புக் கொள்வதை விடுங்கள். முதலில் இதை உணர்ந்திருக்கவே கொலைக்கு மிக அருகிலான ஒரு குற்றம் நடக்க நீங்கள் காரணமாகியிருக்க வேண்டும். என்ன புரியவில்லையா? கொலை ஒரு உயிரிழப்பிற்குக் காரணமாகும் போது அவ்வுயிர் மயிரிழையில் பிழைப்பதற்குக் காரணமாவது தான் கொலைக்கு மிக அருகிலானக் குற்றம். அந்தக் காரணப் புள்ளியில் ஒரு முறையேனும் ஒரு நொடியேனும் நின்ற அனுபவம் கண்டிப்பாக வேண்டும். இல்லையெனில் நான் சொல்வது உங்களுக்குப் புரிவது கஷ்டம் தான்.

என்ன இவன் கொலை குற்றமென்றெல்லாம் பேசுகிறான் ‘ஒருவேளை..’ என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். கத்தியால் குத்தியோ, மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டுச் செய்தால் மட்டும்தான் கொலையென்று அர்த்தம் இல்லை. கொலைக்கு மிக அருகிலானக் குற்றங்கள் உங்கள் கண்முன் மிகச் சாதாரணமாக நடந்துக் கொண்டே தான் இருக்கின்றன. ஏன் நீங்களே கூட செய்திருப்பீர்கள்.

சாலையில் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு உதவ மறுத்து விலகி நடப்பதும், தாறுமாறாக ஓடும் லாரியொன்றால் கடுப்பேறி அதைவிடவும் தாறுமாறான வேகத்தில் அதை இடப்பக்கமாய் ஓவர் டேக் செய்கிறேன் பேர்வழி காரின் இடது புறக் கண்ணாடியின் விளிம்பால் உரசி ரோட்டோரத்தில் ஒரு பெண்ணை தடுமாறச் செய்வதும் கொலைக்கு மிக அருகிலானக் குற்றங்கள் தாம்.

நம்மால் ஒரு உயிர் போய்விட்டதே என்ற உணர்வு எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இன்னும் கொஞ்சம் போயிருந்தால் அந்த உயிர் நம்மால் போயிருக்குமே என்ற குற்றவுணர்வு நம்மில் பலபேருக்கு இருந்திருக்கும். ஆனால் பெரும்பாலானவர்கள் நமக்குச் சம்மந்தமில்லாதவை என அவற்றை நிராகரித்து விடுகிறோம். குற்றவுணர்ச்சிகளை நிராகரிப்பதை விடவும் மோசமான ஒரு செயலை இந்த மனித இனத்திற்கு எதிராக நம்மால் செய்ய முடியம் என்று தோன்றவில்லை. அதற்காக குற்றவுணர்சியுடனே வாழுங்கள் எனச் சொல்லவில்லை. புரியும் தவறு எண்ணி கொஞ்சம் வருந்துங்கள். நம்மால் திருப்பித் தர முடியாத ஒரு உயிருடன் விளையாடியதற்குக் கொஞ்சமாவது வெட்கப் படுங்கள். மற்றொருமுறை அது மாதிரியான விஷயங்கள் உங்களால் நடக்காது என உறுதிமொழி எடுங்கள். அது போதும்.

Tuesday, April 22, 2014

கடிந்து கொல் காதலே – III

இறை வேண்டுகிறேன்.
இணக்கம் தூண்டுகிறேன்.
நொடி கணமும்
குறையின்றியே நேசிக்கிறேன்.

இருந்தும்..
தூரத் தூக்கியெறிய
உனக்குத் தேவைப்படுவதெல்லாம்
ஒரேயொரு கோபம் மட்டும் தான்!!

கோபம்..
எனக்குத் தெரியும்,
வீரியம் ஏறிய
ஒரு பெரும் வலியின் முகமென்று!

எந்த முகத்தையும் நேருக்கு நேர்
பார்த்துப் பழகியவன் நான்.
நீ காட்டு!
என் பொறுமையுடன் போராடி
முடிந்தால் வென்றுவிட்டுப் போகட்டும்!
ஆனால்,
போய் தொலையட்டும் அது!!

ஏங்கேனும் ஒரு அகண்ட நிலப்பரப்பில்
கால் கடுக்க ஓடி
எல்லையோர நீரற்ற ஆழ்க் கிணறொன்றில்
தலை கீழ் குதித்து
கபாலம் சிதறி மறியட்டும்!!

இந்த வாழ்க்கை..
எந்தன் காதல்..
நம் உலகம்..
இதில் ஒன்றையேனும் சீண்டிப் பார்க்கக் கூட
இங்கு யாருக்கும் அனுமதி கிடையாது
உன் ஒருத்தியைத் தவிர..

சொல்லி வை!

Thursday, April 17, 2014

எலெக்ஷன் பலியாடுகள்!

கடந்த வாரம் பேருந்தில் பயணித்த போது அருகில் இருந்தவர் அரசியல் தொடர்பானப் பேச்சுகளை மெல்லத் தொடங்கினார். ஒவ்வொரு கட்சியை பற்றியும் நல்லபடியாகச் சொல்ல ஆரம்பித்து முடிக்கையில் காதோடுச் சேர்த்து நம் மூக்கையும் பொற்றிக் கொள்ளும் அளவிற்கு நாறடித்து விட்டார். அரசியல் பேச்சென்பதால் ஆரம்பத்திலிருந்தே விருப்பமில்லை. நானும் குனிந்து நெளிந்து எதிர் திசை திரும்பியென என்னென்னமோ செய்துப் பார்த்தும் அவர் விடுவதாயில்லை. அவர் பேசுவதோடு நிறுத்தினால் கூடப் பரவாயில்லை, ஒவ்வொரு கட்சியைக் கழுவி ஊற்றிவிட்டப் பிறகும், இது நான் நினைக்குறது மட்டும் தான், தம்பிக்கு எப்படி புடிபடுது னு தெரியல என்று என்னையும் கோர்த்து விட்டுக் கொண்டிருந்தார்.

உச்சி வெயிலில் அடைந்தபடி ஓடும் ஒரு தகரடப்பா பேருந்தில் இப்படி ஒரு மனிதருக்கு அருகில் உட்கார வச்சுட்டியே ஆண்டவா என்று கண் மூடிய நான் அதிர்ஷ்ட வசமாக அப்படியே தூங்கிப் போயிருக்கிறேன். நிறுத்தம் வரக் கண்விழித்துப் பார்த்தபோது, மனிதன் முன்னிருக்கைக்கு இடம்பெயர்ந்திருந்தார். பாவம் அங்கு என்னைப் போலவே ஒரு பலியாடு சிக்கி நெளிந்துக் கொண்டிருந்தது.

Wednesday, April 9, 2014

அன்சங் ஹீரோ (Unsung Hero)

‘இந்தச் சமூகத்தில் நீ யார்?’ என இனி யாராவது என்னை நோக்கி கேள்வி எழுப்பினால், அவர்களுக்குப் போட்டுக் காண்பிக்க ஒரு காணொளி கிடைத்திருக்கிறது. நான் யாராக இருக்க முயல்கிறேன் என்பதை சில நேரங்களில் என்னால் வார்த்தைகளால் விளக்க முடிவதில்லை. நான் சொல்லும் பாதியைக் கூட கேள்வி கேட்டவர்களால் புரிந்துக் கொள்ள முடிவதில்லை. இனி அந்தக் கவலைகளெல்லாம் இருக்காது.

