Tuesday, November 17, 2015

காதல் மின்னல்!

சாலையைப் பிரித்திருந்த
அடைமழை நிமிடங்களில்,
ஒருபுறம் நான்..
எதிர்புறம் நீ..

யாருக்கானப் பேருந்து முதலில் வந்தாலும் சரி,
உனைக் காண அனுமதிக்கும்
நிச்சயமில்லா மறு தருணத்திற்காக
நான் காத்திருக்க வேண்டியதுதான்!

உன்னையும் என்னையும்
இப்படி எதிரெதிர் திசையில் நிறுத்தி
வேடிக்கை பார்க்கும் விதியை
வேறொரு நாளில் நான் கட்டாயம்
பழி தீர்த்துக் கொள்வேன்!

இப்போதைக்கு..

நீயும்..
உன் உதட்டு நிறக் குடையும்..
இம் மாமழையும்..
இந்த இடத்தை விட்டு நீங்காமல்
என்னுடனே இருந்துவிடுங்களேன்!!

உன் முக லட்சணமோ,
இடை வளைவோ,
குளிரில் சிலிர்க்கும்
உன் மெல்லிய தேகமோ,
யாவுமே மங்கலானக் காட்சிகள் தான்!

எனினும்..

அவ்வப்போது..

எனது இருப்பை
உறுதிப்படுத்திக் கொள்ளும்
உன் கூரிய கண்கள் மட்டும்..
மழை விரித்த அடர் திரையைக்
கிழித் தெறியும்
அழகிய காதல் மின்னல்கள்!