Monday, September 30, 2013

ராஜா ராணி!!

கடந்து மூன்று நாட்களாய் முகப்புத்தகத்தின் எனக்குத் தெரிந்த பெரும்பாலான சுவர்கள் மீது ஒரே காதாலாய் பூசப்பட்டிருக்கிறது.

சிலர், வீட்டின் பின்புற புழக்கமில்லா அறையில் பழைய தட்டுமுட்டுச் சாமான்களோடு போட்டு வைத்த தங்களின் காதல்களை எல்லாம் தேடி எடுத்து, யாரேனும் பார்க்கிறார்களா என்ற விழிப்புடன், தூசு தட்டி, கண்கள் ஈரம் கொள்ள, சில நிமிடங்கள் கட்டித் தழுவியிருந்தார்கள்.

நிஜத்தில் இறந்திருந்தாலும், அவரவர் நினைவுகளில் இன்னும் அந்தக் காதல்கள் எல்லாம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதற்குச் சாட்சியாய் ஒரு சில முத்தங்கள் கூட அவற்றின் மீது பதிந்திருந்தார்கள்.

காதலிடம் போராடித் தோற்ற ஒரு சிலர் இம்முறை ஒரு வெற்றிக்குத் தங்களை தயார் படுத்தத் தொடங்கியிருந்தார்கள்.

இன்னும் ஒரு சிலர், கல்யாணம் குழந்தைகள் எனக் கண்ட பின்பும் காதலின் ‘கா’ கூடத் தெரியாமல் இதுவரை வாழ்ந்துவிட்டோமே என வெட்கித் தலை குனிந்திருந்தார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக வீன்வாதத்திற்காவது காதலை வம்புக்கு இழுக்கும் சிலரும்கூட, காதல் மோதி கவிழ்திருந்ததோடு இல்லாமல், அவர்களைத் தட்டி எழுப்பிப் பார்த்தபோது, காதலுக்கே உரித்த பாணியில் முகம் முழுக்கப் பற்கள் கொண்டு வழிந்து கொண்டிருந்தார்கள்.

ராஜாராணி, காதலை காதலாகவே கொடுக்க முயற்சித்திருக்கும் ஒரு படம்.

Monday, September 23, 2013

முஜே கடுப்பு ஆத்தா ஹை!!

‘ஷேம் ஷேம் பப்பி ஷேம்’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவதற்கான ஆர்த்தத்தை,
சனிக்கிழமை ஆஃபிஸ்.. ஷேம் ஷேம்!

ஞாயிறும் என்றால் அது பப்பி ஷேம்!!

என்று நேற்றிரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பு வழியில் தான் நொந்துக் கொண்டேன். “உனக்கென்னயா.. சாஃப்ட்வேர் கம்பெனி வேல, சும்மா ஜம்முனு இருக்க!” என்று இனி யாராவது சொல்லட்டுமே, குமட்டிலேயே குத்துகிறேன்.

மெய்யுணர்தல் 3

1947-ல் ஆங்கிலேயர்களிடமிருந்து போராடிப் பெற்ற விடுதலையை எழுபதுகளில் தொடங்கி மொத்த மேற்கத்திய நாடுகளுக்கும் பிரித்துக் கொடுக்கத் தொடங்கிவிட்டோம் என்பது, விடுமுறை நாட்களில் அலுவலகத்திற்குப் பணிக்கப்படும் ஒவ்வொரு முறையும் தவறாமல் நெஞ்சை உருத்துகிறது. குண்டு துழைத்த காலம் போய் இன்று ரூபாய் இழைக்கிற அசிங்கம் வரைக்கும் அதே அடிமைப் பிழைப்பு அப்படியே தொடர்கிறது என்பதை நம்முள் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்.

Friday, September 20, 2013

மெய்யுணர்தல் 2

நானும் பல காலமாகக் கவனித்து வருகிறேன். நான்கு வரிகளுக்கு மிகாமல் எழுதப்படும் கவிதையைப் படிக்க நாற்பது நபர்கள் மிகச் சுலபத்தில் கிடைக்கும் இதே உலகில், நாற்பது ஏன் இருபது வரிகள் மீறினாலே ஒரு சில கவிதைகள் காண்பாரற்றுக் கிடக்கும்படி ஆகிவிடுகிறது. அப்படியே வாசிக்கும் ஒரு சிலரும், நுனிப்புல் மேய்வது போல, அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவரவரை ஈர்க்கும் சில வார்த்தைகள் மட்டும் தேர்ந்தெடுத்துக் கொய்தெடுத்துவிட, கவிதையின் உருவம் சிதைவதோடு அங்குப் படைப்பின் நோக்கமும் உயிரிழக்க நேரிடுகிறது. சிறுகதைகள், நாவல்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் இதே நிலை தான். வாசிப்போர் எண்ணிக்கை, படைப்பின் நீள எதிர் விகிதத்திலேயே அமைவது, இலக்கியம் மீதான ஏதோவொரு பூர்வ ஜென்மப் பகையை, கணிதம் இப்படித் தீர்த்துக் கொள்கிறதோவென எண்ண வைக்கிறது.