O & M பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்களா என்று தெரியவலில்லை. Oglivy & Mather என்பதன் சுருக்கம் தான் அது. பாங்காக்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு விளம்பர நிறுவனம். அந்த நிறுவனம் பற்றியும் அவர்கள் தயாரிக்கும் விளம்பரங்கள் பற்றியும் இணையத்தில் சமீபத்தில் தான் படித்தறிந்துக் கொண்டேன். உணர்வுப்பூர்வமான விளம்பரங்கள் தருவதில் வல்லவர்களாகத் தெரிகிறார்கள். குறிப்பாக Thai Life Insurance க்காக சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர்கள் தயாரித்திருந்த ஒரு விளம்பரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

அது காது கேளாத, வாய் பேச இயலாத ஒரு அப்பா, அவருக்குப் பிறந்த ஒரு சிறுமி அவ்விருவர் பற்றிய உணர்வுப்பூர்வமானதொரு படைப்பு. ‘Silence of love’ என்று கூகுள் செய்துப் பாருங்கள். அந்தக் காணொளியை வெறும் வர்தக ரீதியான விளம்பரமாக ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளம் திணறும். கொஞ்சம் கண்ணீர் எட்டிப்பார்க்கும். இவ்விரண்டுக்கும் நான் உத்திரவாதம். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

இப்பொழுது அதே நிறுவனம், அதே Thai Life Insurance க்காக மற்றுமொரு காணொளியை தயாரித்திருக்கிறது. அநாமதேய மனிதன் ஒருவர் சாலையோர நடைபாதையில் நடந்து வருகிறான். அருகாமையில் இருக்குமொரு கட்டிடத்தின் மேல்தளத்தில் கழிவு நீர் வடிவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குழாய் அவனைக் குளிப்பாட்டுகிறது. ஒரு நிமிடம் நின்று அன்னாந்துப் பார்த்துவிட்டு அருகில் இருக்கும் இலைகளற்றுக் காணப்படும் ஒரு காய்ந்தச் செடியை தொட்டியோடு அந்தக் கழிவு நீர் விழும் இடத்திற்குக் கிடத்துகிறான். தன் நடையை தொடர்கிறான்.

ஒரு பத்து பதினைந்து அடி முன்னால், வயது முதிர்ந்தப் பெண்ணொருத்தி தனது தள்ளு வண்டியை சாலையிலிருந்து அந்த நடைபாதை மேட்டில் ஏற்ற சிரமப் படுவதைப் பார்க்கிறான். ஓடிப் போய் உதவுகிறான்.

அடுத்த ஷாட்டில், உணவு விடுதியின் நாற்காலி ஒன்றிலமர்ந்து பசியாறிக் கொண்டிருக்கும் அவனிடம் ஒரு நாய் உணவு கேட்டுப் பாவமாய் நிற்கிறது. தனது தட்டிலிருந்து ஒரு லெக் பீஸை எடுத்து அந்த நாய்க்கு கொடுக்கிறான். அதைக் கவனித்தக் கடைக்காரன் தலையசைத்துத் தனது உடன்பாடின்மையை வெளிப்படுத்துகிறான். அவனது நடைப்பயணம் தொடர்கிறது.

சிறிது தூரத்தில் ஒரு தாய், ஒரு சிறுமி அருகருகே அமர்ந்து பாதசாரிகளை நோக்கிக் கைக்கூப்பிப் பிச்சை எடுப்பதைப் பார்த்து நிற்கிறான். சிறுமி முன் கிடத்தப்பட்டிருக்கும் ஒரு சிறு வெண்பலகையில் ‘படிப்புக்காக’ என்று எழுதியிருக்கிறது. தனது பணப்பையை வெளியெடுத்து அதிலிருந்த இரண்டு நோட்டுகளையும் அந்தச் சிறுமியின் கைகள் பிடித்திருக்கும் ஒரு காகிதக் குவலையில் திணிக்கிறான். அது அருகில் இருக்கும் ஒரு கடைக்காரரை திருப்திப்படுத்துவதாய்த் தெரியவில்லை. அவரும் தலையசைக்கிறார்.

பிறகு அதேநாளில் தனது குடியிருப்புப் பகுதியில் மூடியிருக்கும் ஒரு கதவின் வாயிலில் வாழைப் பழச் சீப்பு ஒன்றை தொங்க விடுவது, தான் வளர்க்கும் பறவைகளுக்கு இரை வைப்பது, செடி கொடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது, குளித்துச் சுத்தமாவது, மண்டியிட்டு இறை வணக்கம் செலுத்துவது, ஒரு சராசரி உணவு உண்பதுவென அவனது தினசரி வாழ்க்கையின் தரம் காட்டப்படுகிறது.

இது தான் அவன். இது தான் அவனது வாழ்க்கை. இதனால் அவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது, அவனைச் சுற்றியுள்ள சமூகம் என்ன மாற்றம் கண்டுவிடப் போகிறது, அதையெல்லாம் அந்தக் காணொளியைப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

நல்லவனாய் இருப்பது எதையேனும் சாதிப்பதற்கோ நிரூபிக்கவோ அல்ல கடைசி வரை வெறும் நல்லவனாய் மட்டுமே இருப்பதற்கு. இதை இந்த உலகம் என்று புரிந்துக் கொள்கிறதோ, அன்று தொடங்கி உலகில் மனிதம் ஒன்று மட்டுமே ஓங்கி நிற்கும்.

Tuesday, April 8, 2014

சிங் இஸ் கிங்

நவம்பர் 16க்குப் பிறகு கிரிக்கெட் பார்ப்பதையே, இன்னும் சொல்லப் போனால், கிரிக்கெட் தொடர்வதையே நிறுத்திக் கொண்டுள்ளேன். திடீரென யாராவது ஸ்கோர் என்ன ஆச்சு என்று என்னைக் கேட்கும் போது தான், ‘ஆமா ல.. அப்படி ஒன்னு தொடர்ந்துட்டு தான் இருக்குல’ என்று ஒரு முறை முகம் துடைத்துக் கொள்கிறேன். ஒரு காலத்தில் முப்பொழுதிற்கும் உணவாக இருந்த கிரிக்கெட் இன்றைய தினத்தில் ‘கோலி தான் அடுத்த சச்சின்’, ‘மெய்யப்பன் விவகாரத்தில் வாய் திறக்க மறுத்தார் தோணி’ என்று ஃபேஸ்புக்கில் பகிரப்படும் சில செய்திகளின் தலைப்பைப் படிப்பதோடு நின்றுவிடுகிறது.

கடந்த ஞாயிறன்று கூட, ‘மாலை பேசுகிறேன்’ என்று காலை சொல்லியிருந்ததை மறந்து இரவு 9 மணிக்கு தொடர்பு கொண்ட போது, “ஃபைனலாச்சே.. மேட்சு பார்த்துட்டு இருப்ப னு நானும் விட்டுட்டேன்” என்று அம்மா சொல்லும் வரை, மார்ச் 30ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான யுவராஜின் சிறப்பான ஆட்டம் குறித்து அலுவலகத்தில் நண்பர்கள் சிலாகித்துக் கொண்டிருந்தது மறந்து போயிருந்தது.

யுவராஜ் சிங். 2002 இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடரில் பெவிலியன் பால்கனியில் சிவனேயென்று நின்று கொண்டிருந்த கங்குலி ஆவேசப்பட்டு தன் ஜெர்ஸியை கழற்றி காற்றில் சுழற்றியதற்கு முக்கியக் காரணமாகிப் போனதில் தொடங்கி இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர்.

ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவனுக்கு நிகராகப் பேசப்படும் அளவிற்கு அவ்வளவு வெற்றிகளை உறுதிபடுத்தி சர்வதேச அளவில் மிகச் சிறந்த ஒரு நடுநிலை ஆட்டக்காரராக பெயர் எடுத்தவர்.

குனிந்தால் கையில் சுலபமாகச் சிக்கிவிடக்கூடிய பந்தைக் கூடப் பிடிக்க முயற்சிக்காமல், பௌன்டரி லைனில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் ஏதோவொரு உயரமான பந்து வீச்சாளரை நோக்கி கை தூக்கும் கலாச்சாரத்தில் மொத்த இந்திய அணியும் தத்தளித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், பாய்ன்ட் ரீஜனில் இடப்பக்கம் ஒரு பத்து அடி, வலப்பக்கம் ஒரு ஏழு அடி, தலைக்கு மேல் ஒரு ஆறு அடி எனத் தன்னைச் சுற்றியும் பந்து எந்தத் திசையில் சென்றாலும் பறந்துப் பறந்து பிடித்தும், பிடித்த வேகத்தில் ஸ்டம்பை பதம் பார்த்தும் இந்திய அணியில் ஒரு ஃபீல்டிங் புரட்சியையே கொண்டு வந்த பெருமைக்கும் சொந்தக்காரர் இவரே தான்.

