ஒரு மணிநேரத்திற்கு முன்பு (இப்போ பத்து பத்தாகுது) இரவுக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டு பார்சலுக்காக ஒரு பிரபல ஹோட்டலில் காத்திருந்தேன். நான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு இடதுபுறம் இருந்த நாற்காலி காலியாக இருந்தது. இருபத்து எட்டு வருகிறது, முப்பத்து மூன்று வருகிறது, நாற்பதுக்கான பில்லும் தயாராகிறது, எனக்கான முப்பது மட்டும் இன்னும் காணும், காத்திருந்தேன்.
‘பேருக்குத்தான் பெரிய ஹோட்டல், இவனுங்க ஒரு தோச கொடுக்குறதுக்குள்ள அரிசி ஊற வச்சு மாவறச்சு தோச சுட்டுறலாம்’ என்று நொந்துக் கொண்டிருந்த என்னைப் போல் ஒருவனை, ‘அட.. பார்க்கலாமே!’ எனத் திரும்பிய போது, ஒரு சிறுமியின் குறுகுறுப் பார்வை என் கண்களை மொத்தமாய் மறைத்திருந்தது. காலியாக இருந்ததாக நான் சொன்ன அந்நாற்காலி மீது தன் முழங்கால் ஒன்றை ஊன்றியபடி, விசித்திரமான ஒரு பார்வைக்கேவுரியச் சாய்ந்த தலையோடு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும், ‘குழந்தையாச்சே.. சிரிச்சு வைப்போம்’ என்று சிரித்தேன். அவளிடம் சொல்லிக்கும்படியான எந்தவொரு அசைவும் இல்லாமல் போனது என்னை மேலும் ஒரு மாதிரியாக்கியது.
பொதுவாக, இது மாதிரியான பொது இடங்களுக்குச் செல்லும் போது, அங்கு இருக்கும் பெண் குழந்தைகளை (குழந்தைகளை மட்டும் தான்) கண்ணடித்துக் காட்டி நான் வம்பிழுப்பதுண்டு. அவைகளும், அம்மாவின் முந்தானைக்குப் பின் ஒளிந்திருந்துவிட்டு மீண்டும் எட்டிப் பார்க்கும். எங்களுக்குள் ஒரு விளையாட்டு அது. ஆனால், இந்த அனுபவம் இது தான் முதல் முறை. நான் எவ்வளவு தான் பார்வையைத் தவிர்த்தாலும், அந்தச் சிறுமி விடுவதாகத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில், என் இடது கை மணிக்கட்டு அருகில் லேசாகச் சொறிந்தாள். திரும்பினேன்.
சிரித்தாள். பதிலுக்குச் சிரித்தேன்.
‘இது என்ன கீறியிருக்கு’ என்று என் கன்னம் மேலுள்ள ஒரு தழும்பைச் சுட்டி மழலையாகக் கேட்டாள். ‘அதுவா.. உன்ன மாதிரி சின்னதா இருக்கும் போது, உன் ஃபிரண்ட் மாதிரி ஒருத்தன் விளையாட்டா கீறிட்டான்’ என்று விளையாட்டாகத் தான் சொன்னேன். அது ஏனோ, அதுக்கும் பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு விஷமம் பிடித்தவனுக்குப் பிடிக்காமல் போயிற்று. அவன் அந்தச் சிறுமியிடம், ‘வேற ஒன்னுமில்லடா.. அந்த மாமா, ஒழுங்கா படிக்காம முட்ட மார்க் வாங்கினாங்களா (இந்த இடத்தில் என்னை ஒருமுறை அவன் பார்த்துக்கொண்டதும், அச்சிறுமி உம் கொட்டியதும், ரொம்ப முக்கியம் என்று உள்ளுக்குள் நான் குமுறிக் கொண்டதும் சொல்லி மாளாது), அதான்.. அவங்க டீச்சர் கன்னத்து மேலேயே சூடு வச்சுட்டாங்க’ என்று முடித்தான். அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னை நோக்கி, ‘கொயந்த பாஸ்’ என்பது போலச் சிரித்தான். நானும் சிரித்துத் தொலைத்தேன்.
தலைவர் கவுண்டமணியின் கிளாசிக் ஒற்றை வரியைத் தழுவிய ஒரு வரி மட்டும் எனக்குள் எக்கோ மோடில் சரியாக மூன்று முறை ஒலித்தது.
No comments:
Post a Comment