Friday, April 19, 2013

கடிந்து கொல் காதலே - I

என் இதயம், ஏற்கனவே
பல கீறல்களைச் சுமந்து துடிக்கிறது!

என் வலிகளுக்கு இதமளிக்க,
ஓரிடம் கிடைத்துவிட்டதாக நினைக்கையில்..
உன் உள்ளங்கை வெப்பம்,
அவ்வப்போது சுட்டுவிடுகிறது!

பழைய கீறல்களுக்கு மேல்
புதிதாய்த் தழும்புகள் வரையப்படுகின்றன!!

மருந்து தடவுமென நினைத்த விரல்கள்
மறுமுனையில்,
முகம் திருப்பிப் படுத்துக் கொள்கின்றன!

துடிப்பு குறைந்து கொண்டே வருகிறது!

இரத்த குழாய்களுக்குள் அழுத்தம்
அதிகரித்துக் கொண்டே போகிறது!!

உயிர்த்தெழ முடியுமா
என்ற பயம் வேற தொற்றிக்கொள்கிறது!

இறக்கவும் தெரியாமல்,
இயங்கவும் முடியாமல்,
என் இதயம் படும் அவஸ்தைக்கு..
‘இருக்கிறான்!’ என்று எல்லோராலும் நம்பப்படும்
இறைவனை நாடுவதைத் தவிர
வேறு வழி புலப்படுவதில்லை!!

கை கூப்பி வேண்டுகையில்,
என் மூடிய இமைகளின் இடுக்கிலிருந்து
கசியும் ஒவ்வொரு கண்ணீர்த்துளியும்,
உன் மடியில் படுத்தால் கிடைக்கும்
அரவணைப்பை உணர்த்திவிட்டு,
என் கண்ணங்கள் மேல் காய்ந்து போகிறது!!

Thursday, April 18, 2013

பிரிவு!!

உன்னை விடுத்து
விலகி இருக்க வேண்டிய
கட்டாயத் தருணங்களில்..
உனது கோபம்,
கொஞ்ச நேரத்தில்
அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிட்டு,
முதுகு காட்டி நின்றுவிடுகிறது!

பின்னிருந்து கட்டித் தழுவி,
“எனக்கும் கடினம்தானடி!” என
கதறி அழுதிட என் மனமும் முற்படுகிறது!

ஆனால் ஏனோ..
ஒவ்வொரு முறையும்
எனை தடுத்துக் கொள்கிறேன்..!

அக்கணம்,
அங்கு பிறக்கும் நிசப்தம்..
உனது கோபத்திற்கும்,
எனது வலிக்கும்,
மருந்து தடவி விட்டு..
ஓர் ஓரமாய் அதுவும் அமர்ந்து கொள்கிறது!!

மனைவியாதல்!!

நேரமாகி வீடு திரும்பும் இரவுகளில்,
எப்போதாவது நீ..
அசந்து தூங்கியிருப்பாய்!!

வெளிச்சமோ.. சின்ன சத்தமோ..
உன்னை தொட்டிறாத வகையில்,
உடைகளை மாற்றி,
உனதருகில் வந்து படுத்துக் கொள்வேன்!

அதிகபட்சம் ஒரு நொடி..
உனது கைவிரல் என் நெஞ்சை வருடி,
உன் உதடுகள் என்னை கேட்டு விடும்..
“சாப்டியா டா?” என்று.

அங்கு தொடங்கி..
ஒரு சொல்..
ஒரு முத்தம்..
மீண்டும் ஆழ்ந்த உறக்கத்தில் நீ!!!