இதெல்லாம் போதாதென்று இக்கட்டானச் சூழ்நிலைகளில் எதிரணியின் முக்கிய பேட்ஸ்மன்களை தனது ஸ்லோ லெஃப்ட் ஆர்ம் மூலம் வீட்டுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். மொத்தத்தில் கபில் தேவுக்குப் பிறகு இந்தியா கண்டெடுத்த மிகச் சிறந்த ஆல்ரவுன்டர் என்றால் அது யுவராஜ் தான்.

இருபது ஓவர் போட்டிகளுக்கான உலகக் கோப்பை 2007ல் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. அந்த முதல் உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு ஜொகிந்தர் ஷர்மா பந்தை மிஸ்பா கிண்டிக் கொடுத்து அதை ஸ்ரீசாந்த் பிடித்துப் பைத்தியம் போல கத்தியதற்கெல்லாம் முன்னால், இந்தியாவை அந்த ஃபைனல் வரை கொண்டுச் சேர்த்ததில் யுவராஜின் பங்கு மகத்தானது. இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய க்ரூப் ஆட்டம் ஒன்றில் ஸ்டுவர்ட் ப்ராட் பந்து வீச்சில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முப்பது பந்துகளில் எழுபது ரன்கள். இன்று வரை என்னால் மறக்க முடியாத இரண்டு இரவுகள் அவை.

அதன் பிறகு 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை. சச்சினின் கடைசி உலகக் கோப்பை. ஒரு வகையில் முதலாவதும் கூட. 1983 க்குப் பிறகு இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றியது. அந்தத் தொடர் நெடுக்க பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் யுவராஜ் தனித்துக் காணப்பட்டார். அவ்வளவு திறமையான யுவராஜை அதுவரை பார்த்ததில்லை என்றுகூட சிலர் புகழ்ந்துத் தள்ளினார்கள். எதிர்ப்பார்த்தது போலவே தொடர் நாயகன் விருது யுவராஜக்கே வழங்கப்பட்டது.

சில மாதங்கள் ஓடின. 2012 பிப்ரவரியில் யுவராஜ் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியுலகிற்குத் தெரிய வந்தது. ஒரு சில பத்திரிக்கைகளில், 2011 உலகக் கோப்பையின் போதே அவருக்குப் புற்று நோய் இருந்திருக்கக்கூடும், அதனுடன் தான் விளையாடியிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

சிகிச்சைக்காக அமெரிக்கா பறந்தார் யுவராஜ். உடலளவிலான பாதிப்புகளைக்காட்டிலும் மனதளவிலான பாதிப்புகளால் தான் புற்று நோய் மிகப் பெரிய நோயாகப் பார்க்கப்படுகிறது. யுவராஜ் குணமாகித் திரும்பி வருவாரா, அப்படியே வந்தாலும் அவரால் பழைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமா. அவர் அமெரிக்காவில் கீமோதெரப்பிக்கு உட்படுத்தப்பட்டிருந்த போது இந்தியாவில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகிக் கொண்டிருந்தது. ஆனால் யுவராஜ் குணமாகி வந்தார். அவரால் பழைய சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்த முடிந்தது. அதற்கான மிகச் சமீபத்திய ஒரு சாட்சியத்தை தான் அம்மா நினைவூட்டியிருக்கிறாள்.

அன்றிரவு இந்தியாவை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியிருந்தது. இந்தியா நிர்ணயித்திருந்த இலக்கை அறிந்துக்கொண்டதும் இலங்கையின் பந்துவீச்சு சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு உறங்கினேன்.

மறுநாள் காலை இணையதளத்தில் யுவராஜை பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்கள். என்ன விஷயமென்று பார்த்தால், யுவராஜ் வீணடித்தப் பந்துகள் மட்டும் அவர்களுக்குக் கிடைத்திருந்தால் அடுத்த இரண்டு உலகக் கோப்பை வெல்வதற்கான ஓட்டங்களைக் கூட முன்கூட்டியே எடுத்து வைத்திருப்பார்கள் போல பேசியிருந்தார்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு, டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தளத்தில் யுவராஜ் வீடு மீது கல் வீச்சு என்ற செய்தியையும் படிக்க நேர்ந்தது. உடனே ஃபேஸ்புக்கில் லாகின் செய்தேன். எனக்குக் கோபம் வரும்போதெல்லாம் ஏனோ அதைத் தான் செய்கிறேன். அங்கும் அவர்கள் யுவராஜை விட்டு வைக்கவில்லை.

யுவராஜ் சிங் இலங்கை ஜெர்ஸி அணிந்திருக்கும் (எடிட் செய்யப்பட்ட) ஒரு புகைப்படம் “HERO FOR SRILANKA” என்ற வாக்கியத்துடன் அங்கு உலா வந்துக் கொண்டிருந்தது. அது என்னமோ சரி தான். நம்மாள் ஒருவரை கிரிக்கெட் விளையாடும் பிற நாடுகளில் கூட ஹீரோவாகப் பார்த்தாலும் பார்ப்பார்கள், நாம் வீடு தேடிப் போய் கல் விட்டு அடிப்போம். அந்தப் புகைப்படத்தை எடிட் செய்த புண்ணியவான் யாராக இருப்பினும், அதே மாதிரி, கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளின் ஜெர்ஸியுடனும் தலா ஒரு புகைப்படம் ரிலீஸ் செய்யுமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொண்டு ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன்.

மூன்று வருடங்களுக்கு முன்பு ‘வர்ல்ட் கப் ஹீரோ’, இப்பொழுதோ ‘யுவி சக்ஸ்’. நாக்கில் நரம்பில்லாதவர்கள். நன்றி மறந்தவர்கள். ஒரு சிலர் மட்டும் அந்நியாயமாய் பேசியவர்களுக்குப் பதிலடி கொடுத்தும், யுவராஜை ஆதரித்தும் எழுதியிருந்தார்கள். கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.

யுவராஜ் ஒரு உண்மையான் வீரன். அவன் திரும்பி வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஐ சப்போர்ட் யுவி.

Thursday, April 3, 2014

மதுரையில் ராஜா

மதுரையில் நாளை மறுநாள் சங்கீதத் திருநாள் என்ற பெயரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதுவரை இல்லாத அளவில் அரங்கேற இருக்கும் அந்த நிகழ்ச்சியை கார்த்திக் ராஜா ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிகிறது. நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளுக்கு ஏகக் கிராக்கி, ரசிகர்கள் எல்லாம் முன்டியடித்துக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் சொல்லித் தெரிந்துக் கொள்ள வேண்டியதில்லை. ராஜா. இந்த ஒரு வார்த்தை போதும்.

மன்னன் திரைப்படத்தில் சின்ன தம்பி படத்திற்கான முதல் காட்சி டிக்கெட்டுகள் வாங்கும் முதல் இரு நபர்களுக்கு தங்கச் சங்கிலி, தங்க மோதிரம் வழங்கப்படும் ஒரு காட்சியமைப்பு இடம் பெற்றிருக்கும். அது தழுவியோ என்னவோ இந்த நிகழ்ச்சிக்கும் அது மாதிரியான ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதன்படி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் விலை கொடுத்து டிக்கெட் வாங்குவோருக்கு ராஜாவே தன் கையால் டிக்கெட் வழங்குகிறார். 

ராஜாவை சந்திப்பதும், அவர் கையால் டிக்கெட் வாங்குவதும் நிச்சயமாக எந்தத் தங்கச் சங்கிலி-தங்க மோதிரத்தை விடவும் எண்ணிலடங்கா மடங்கு சிறந்ததே. சிலர் அதைப் பிறவிப் பயனாகக் கூடக் கருதுவார்கள். ஆனால், அந்த ஒரு லட்ச ரூபாய் சமாச்சாரம் தான் இடிக்கிறது. அதற்குப் பதிலாய் அந்தப் படத்தில் வருவது போலவே முதல் இரண்டு நபர்களுக்கே அந்த வாய்ப்பினை வழங்கியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இரண்டரை லட்சம் கொடுத்து ஒரு ரசிகர் ஒரு டிக்கெட்டை வாங்கியிருப்பதாகப் படித்தேன். 

