Tuesday, June 25, 2013

திடீர் சாமி!

எனை பெற்ற மண்ணுக்கும்,
அவள் தோழிக்கும்
பத்து மைல் தூரம்!
தினமும், வேலையாக
இப்பாதையைக் கடக்கிறேன்!

இன்று, எனக்கே ஆச்சர்யம்!
காரணம்.. ஓர் திடீர் சாமி!
அதுவும்.. ஊரிலிருந்து கிளம்பிய
ஆறாவது மைலில்!
நேற்று வரை இல்லையே, இன்றெப்படி??
மூளைக்குள் முடிச்சுகள்
முடியத் தொடங்கின!

வியப்பில் ஒருவனை
விழித்து விசாரித்தேன்!
விழுந்து விழுந்து சிரிக்கத்தான்
அவன் பதிலுக்கு விவரித்தான்!

வடக்கில் சூறாவளியாம்!
இடித்த இடியில்
இமயமே பெயர்ந்ததாம்!
உச்சிப் பாறை ஒன்று
காற்றோடு வந்ததாம்!
நான் கல்லல்ல கடவுளென
அதுவே சொன்னதாம்!
பாறையில் தேங்கியிருந்த
நீர் தான் வழிந்து,
மழையாய் பெய்து
நேற்றிங்கு நிலத்தை நனைத்ததாம்!

இதென்னடா வேடிக்கையென நினைப்பதற்குள்,
‘உங்களுக்கு விவரமே தெரியாதா..?
ஓ! நேற்று ஞாயிறுல்ல..
அதான் தெரியல..!’
என்று முடித்தான்.

அட பாவிகளா..!
ஞாயிறு என்றால்
வேலைக்குத்தானடா விடுமுறை..
மூளைக்குமா விடுமுறை??
என்ன பேசுகிரீர்கள்..?
வடக்கில் அடித்த சூறாவளிக்கு
தெற்கிலென்னடா வேலை??
உங்களிடம் என்ன சொல்லி
புரிய வைப்பேன்..
இது பல மைல்கள்
தாண்டி வந்த சாமியல்ல,
ஒரு மைல் கல்
மாண்டு வந்த சாமியென்று!

ஒருவன் அங்கு
மூளை இறந்தும்
இருதயம் அளிக்குறான்!
நீங்களோ இங்கு
மூளை இருந்தும்
இறைவன் பெயர்
சொல்லி அழி(க்)கிறீர்..!

ஒன்று மட்டும் நிச்சயம்..
மூடநம்பிக்கைக்கு ஆஸ்கர் வழங்கினால்
மொத்தமும் உங்களுக்குத்தான்..!

Tuesday, June 4, 2013

ஐ லவ் யூ!!

எனக்கு நீதானென்பது,
நான் பிறக்கையிலேயே
தீர்மாணிக்கப் பட்டிருந்தாலும்,
முறையே..
தாம்பூலங்கள் கைமாற்றப்பட்டு,
நேற்றோடு ஒரு வருடமென்கிறது நாள்காட்டி!
நினைத்துப் பார்க்கையில்,
நமது சந்திப்பும்.. சங்கமிப்பும்..
விதியின் எழுத்துப்படி,
வெகுச் சிறப்பாகவே இயக்கப்பட்டிருக்கின்றன‌!!

அதுவரையில் நான் கேட்டிறாத‌ ஒரு பெயர்,
என் காதுகளுக்குள்
காதல் தூவிச் செல்லுமென‌
ஒருபோதும் நினைத்ததில்லை!
ஆனால்.. நடந்தது!!

உன் புருவத்தை உயர்த்தி,
நீ முறைப்பது புரிகிறது..!
பெயர் மட்டுமே காரணமெனச்
சொல்லிவிட முடியாது..
அது வெறும் தொடக்கம்!
காதலிக்குத் தேவையானக் கண்களும்,
மனைவிக்குத் தேவையான அழகும்,
உன்னிடம் இருந்ததில்,
நான் சற்றுச் சரிந்ததென்னவோ
உண்மை தான்.. ஒப்புக் கொள்கிறேன்!

உனது இருக்கையில்,
நான் கிழித்துப் போட்டக்
காகிதத் துகல்களுள்
ஒழிந்திருந்தக் கள்ளத்தனம்..
அவற்றை ஒன்று விடாமல் சேக‌ரித்து,
எனது மேஜை மேல்,
நீ தூவிச் சென்றபோது..
அங்கு காதலாய்க் கொட்டிக் கிடந்தது!!

அலுவலகத்தில் இருக்கும் நேரம் பற்றாதெனப்
பேருந்தில் ஒன்றாய் வீடு திரும்புவது,
குறுஞ்செய்திகள் பரிமாற்றிக் கொள்வது,
இரவு முழுக்க அலைபேசி மூலம் இணைவது,
வாரக்கடைசியைக்கூட விட்டு வைக்காமல்,
கைகோர்க்காதக் குறையாக ஊர்ச் சுற்றுவதென‌
அத்தனை நிகழ்வுகளும்,
“இது காதல் தான்!” என்று அடித்துக் கூறியபோதும்,
“நான் செய்வதெல்லாம் நட்பு!
நட்பைத் தவிர வேறேதுமில்லை!!”
எனப் பொய்ப் பிரமானம் செய்தேன்.
ஒரு வகையில்.. அதுவும் காதல் தான்!
ஒப்புக் கொள்ள முடியாதக் காதல்!!

இந்த ஒரு வருடத்தில்,
உன்னை மகிழ்வித்தத் தருணங்களுக்காக‌,
நான் பெருமை படப்போவதில்லை!
ஆனால்..
உனக்கு வலிகளைக் கொடுத்த‌
நேரங்களை எண்ணி
சங்கடப் படுகிறேன்!!

இதுவரை சொன்னதையே
இன்றும் சொல்கிறேன்..
நான் தவறுகள் நிறையப் புரிவேன்!
உடன், ஏற்க மறுப்பேன்!
உனது கோபங்களுக்குக் காரணமாவேன்!
உன்னைக் கடிந்துக் கொள்வேன்!
ஏன்.. ஓர் நாள் பேசாமல்கூடப் போவேன்!
ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்..
நானும்..
உன் மீதான எனது காதலும்..
என்னுயிர் பிரியும் வரை,
உன்னை விட்டு விலகுவதாயில்லை!!