Wednesday, July 17, 2013

விடுதலை!

ஒரு துளி நீர்,
உன் தொண்டைக்குழி சேரும்வரை..
தாகத்திற்கில்லை விடுதலை!

மண் சேர்ந்த விதை,
நீர் காணும் முன்..
செடிகளுக்கில்லை விடுதலை!

கிழக்கில் உதயமிருந்து,
மேற்கில் அஸ்தமனம் இல்லையேல்,,
இரவுக்குமில்லை விடுதலை!

பச்சிளம் பெண் சிசு,
பூப்பெய்தும் நாள் வரை..
பெண்மை பெறாது விடுதலை!

மூடிய விழிகள் இரண்டும்,
திறக்க மறந்துவிட்டால்..
உயிர் காணாது விடுதலை!

அறுவடை செய்தவனுக்கே
அரிசி கிடைப்பதில்லை..
வறுமைக்கு எங்கிருந்து விடுதலை!

அழுவது கோழைத்தனமென
மேகங்களும் நினைத்துவிட்டால்
மழைக்கு கிடையாது விடுதலை!

பிடித்தவளை பின்தொடர்ந்து
பிரியத்தை தெரிவிக்காவிடில்
காதலுக்குமில்லை விடுதலை!

அன்னைமடி தூக்கம்
அனுபவிக்க இழந்தவனுக்கு
ஏக்கம் தராது விடுதலை!

பத்து மாத தவத்தை
தாய்மை மறுத்துவிட்டால்
உனக்கும் எனக்குமேயில்லை விடுதலை!

பாதுகாப்பென்ற பெயரில்
கம்பிக்குள் அடைத்துவிட்டீர்கள்
இங்கு கடவுளுக்கேயில்லை விடுதலை!

அவனும் ஓர் நாள்
கைவிடத்தான் போகிறான்..
கிடைக்குமன்று உலகிற்கே விடுதலை!

பி.கு: பல வருடங்களுக்கு முன் எழுதியது. எதையோ தேடப் போய் எதுவோ கிடைத்தது என்று சொல்வார்களே, அப்படிக் கிடைத்தது… அப்படியே பதிவிடுகிறேன்.. :)

Friday, July 12, 2013

கடிந்து கொல் காதலே – II

ரணங்களுக்கு மத்தியில்
பிறந்திட்ட பிணம் ஒன்று,
வார்த்தைக் கழுகுகளுக்கு மெல்ல
இரையாகிக் கொண்டிருக்கிறது!

அலகுகள் கொத்திய மிச்சமாய்
ஒரு இதயம்,
அழுகிய நிலையில்
அழுது புரள்கிறது!

காற்று வெளியேற்றப்பட்டதால்,
உடலின் மூலை முடுக்குகளில்,
வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு,
அவ்வழு குரல் எதிரொலிக்கப்பட்டு வருகிறது!

நால்வறைகள் கொண்ட சதைப்பிண்டம்
நார் நாராய்க் கிழிக்கப்பட்டப் பிறகும்,
ஒரு அறையின்
ஒரேயொரு பகுதி மட்டும்
சேதம் அதிகமில்லாமல்
இன்னமும் பிழைக்கிறது!

உறுதியாக இருப்பதால் அதை
கல் என்றுச் சாடுகிறார்கள்!
ஹும்ம்.. கல்லாக இருந்திருந்தால்
சுவர்கள் எதற்கு
இரத்தம் சிந்தப் போகின்றன?

உள்ளே பாதுகாக்கப்படும் பொக்கிஷத்திற்கு,
வெளியில் நடக்கும் தியாகம்
அந்த ரணம்!

அது புரியாமல்,
மரணத்தின் அறிமுகத்திற்கு
ஏற்பாடு செய்கிறது
எதிர் மனம்!

அவன் செய்த பாவத்திற்குப்
பிறந்த பறவைகள்,
இவற்றைச் சொல்லிக் குற்றமில்லை!

அழுதலும், அழுகுதலும்,
இறுதியில் அழிதலும்,
நெற்றியில் எழுதப்பட்ட விதி போலும்!

“எதைக் கொண்டு வந்தாய்
எடுத்துக் கொண்டு போவதற்கு?”
கண்ணீர் கொண்டு வந்ததாலோ என்னவோ
அதோடே திரும்பிப் போகிறான்!!

Wednesday, July 10, 2013

இரக்கம் – அகராதிகளில் மட்டும்..

குரங்கிலிருந்து
மனிதன் வந்தானா?!
நம்ப முடியவில்லை..!
குரங்கிற்கு தான்
இரக்க குணம் அதிகமாச்சே!!

o0o

அன்று..
சாலை விபத்தில்
அடிபட்டவனை,
தூக்க மறுத்துவிட்டேன்!
ஒரு வேளை..
எனக்கு
மனமில்லையோ??!!
அவன் இறந்துவிட்டான்
என்ற செய்து கேட்டதும்
தூங்க மறந்துவிட்டேன்!!
பரவாயில்லை..
மனசாட்சியாவது இருக்கிறதே!!

o0o

காலில் அடிபட்ட,
நாய்க்குட்டி ஒன்று
வலியால்
நொண்டி நடக்கிறது!
நமக்கே உதவ
யாருமில்லை..
நாய்க்கு எங்கிருந்து?!
.
.
நக்கிக்கொள்கிறது!!

Tuesday, July 9, 2013

பங்குச் சண்டை!!

அப்பத்தா இறந்துவிட்டாலென
அலறலும் இல்லை!
அய்யோ.. அம்மாவென யாரும்
பதறவும் இல்லை!

உற்றார் உறவினரென
ஒன்று கூடினர்!
ஓரிரு நாழிகைக்கு மட்டும்
ஊன்று தேடினர்!

பாசம் காரணமாகக்
கண்கள் துளி விட்டனவோ..
பொய்யோ மெய்யோ அவை
சரியாய் சொட்டினவே!

மாலை மரியாதைகளெல்லாம்
பாதங்களில் சமர்ப்பணம்!
இந்த கலியுகக்காலத்திலும்
நடப்பதவள் கொடுப்பினம்!

எழவும் கூடிட இங்கு
‘இலை’ விரித்து ஆடுகிறது!
இரவும் ஓடிட சீட்டு’கள்’
பாய் விரித்து புரள்கிறது!

பிணத்திற்கு துணையென்று
வட்டமிட்டு அமர்ந்துவிட்டு..
வெற்றிலை அரைத்தவாறே
வெட்டிக்கதை ஏனோ.. பெண்கள்!

வாய்க்கரிசி போடும்போது மட்டும்
மாரில்தட்டி அழுதுவிட்டு..
அந்த பெண்ணரசி போகும்போதே
மொத்த துக்கமும் தூரப்போகுதே..!

எமன் வந்து அழைத்ததால்
சென்றாலோ.. பிள்ளை,
எவனும் வந்து அனைக்கவில்லை
எனச் சென்றாலோ..?!

உண்மை நிலை
அறிவதற்குள் ஊதிவிட்டார்கள்..!
எரியும் சூளை
அனைவதற்குள் திரும்பிவிட்டார்கள்..!

போனது போகட்டுமென
நினைத்தார்களோ என்னவோ..
பொன்னும் பொருளும் அதற்குள்
பிரிவைக் காண்கிறது..

பங்குச் சந்தை சரிவெல்லாம்
ஒரு பக்கம் இருக்கட்டும்..
‘பங்குச் சண்டை’ சரியுமா?!
இறைவனுக்குத்தான் வெளிச்சம்!