நாமெல்லாம் ரசிகர்கள். இசை, ராஜா மீதானத் தீராக் காதலில், இதைவிட அதிக விலையென்றாலும் கொடுக்கத் தயாராக இருப்போம். ஆனால், இசையென்ற மாபெரும் கலையை, அதுவும் அந்தக் கலையே பெற்றெடுத்தப் பிள்ளையாகப் பார்க்கப்படும் ராஜாவை மையமாகக் கொண்டு நடக்கும் ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் மாபெரும் பொறுப்பில் இருப்பவர்கள் இந்த விலைப்பட்டியல் பற்றி இன்னும் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டாமா? யோசித்திருக்கலாம்.

Tuesday, April 1, 2014

தி ஷேக்ஸ்பியர் & சைகாலஜி 4

“மச்சி கிளம்பலாமா.. ஐயம் டன்”

“இல்ல டா. இன்னும் கொஞ்ச நேரம். இப்போ தான் கெல்லியோடு கால் முடிஞ்சது”

“அந்தக் கிழவனா.. என்ன சொல்றான் %#&#%&”

“டேய் ஏன் இப்படி”

“பத்தரை மணிக்குக் கால் செட் பண்ணுறவன இன்னும் அசிங்கமா கூட திட்டலாம்.. ஆஃபிஸ் கம்யூனிகேட்டராச்சே னு பாக்குறேன்..”

“சரி சரி. ஆன்சைட்டுக்கு ஒரு மெயில் மட்டும் போடனும். டென் மினிட்ஸ்”

“ஓகே அப்போ. நான் கிரௌன்ட் ஃப்ளோர் லாபில வெய்ட் பண்றேன். லேட் பண்ணிடாத. அல்ரெடி பசி உசுரு போகுது”

“ஷ்யூர்”

கார்த்திக் அவே போனான்.

எட்டு வருடங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னை வந்தபோது எனக்கு அறிமுகமான முதல் நபர் கார்த்திக். சோர்வுகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்த அந்தக் காலக்கட்டத்தில் ஒரு நேர்கானலில் ஒன்றாக வெளியேற்றப்பட்டோம் என்ற ஒற்றுமையோடுச் சேர்ந்துக் கொண்டோம். அதன் பிறகு, எட்டு வருடங்கள், மூன்று நிறுவனங்கள், மான்ஷனில் தொடங்கி ஏழெட்டு வீடுகள், இருபதுக்கும் மேற்பட்ட ரூம் மேட்ஸ்கள். நாங்கள் மட்டும் அப்படியே இருந்துவிட்டோம். ஒரு வெற்றியாளனின் மற்றொரு வெற்றியாளனுடனானக் கூட்டணியை விட, தோல்வியுற்ற ஒருவனின் மற்றொரு தோல்வியுற்றவனுடனான கூட்டணிக்கு என்றைக்குமே சக்தி அதிகம். எங்கள் விஷயத்திலும் அதுவே உண்மையாகிப் போனது.

மனுஷன் பொதுவாப் பசி தாங்க மாட்டான். பசியில் அவன் பேசும் வார்த்தைகளை மனுஷன் தாங்கமாட்டான். இது தான் கார்த்திக். அவனை நன்கு அறிந்த எல்லோருக்குமே இது தெரியும்.

அன்றிரவு கார்த்திக் என்னை நம்பியும் நான் மெயின் ரோட்டில் உள்ள ஒரு செட்டிநாடு மெஸ்ஸை நம்பியும் வெளியேறினோம். அன்று மட்டும் அந்த மாஸ்டர் மனதிறங்கி, அனைக்கவிருந்த அடுப்பை தொடர்ந்து எறியவிட்டு ஒரு கொத்துப் பரோட்டா போட்டுத் தராமல் போயிருந்தால் கார்த்திக்கின் காரசாரமான வார்த்தைகளுக்கு நானும் கெல்லியும் கொத்துப் பரோட்டா தான்.

அவன் சாப்பிட்டு முடித்து பசி தீர்ந்த்தற்கான அறிகுறிகள் அவன் முகத்தில் தென்படும் வரை நான் அமைதியாக இருந்தேன். மெல்ல பேச்சைத் தொடங்கினேன்.

“டேய் இன்னைக்கு அவன மறுபடியும் பார்த்தேன் டா”

“எவன?”

“அதான் டா, நம்ம மிஸ்ட்ரி மேன்”

“ஆரம்பிச்சுட்டியா.. நீ வேணும்னா பாரு.. அவன பத்தி யோசிச்சு யோசிச்சு ஒரு நாள் நீயும் பைத்தியம் 
ஆகப் போற”

“அந்தாளு ‘நா பைத்தியம்’ னு உன்கிட்ட வந்து சொன்னாரா?”

“எந்தப் பைத்தியம் சொல்லியிருக்கு”

“மூடு. ஒருத்தவங்கள புரிஞ்சுக்கப் பொறுமை இல்லனா உடனே அவங்கள பைத்தியம் னு சொல்றதா. நீ இப்படித்தான் பேசுவனு தெரிஞ்சும் உங்கிட்டையே திரும்பத் திரும்ப சொல்றேன் பாரு. என்னச் சொல்லனும்”

“அப்படியில்லடா.. நா என்ன சொல்ல வந்தேன்னா..”

“நீ ஒன்னும் சொல்லத் தேவையில்ல. நல்லா கொட்டிகிட்டாச்சுல. நடையக் கட்டு”

வழக்கமாக நான் ஓட்ட கார்த்திக் பின்னிருக்கையில் கதை வளர்த்துக் கொண்டே வருவான். நான் அமைதியை விரும்பும் இரவுகளில் மட்டும் அவனை ஓட்டச் சொல்லிவிடுவேன். அன்றிரவு அவன் பேச வேண்டாம் என்று தோன்றியது.

Friday, March 28, 2014

தி ஷேக்ஸ்பியர் & சைகாலஜி 3

ஜான் பால் கெல்லி. நியூ யார்க் மாகாணத்தின் குளிரூட்டப்பட்ட ஒரு அறையில் இருந்துக்கொண்டு எங்களுக்கெல்லாம் வேலை தரும் கிலையன்ட் மேனஜர். ஒரு விதத்தில் கிழ மேனஜரும் கூட.
நான்கு வருடத்திற்கு முன்பு தனது ஐம்பதாவது பிறந்தநாள் என்று சொல்லி, ஆஃப்ஷோர் டீம் எங்களுக்கு ஐநூறு டாலர்கள் அனுப்பியதைத் தவிர அவர் செய்த நல்ல காரியம் என்று எதையும் குறிப்பட்டுச் சொல்லிவிட முடியாது. அவ்வளவு கறாரான மனிதர். அவரை ஜான் என்றும் பால் என்றும் கெல்லி என்றும் இன்னும் சில பல அலங்காரப் பெயர்கள் கொண்டும் இடத்துக்கும் எங்கள் மூடுக்கும் தகுந்தார் போல அடையாளப்படுத்துவோம்.

கெல்லியுடனான அன்றைய கால் பத்தரை மணிக்கு என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வழக்கமான ப்ராஜட் அப்டேஸ் தான். ஆனால் அதே வாரத்தில் எற்கனவே இரண்டு முறை எங்களால் மாற்றியமைக்கப்பட்ட கால் என்பதால் ஆஃப்ஷோர் மக்களுக்கு அதிமுக்கியமாகிப் போன ஒரு கால். இந்தக் கார்பொரேட் உலகில் பெரும்பாலான முக்கிய கால்களின் பின்னனி இதுவாகவே அமைவது ஜஸ்ட் எ கோயின்ஸிடன்ஸ் டாம் இட் ரகம் தான்.

இன்னும் பத்து நிமிடங்கள் இருக்க, நான் ஒன்பதாம் தளத்தை ஏற்கனவே அடைந்திருந்தேன். ஏழு மணிக்குப் பிறகு, ஒரு டப்பர்வேர் பாக்ஸ் முழுக்க அடைத்து வைக்கப்பட்டிருந்த தர்பூசணித் துண்டுகள், முக்கால் லிட்டர் தண்ணீர், போதாதக் குறைக்கு ஒரு காஃபி என்று ஒரு இயற்கை உந்துதலுக்கான காரணிகளெல்லாம் போதுமான அளவு உழைத்திருந்ததில், அடுத்து என்னவாக இருக்க முடியும். அதே தான்.

ரெஸ்ட்ரூம் கதவு, திறந்ததும் நேரே சுமார் நான்கு அடி தள்ளி மறைவிற்கான ஒரு தடுப்பு, வலது பக்கம் நான்கைந்து கண்ணாடிகள், ஒவ்வொரு கண்ணாடிக்கும் துணைபோகும்படி ஒரு வாஷ் பேசின், அவற்றையெல்லாம் கடந்துச் சென்று நான் இளைப்பாறிவிட்டு திரும்பிப் பார்க்கிறேன், ஒரு நபர் இரண்டாவது வாஷ் பேசினில் முகம் கழுவிக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து அதற்கும் பக்கத்திலிருந்த வாஷ் பேசினில் கைகழுவிவிட்டு ஒரு டிஷ்யூவை உருவலாம் எனப் பார்த்தால், டிஷ்யூ டிஸ்பென்சரின் பொக்கை வாய் என்னைப் பார்த்துச் சிரிக்காத குறை. சேவ் பேப்பர் சேவ் ட்ரீஸ் என்பது மட்டும் ஸ்டிக்கராக இல்லாமல் இருந்திருந்தால், நம்மாட்கள் அதையும் உருவி துடைத்துத் தூக்கியெறிந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி எனது இருக்கைக்கு வந்து சேர்ந்தேன்.

சரியாக 10:29 அப்போது. கெல்லியின் கால். ஒன்றரை வருடமாக திரும்பத் திரும்ப டயல் செய்திருந்ததில் அந்தப் பத்து எண்களும் என் விரல்களுக்கே பாடம் ஆகியிருந்ததன. ஒரு சில விநாடிகளில் கெல்லியும் இணைய, வழக்கமான விசாரிப்புகளைக் கடந்து ப்ராஜக்ட் விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தன.

அந்த ரெஸ்ட்ரூம் கதவை நான் திறந்தபோது, ஒரு உருவம் நான் முன்பே குறிப்பிட்டிருந்த அத்தடுப்பின் மறைவிலிருந்து விரைந்து கண்ணாடி நோக்கிச் சென்று முகம் கழுவுவது போல தன்னைக் காட்டிக் கொண்டதே, அதே உருவம் தான் நான் அங்கிருந்துக் கிளம்பும் வரைகூட அங்கு முகம் கழுவிக் கொண்டிருந்ததோ?

அந்நபர் அணிந்திருந்தச் சட்டை லிஃப்டில் நான் சந்தித்தவர் அணிந்திருந்ததை ஒத்துத்தான்… ஒரு வேளை, அதே சட்டை, அதே நபர் தானோ?

அழுதுக் கொண்டிருந்து, யாரோ வருவது போலத் தெரிந்ததும், அழுகையையும் கூடவே தனது அடையாளத்தையும் மறைக்க நினைத்து தான், அந்த மொத்த முகம் கழுவும் நாடகமுமோ?
இப்படியானக் கேள்விகளெல்லாம் என்னை பலமாகத் தாக்கிக் கொண்டிருக்கையில் செவி நரம்புகள் ஏந்தி வந்த அதிர்வலைகளை அர்த்தப்படுத்த முடியாமல் எனது மூளை சில விநாடிகள் ஸ்தம்பித்துப் போயிருந்தது.

“ஜீவன், யூ தேர்ர்… ஐ ஆஸ்ஸ்க்ட்.. டு யு ஹாவ் எனி அப்டேஸ்?” கெல்லியின் குரல் இயல்பை மீறியக் கூர்மையில் ஒலித்தது.

“நோ கெல்லி. நோ அப்டேஸ். சாரி ஐ வாஸ் ஆன் ம்யூட்” என்று சமாளித்தேன். வழக்கமானதொரு உத்தி தான் என்றாலும் ஒரு வகையில் நான் சொன்னதில் உண்மை இருந்தது. 

குழப்பத்தில், ஐ வாஸ் ரியலி ஆன் ம்யூட்.

Thursday, March 27, 2014

தி ஷேக்ஸ்பியர் & சைகாலஜி 2

மனோதத்துவம் பற்றிய குறிப்புகளில் சுயமரியாதை குறைவாக உள்ளவர்கள், தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப் பட்டவர்கள் பற்றிப் படித்திருக்கிறேன். சமூகத்தில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள அவர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள், அதற்கான காரணங்கள், அவற்றை வெல்லும் யுத்திகள் எனப் பலவும் விவாதிக்கப்பட்டிருக்கும். அந்த மனிதரை பார்க்கும் ஒவ்வொரு முறையும் நான் படித்தறிந்தச் சில தகவல்கள் மீண்டும் ஒரு முறை எனக்குப் பாடம் எடுத்துவிட்டுப் போகும். அன்றிரவும் என் உள்ளங்கையில் நான் சுமந்து உதடு நனைத்துக் கொண்டிருந்த காஃபி வழியாக எனக்குள் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தன சில உளவியல் உண்மைகள்.

நல்ல ஹான்ட்ஸாமாக இருக்கிறார்.

ஏறத்தாழ இரண்டு வருடங்களாக நானே இவரை தினமும் பார்க்கிறேன் என்றால் ஓரளவுக்கு நிரந்தரமாகிவிட்ட ஒரு வேலை தான்.

ஆலென் சொலி, வான் ஹூஸைன் என்று அணிவதெல்லாம் அந்நிய நாட்டு விலை உயரந்தத் தயாரிப்புகள் தான்.

நான் பார்க்க ஒரு நாள் ஒரு புது ஹோன்டா ஆக்டிவாவில் ரே பான் சகிதமாய் வந்து இறங்கியவருக்கு பணம் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும் எனவும் தெரியவில்லை.

குடும்பத்தில் பிரச்சனை, காதல் கீதல் னு ஏதாவதிருக்குமோ.

வாய்ப்பிருக்கிறதென்றாலும், அப்படி ஒரு பாதிப்புக்குள்ளான ஒரு நபர் எப்படி தனிமையை மட்டும் சந்தோஷமாக கொண்டாடிவிட முடியும். காஃபி தீரத் தீர குழப்பம் மட்டும் கூடக் கொண்டே போனது.
அவசியமான ஒரு எண்ண ஓட்டத்தையும், பேரவசியமான ஒரு மௌனத்தையும் கலைப்பதற்கென்றே மனிதனால் உருவாக்கப்பட்ட தேவையில்லாச் சப்தங்களில் கைக்கடிகார அலாரமும் அடக்கம் என்பதை புரிந்துக் கொள்ள உதவிய தருணமது.

ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் பத்து மணிக்கு மேல் அலுவலகத்திலேயே குப்பை கொட்டுகிறோம் என்பதை அறிய விரும்பி என் காஸியோ எடிஃபிஸில் நான் பதிந்திருந்த அலாரம் கிசு கிசுத்தது. கூட்டிக் கழித்துப் பார்த்ததில் அது அம்மாதத்தின் பதினெட்டாவது மகத்தான நாள் என்பது புலப்பட்டது.
பத்து மணி. வேலை ஒப்பந்தந்தில் அலுவலக நேரமாகக் குறிப்படப்பட்டிருந்த 9am – 6pm கடந்த இருநூற்று நாற்பதாவது நிமிடத்தில் நான் இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஒன்றரை வருடத்தில், இந்த ஒரு கேள்விக்கு மட்டும் மனசாட்சி ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு பதிலை என்னால் கொடுக்க முடிந்ததில்லை.

இந்த அலுவலகத்தைப் பொருத்தமட்டில் பாதிக்கும் மேல் இப்படியான ஒரு குற்றவுணர்ச்சிக்கு ஆளானவர்களே. அந்தப் பட்டியலில் அந்த மனிதரின் பெயரும் வாசிக்கப்படும் என்பதை எப்படிப் புரிந்துக் கொள்வதெனத் தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்க, தூரத்தில் அவர் மீண்டும் லிஃப்டில் நுழைவதை பார்க்க முடிந்தது. அவரைத் தொடர்ந்து ஐந்தாறு நபர்களும். பாவம் என்று தோன்றியது.

பாலித்தீனை அழிக்கப் பிறந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு பேப்பர் கப்பின் உட்புறத்தில் மெழுகு போன்று ஏதோவொன்று கரைந்துக் கொண்டிருப்பதை கவனித்ததும் உயிர் மேல் உள்ள ஆசையில் என்னை நானே தடுத்துக் கொண்டேன். எப்பொழுதும் போல, செராமிக் கப் ஒன்றை இந்த வாரமாவது வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அடுத்த லிஃப்டுக்காக காத்திருக்கத் தொடங்கினேன். கெல்லி கால் வேற இருந்தது அன்று.

Wednesday, March 26, 2014

தி ஷேக்ஸ்பியர் & சைகாலஜி

அலுவலகத்தில் ஒரு நபரை அநேக தினங்களிலும் சந்திக்கின்றேன். சில சமயங்களில் லிஃப்டில், சில சமயங்களில் பேன்டிரியில். சில சமயங்களில் காஃபெடெரியாவின் கார்னர் இருக்கைகளில், இன்னும் சில சமயங்களில் நான் பணியமர்த்தப்பட்டிருக்கும் இதே ஒன்பதாவது தளத்தில். யார் அவர்? பெயர் என்ன? ஒரு விவரமும் தெரியாது.

முப்பதிலிருந்து முப்பத்தைந்து வயதிற்குள் இருக்கும்.

நல்ல நிறம்.


தவறாமல் எண்ணை குடித்து வளர்ந்ததற்கான அத்தனை அம்சங்களோடும் அசைவை மறந்து படர்ந்திருக்கும் கருகரு முடி.

நன்கு தேய்க்கப்பட்ட முழுக்கைச் சட்டை.

எப்போதாவது நிமிர்ந்த தலை.

எப்போதுமே ஒரு சங்கடப் பார்வை.

புன்னகையா..? அப்படியென்றால்???

நான் தினம் கடந்துச் செல்லும் ஏதோவொரு பாதையில் இந்தப் புதிர் மனிதரின் பயணம் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. ஒரு சில நேரங்களில், குறிப்பாக லிஃப்ட் சந்திப்புகளின் போது, பத்து பதினைந்து நபர்களின் பார்வைகளை தவிர்க்கப் போராடும் அந்தக் குனிந்தத் தலையும் குறுகிய உருவமும் என் விழிவழிப் புகுந்து இதயத்தின் மௌனத்தோடு பேச முயற்ச்சித்திருக்கிறது.

ஓரிரு வாரங்களுக்கு முன்னொரு வெள்ளி இரவில், பணி அழுத்தங்கள் தன் இஷ்டத்திற்கு மேய்ந்து விட்டிருந்த என் உடலுக்கு கொஞ்சம் காஃபைனும், ஆக்ஸிஜனும் தேவைப்பட்டதில் முதல் தளத்தில் இருக்கும் பேன்டிரிக்குச் செல்வதென முடிவு செய்து லிஃப்டில் ஏறினேன். நான் தடுத்து நிறுத்தியது, கிட்டத்தட்ட கதவுகள் மூடப்பட்டுவிட்ட நிலையில், கீழிறங்க ஏற்கனவே தன்னை தயார்ப்படுத்திக் கொண்ட ஒரு லிஃப்ட் மட்டுமில்லை என்பது அப்போது தெரியவில்லை.

மூடிக்கொண்டிருந்த அந்தக் கதவுகளுக்குப் பின்னால் அவசர அவசரமாய் தன் மீது வெறுமையை வாரிப்போட்டு தன்னைப் புதைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தது ஒரு புன்னகை. உள்ளே அதே நபர். தனியாய். அந்தக் கணத்திற்கு முன்பு வரை சந்தோஷமாகவும்.

சுற்றி யாருமேயில்லாத அந்தத் தனிமையை அதுவரையில் அவர் அனுபவித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். யாருடைய பார்வையையும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லாத ஒரு நிம்மதியை என்னால் அவர் இழந்திருக்கலாம் என்று தோன்றியது. அநேகமாக அந்த மனிதர், இப்படிப்பட்ட தனித்த லிஃப்ட் பயணங்களில் மட்டுமே நம் எல்லோரையும் போல இயல்பாக, சந்தோஷமாக பயணிப்பார் போல. யார் கண்டார், அப்படியான முதல் வாய்ப்பையும், நிகழ்வதற்கு முந்தைய கணத்தில், சரியாய், நான் பறித்துவிட்டேனோ என்னவோ.

பதினைந்து முதல் இருபது நபர்கள் வரை அனாயாசமாகச் சுமக்கும் இடவசதி கொண்ட அந்த லிஃப்டில் அன்றிரவு நான் நிற்பதற்கே இடமில்லாதது போல உணர்ந்தேன். எனக்கே அப்படியென்றால், அவர் நிலைமை? என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

Thursday, March 13, 2014

சரி கம பத நி ச

‘Fifteen years and still going stronger..’ என்ற தலைப்பில் ஒரு பதிவு. என்னடா என்று பார்த்தால் நமக்கெல்லாம் மிகவும் பரிட்சையமான ஒரு இசையமைப்பாளர் திரைத்துறையில் நுழைந்து பதினைந்து வருடங்கள் வெற்றிகரமாகக் கடந்துவிட்டதாகச் சொல்லப்பட்டிருந்தது.

தமிழில் போட்டதை தெலுங்கிலும், தெலுங்கில் போட்டதையே தமிழிலும் மாற்றி மாற்றிப் போடுவதெல்லாம்… என்று நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. என்னதான் கைவசமிருக்கும் பதினைந்து ட்யூன்களையே திரும்பத் திரும்ப போட்டு வருகிறார் என்றாலும், அந்தப் பதினைந்து ட்யூன்களுமே அசத்தலானவை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

திரைப்படங்களுக்கு இசையமைக்க வந்ததற்குப் பதிலாய், ஒரு மேடைக் கலைஞராக தொடர்ந்திருந்தால், இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தைச் சேர்த்திருப்பார் என்று பல சமயங்களில், குறிப்பாக, இவரது இசை வெளியீட்டு விழாக்களின் போது தோன்றியிருக்கிறது.

சரி கம பத நி ச.. சரி கம பத நி ச.. சரி கம பத நி ச.. யப்பா சாமி.. ஆள விடு!

Friday, March 7, 2014

நான் கண்ட முதல் பெண்ணுக்கு

வீட்டிற்கு வருபவர்களிடம்,
எனது
சிறு வயது புகைப்படங்கள் காட்டி
நீ மகிழும் போதெல்லாம்,
உனது சிறு வயதிற்கே
நீ காலம் பெயர்க்கப்படுகிறாய்!

o0o

உன் மகனை யாரும்
திட்டிவிடக்கூடாது என்பதில்
ரொம்பவும் விழிப்புடன் நீ..
அப்பாவிற்கு முந்தி
திட்டுவது போல
நடித்தாவது விடுகிறாய்!

o0o

என் கையை பிடித்து,
நீ பழக்கிவிட்ட எழுத்துக்களை,
நானும்
எப்படி எப்படியோ
கிறுக்கிப் பார்க்கிறேன்..
கவிதையாகவே முடிகிறது!!

o0o

எனது முகபாவங்களை,
இவ்வளவு ஆழமாக
படிக்கும் உன்னிடம்,
ஒவ்வொரு முறையும்
தோற்றுப் போகிறேன்..
உனை
ஏமாற்ற நினைத்து..!

o0o

நான் இரவில்
தாமதமாக வரும் போதெல்லாம்..
உனக்கு தூக்கமும்
தாமதமாகவே வருகிறது!

o0o

என் கண்ணீரில் கலந்திருக்கும்
பொய்மையை பிரித்தெடுக்கத் தெரிந்தும்..
ஒரு நாளும்
பழிக்காத தாய்மை!

o0o

விளையாடிய களைப்பில்,
வீடு வந்து,
நான் உறங்கிட,
என் உடல் முழுவதிலும்
தேடுதல் வேட்டையில்
நீ இறங்குகிறாய்..
நானே உணராத
காயங்களைப் பிடிக்க!

o0o

நான் உறங்கிய பின்
உறங்கி விட்டு
எனக்கு முன்னமே
விழித்தும் விடும் நீ
எப்படித்தான்
நாகூசாமல் சொல்கிறாயோ..
“என் மகன்
உழைக்கிறான்!” என்று

o0o

எனை சுமந்த
உன் இடுப்பெலும்பு
தேயத் தொடங்கிற்றுவென
நம் மருத்துவர் சொல்கிறார்.
அது சரி..
உனக்கும் வயதாகிறதே!

o0o

நான் என்ன தவம்
செய்தே னென
எனக்கே தெரியவில்லை..
எனை
தவமிருந்து பெற்றாளாம்!

Tuesday, March 4, 2014

என்ன மனுஷனோ???!!!

படித்திருக்கிறோம்.. ஆயிரங்களில், ஒரு சிலர் லட்சங்களில் கூட சம்பளம் வாங்குகிறோம்.. இன்னும் அதிக பணம், இன்னும் சிறந்த அம்சங்கள் அடங்கிய ஸ்மார்ட்ஃபோன், இன்னும் சௌகரியமான கார் என ஒரு பக்கம் இயந்திரத் தன்மையோடு நாம் நகர்ந்துக் கொண்டே இருக்க, திரு. நாகராஜ் போன்ற ஒரு சிலர் மட்டுமே மனிதர்களாய் உயர்ந்தும் நிலைத்தும் நிற்கிறார்கள்.
ஜோலார்பேட்டை பக்கம் போக நேர்ந்தால், இந்த மனிதனின் கால் தொட்டு வணங்கி வரலாம் என இருக்கிறேன்.

யார் அந்த நாகராஜ்? அப்படி என்ன செய்துவிட்டார் எனக் கேட்கிறீர்களா? இணையத்தில் கண்டெடுக்கப்பட்ட, ஒரு செய்தித் தொகுப்பினை அப்படியே கீழே பகிர்ந்திருக்கிறேன். வாசிப்பின் முடிவில் உங்களுக்கே புரியும்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம் கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர். கல்லாவில் இருந்தவரும் காசு கேட்பதில்லை. பணத்துக்குப் பதில் வணக்கம் செலுத்தினால் போதுமா? விசாரித்தபோதுதான் மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக் காட்டினார். விஷயம் புரிந்தது.

‘முதியோர், ஊனமுற்றோர்களுக்கு காலை 8 முதல் 11 மணி வரை இலவச உணவு’ (100 பேர் வரை), ‘பால் வாங்கப் பணமில்லையென்றால் குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’, ‘வாரம் 100 மாணவர்களுக்கு இலவசமாக பேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை முதல் மாலை வரை பாதி விலையில் உணவு’ இந்த அறிவுப்புகள் சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்தன.

ஆச்சரியத்துடன் கேட்டால், “பணத்துக்காக வாழ்றதில்லிங்க; வாழ்றதுக்குதாங்க பணம்” பெரிய தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார் இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ். அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச் செய்துவருகிறார். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர் வரை இந்த ஓட்டலை நம்பியே காலம் தள்ளுகின்றனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட மற்றும் தென் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தை இணைக்கும் முக்கியச் சந்திப்பு. இந்த நிலையத்தைக் கடந்ததுதான் அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன.

பயணத்தின்போது காலி தண்ணீர் பாட்டிலை ஜன்னல் வழியே வீசுவதைப்போல குடும்பத்தில் பாரமென கருதப்படும் மனிதர்களை ரயிலில் அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். மாதந்தோறும் குறைந்தபட்சம் 15 பேராவது இப்படி அனாதைகளாகத் தனித்து விடப்படுகின்றனர்.

திக்குத் தெரியாமல் தவிக்கும் அவர்கள் ஜோலார்பேட்டையிலேயே சுற்றித்திரிகின்றனர். இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச் சத்திரமாக இருக்கிறது. “பசி என்ற உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாதவருக்குக்கூட உணவு நமக்கு தேவை என்பதை உணர்த்துகிறது” என்கிறார் நாகராஜ்.

இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில் வீடுகளில் கவனிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியவர்களுக்குத் தேவையான உணவை அவர்களது குடும்பத்தினர் வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம். நாகராஜின் மனைவி சுஜாதாவும் தன் கணவரின் இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக இருக்கிறார்.

மிகச் சின்ன வருமானத்தில் இதையெல்லா எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இவர்களுக்கென்று தனியாக உலை வைக்கப்போதில்லை. வழக்கமாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக சமைக்கிறேன். 5 கிலோ மாவு புரோட்டோ போட்டாலும் 10 கிலோ மாவு போட்டாலும் மாஸ்டருக்கு ஒரே கூலிதான். எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவாகிறது.

சில ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்புதான் என்றாலும் எனக்கு குடும்பம் நடத்தத் தேவையான லாபம் கிடைக்கிறது. மனதுக்கும் சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் ‘வாடி நிற்கும்’ நாகராஜ்.

செய்தி முடிந்தது.

நாகராஜ் நினைத்திருந்தால், காசாக்கத் தவறியவைகள் கொண்டு தனது ஹோட்டலை விரிவுபடுத்தியிருக்கலாம், ஹோட்டல் வாசல் முன்பு ஒரு இன்னோவா காரை நிறுத்திவைத்திருக்கலாம், தனது மனைவிக்கு ஒரு நெக்லஸ் வாங்கியிருக்கலாம், அட இது எதுவுமே இல்லையென்றாலும் இந்தத் தலைமுறையின் குறைந்தபட்ச ஆடம்பரமான ஒரு ஸ்மார்ட்ஃபோனையாவது வாங்கித் தொலைத்திருக்கலாம். ஆனால் அவருக்கென்னவோ மனிதம் வளர்க்கத்தான் பிடித்திருக்கிறது. என்ன மனுஷனோ???!!!

Thursday, January 9, 2014

ஐ.டி எம்ப்லாயீஸ் என்றாலே தியாகிகள் தானே!

ஒரு மணிநேரத்திற்கு முன்பு (இப்போ பத்து பத்தாகுது) இரவுக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டு பார்சலுக்காக ஒரு பிரபல ஹோட்டலில் காத்திருந்தேன். நான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு இடதுபுறம் இருந்த நாற்காலி காலியாக இருந்தது. இருபத்து எட்டு வருகிறது, முப்பத்து மூன்று வருகிறது, நாற்பதுக்கான பில்லும் தயாராகிறது, எனக்கான முப்பது மட்டும் இன்னும் காணும், காத்திருந்தேன்.

‘பேருக்குத்தான் பெரிய ஹோட்டல், இவனுங்க ஒரு தோச கொடுக்குறதுக்குள்ள அரிசி ஊற வச்சு மாவறச்சு தோச சுட்டுறலாம்’ என்று நொந்துக் கொண்டிருந்த என்னைப் போல் ஒருவனை, ‘அட.. பார்க்கலாமே!’ எனத் திரும்பிய போது, ஒரு சிறுமியின் குறுகுறுப் பார்வை என் கண்களை மொத்தமாய் மறைத்திருந்தது. காலியாக இருந்ததாக நான் சொன்ன அந்நாற்காலி மீது தன் முழங்கால் ஒன்றை ஊன்றியபடி, விசித்திரமான ஒரு பார்வைக்கேவுரியச் சாய்ந்த தலையோடு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும், ‘குழந்தையாச்சே.. சிரிச்சு வைப்போம்’ என்று சிரித்தேன். அவளிடம் சொல்லிக்கும்படியான எந்தவொரு அசைவும் இல்லாமல் போனது என்னை மேலும் ஒரு மாதிரியாக்கியது.

பொதுவாக, இது மாதிரியான பொது இடங்களுக்குச் செல்லும் போது, அங்கு இருக்கும் பெண் குழந்தைகளை (குழந்தைகளை மட்டும் தான்) கண்ணடித்துக் காட்டி நான் வம்பிழுப்பதுண்டு. அவைகளும், அம்மாவின் முந்தானைக்குப் பின் ஒளிந்திருந்துவிட்டு மீண்டும் எட்டிப் பார்க்கும். எங்களுக்குள் ஒரு விளையாட்டு அது. ஆனால், இந்த அனுபவம் இது தான் முதல் முறை. நான் எவ்வளவு தான் பார்வையைத் தவிர்த்தாலும், அந்தச் சிறுமி விடுவதாகத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில், என் இடது கை மணிக்கட்டு அருகில் லேசாகச் சொறிந்தாள். திரும்பினேன்.

சிரித்தாள். பதிலுக்குச் சிரித்தேன்.

‘இது என்ன கீறியிருக்கு’ என்று என் கன்னம் மேலுள்ள ஒரு தழும்பைச் சுட்டி மழலையாகக் கேட்டாள். ‘அதுவா.. உன்ன மாதிரி சின்னதா இருக்கும் போது, உன் ஃபிரண்ட் மாதிரி ஒருத்தன் விளையாட்டா கீறிட்டான்’ என்று விளையாட்டாகத் தான் சொன்னேன். அது ஏனோ, அதுக்கும் பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு விஷமம் பிடித்தவனுக்குப் பிடிக்காமல் போயிற்று. அவன் அந்தச் சிறுமியிடம், ‘வேற ஒன்னுமில்லடா.. அந்த மாமா, ஒழுங்கா படிக்காம முட்ட மார்க் வாங்கினாங்களா (இந்த இடத்தில் என்னை ஒருமுறை அவன் பார்த்துக்கொண்டதும், அச்சிறுமி உம் கொட்டியதும், ரொம்ப முக்கியம் என்று உள்ளுக்குள் நான் குமுறிக் கொண்டதும் சொல்லி மாளாது), அதான்.. அவங்க டீச்சர் கன்னத்து மேலேயே சூடு வச்சுட்டாங்க’ என்று முடித்தான். அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னை நோக்கி, ‘கொயந்த பாஸ்’ என்பது போலச் சிரித்தான். நானும் சிரித்துத் தொலைத்தேன்.

தலைவர் கவுண்டமணியின் கிளாசிக் ஒற்றை வரியைத் தழுவிய ஒரு வரி மட்டும் எனக்குள் எக்கோ மோடில் சரியாக மூன்று முறை ஒலித்தது.

Wednesday, January 8, 2014

மேக்கிங் ஆஃப் ‘அடிமை கனவுகள்’

ஒவ்வொரு அடிமையின் மனதிற்குள்ளும் தனக்கும் ஒரு நாளில் விடுதலை கிடைக்காதா என்ற ஏக்கம் இருக்கும். நிஜத்தில் கிடைக்காத ஒன்றை கனவுகளில் கொண்டாடப் பழகிய மனிதர்கள் என்ற வகையில் தனக்கு விடுதலை கிடைக்கும் அந்த நொடி எப்படி இருக்கும் அல்லது எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரளவிற்கு முடிவு செய்திருப்பார்கள். அது பலவருட அடிமைத்தனத்தின் பாதிப்பாகவோ, நியாயமான ஒரு எதிர்ப்பார்ப்பின் நிழலாகவோ அவர்களின் ஆழ் மனதிற்குள் எழுப்ப ஆளில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கும்.

ஆழ்மன எண்ணங்கள் தான் கனவுகளாக மாறுகின்றன என்பது அறிவியல் நமக்குள் புகுத்தியிருக்கும் நம்பிக்கை. அதன் அடிப்படையில், விடுதலைக்கான அக்கணம் அவ்வப்போது கனவுகளில் வந்து போவதில் ஆச்சர்யம் இல்லையெனினும், வந்து.. போய்விடுகிறது என்பதிலுள்ள சொல்லழுத்தம் வலியை மட்டுமே தரத்தக்கது.

கள்ளம் அறியாத ஒரு குழந்தையின் சுவாசத்தில் புத்துயிர்பெறும் சோப்பு நுரை, எப்படி கம்பிகளின் பிடியிலிருந்து விலகி, நீர்குமிழிகள் உருவத்தில் புதுவாழ்க்கை பெற்று, சுதந்திரக் காற்றில் மிதந்துச் செல்கிறதோ, அதற்கு நிகரான ஒரு விடுதலையை, சங்கிலிகள் அனுமதித்த எல்லைகளுக்குள் சுருங்கிப் போய்விட்ட ஒரு இருட்டு உலகத்தில் வாழும் தானும் பெற ஏங்கிடும் ஒரு அடிமையின் குமுறலாக எழுத நினைத்ததன் விளைவு தான் ‘அடிமை கனவுகள்’.

Tuesday, January 7, 2014

அடிமை கனவுகள்

ஒரு பிஞ்சுக் கை பற்றியிருக்கும்
பிளாஸ்டிக் உடையணிந்த துருபிடித்தக் கம்பியின்
மறுமுனை வளைவில் பூத்திருந்த ஒரு துளையை
அதுவரையில் திரையிட்டிருந்த சோப்பு நுரை

இன்னும் கள்ளம் மொழிந்திடாத நாவின்
எச்சில் ஈரம் தொட்டு வீசிடும்
சில்லிட்ட சுவாசக் காற்று
ஜவ்வுபோல இழுத்ததில் பிய்ந்து

சிறகுகள் முளைத்த
பல கண்ணாடிப் பறவைகளாகி
ஒரு வெட்டவெளியில்
சுதந்திர ஊர்வலம் புறப்படுகையில்

ஒரு அடிமையின் கனவு
ஒவ்வொருமுறையும் கலைக்கப்படுகிறது.

Monday, January 6, 2014

மெய்யுணர்தல் 6

பள்ளியில் காலை இறைவணக்கக் கூட்டத்தில் ‘இன்றைய சிந்தனை’ என்ற பெயரில் தினமும் ஒரு வாசகம் இடம்பெறும். ஆங்கில வழி பாடம் கற்பிக்கும் முறையை வழக்கத்தில் கொண்டிருந்த ஒரு மெட்டிரிக்குலேஷன் பள்ளி என்பதால், ‘டூடேஸ் தாட் இஸ்..’ என்று ஆரம்பித்து, சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மாணவனோ மாணவியோ மைக் முன் அவதரித்து, பெரும்பாலான நாட்களில் ஊர் பெயர் தெரியாத யாரோ ஒரு வெளிநாட்டுப் பிரபலம் சொன்னதை, மனப்பாடம் செய்தபடி அப்படியே ஒப்பித்துவிட்டு மறைந்துவிடுவர்.

அந்தக் காலக்கட்டத்தில், அப்படிப் பகிரப்பட்ட எந்த ஒரு தாட்-க்கும் முக்கியத்துவம் கொடுத்து உணர முயற்சிக்காத நாம், இன்று வாழ்க்கையில் வெறும் அனுபவங்களை மட்டுமே பரிசளித்திருக்கும் தருணங்கள் பல கடந்து வந்துவிட்ட பிறகு, நம் நிலைக்குப் பொருந்தும் மேற்கோள் சுமக்கும் புகைப்படங்களை தேடிப் பிடித்து, கொஞ்சமும் சலிக்காமல் பேஸ்புக்கில் பகிர்ந்தும், மணிக்கணக்கில் அவற்றையே திரும்பத் திரும்ப வாசித்தும் வலியாற்றிக் கொள்கிறோம்.

எவ்வளவு படித்தும் விளங்கிறாத சில மேற்கோள்களின் அர்த்தம், பட்டால் தான் புரிகிறது.

பெத்த ரசிகரூ.. ஊ… ஊ

சச்சின், ரஹ்மான், வைரமுத்து இவர்களின் தீவிர ரசிகன் என்று சொல்லிக் கொள்வதற்கு அவர்களைப் பற்றிய ஏ டூ சட் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை.

அப்படித் தெரிந்து வைத்திருக்கும் ஒரு ரசிகனை எங்கேனும் சந்திக்க அல்லது அவர் பற்றி படிக்க நேரும் போது, ஒரு வியப்பு பிறந்திருக்கே தவிர, எந்த ஒரு தாழ்வு மனப்பான்மையோ ஒருவித குற்ற உணர்ச்சியோ என்னை தொந்தரவு செய்ததில்லை.

புள்ளி விவரங்களை தெரிந்து வைத்திருப்பவன் தான் பெரிய ரசிகன் என்று சொல்வதானால், செய்திகள் கோர்க்கும் பத்திரிக்கைக்காரர்கள் தான் அந்தப் பட்டியலில் முதலில் நிற்பார்கள்.

என்னைப் பொருத்தவரையில், தான் நேசித்துத் தொடரும் ஒரு பிரபலத்தை, ஏன் அப்படி நேசிக்கிறோம், எதனால் அவ்வளவு தீவிரமாய் தொடர்கிறோம் என்பதை புரிந்து வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பெரிய ரசிகர் தான்.