Thursday, September 19, 2013

மனித நேயம்!!

தனது கடையில் இருந்து,
ஒரே ஒரு பன்-ஐயும்
கொஞ்சம் எச்சில் டீயையும்
திருடிச் சென்ற சிறுவனை விரட்டி
ஒட்டம் பிடித்த டீக்கடைக்காரனுக்கு,

அவன் கடை வாசலின்
செத்தச் சிகரெட்டின் மிச்சங்களை
மண்ணுக்குள் மிதிக்கப்படும் இடத்திலிருந்து,
நூறாவது அடியில் காணப்பட்ட
பாழடைந்த குப்பைத் தொட்டிக்குப் பின்னால்,

பயந்து.. பசித்துப் போய் ஒதுங்கியிருந்த
அரையடி உயரயமுமில்லா ஒரு நாய்க்குட்டிக்கு,
டீயில் நனைத்த வெந்த மைதா கொண்டு
அந்தச் சிறுவன்
உயிர் ஊட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும்,

போன வாரக் குளிர் மழைக்கு ஒதுங்கி
ஒரு டீத் தண்ணிக்குப் பிச்சை கேட்டு
தன் கடைக்கு முன் நடுங்கியபடி கை நீட்டிய
வயது முதிர்ந்த ஒரு கிழவியை
திட்டி அனுப்பியது நினைவிற்கு வந்து,

அதுவரை விரைந்த கால்கள் இரண்டையும்
நொடியில் உறைந்து போகச் செய்து
குற்றவுணர்ச்சியில் முக்கியெடுக்கப்பட்ட கையால்
அவன் கன்னத்தில் ஓங்கி அறைகிறது!

முகம் வியர்த்தபடி முழி துடைத்தபடி
கடை திரும்பிக் கொண்டிருந்த அவனுக்கு,
தன் கடையின் ஒரு டீயின் விலை
சுத்தமாய் மறந்து போயிருந்தது!

Monday, September 16, 2013

கருணைக் கொலைகள்.. தொடரும்!!!

இதயத்தில் ஏற்பட்ட வலி ஏனோ
தொண்டைக்குழியை நிரப்புகிறது!

வயிற்றுச் செதில்களை,
உள் சுரக்கும் அமிலம்
அரிக்கிறதெனத் தெரிந்தும்,
உணவுக்கு வழி மறுக்கப்படுகிறது!

குரல்வலையொட்டி ஒழுகிக் கொண்டிருந்த
வலி கொஞ்சம் துடைத்தெடுக்கப்பட்டு,
செல்லரித்த இடங்களிலெல்லாம்
மெல்லப் பூசப்படுகிறது!

கீறப்பட்ட இடத்தில் தடவிக்கொள்ளப்படும்
ஒரு போதைத் தூள் போல,
உடலெல்லாம் பரவி
மொத்த உயிரையும் தன் கட்டிற்குள் வைக்கிறது
அந்த ராட்சச வலி!

கண்கள் மெல்லச் சொருகிக் கொள்ள
விரல்கள் காற்றில்
யாரையோ தேடுவது போலத் தெரிகிறது!

யாருமேயில்லா அவ்விடத்தில்,
சட்டென்று
ஒரு பெண்ணின் கழுத்து பிடிபடுகிறது!

உணர்ச்சிகள் இழந்த உதடுகள்
வார்த்தை பளு தாளாமல்
தானாகப் பிளந்து கொள்கிறது!

உள் எட்டிப் பார்க்கையில்
பாவம் நாவு
இறந்து கிடக்கிறது!

உறங்கிப் போகும் உயிரையெழுப்ப
இதயம் தன் கடைசி முயற்சி செய்கிறது!
லப் டப்!

சிறிது நேரத்தில்
அங்கு உயிர்
இருப்பது போலவும் தெரியவில்லை!
இருந்தது போலவும் தெரியவில்லை!

காதல் செய்யும்
கருணைக் கொலைகள்.. தொடரும்!!!

மெய்யுணர்தல் 1

பெற்றோர், நண்பன், காதலி, மனைவி, குழந்தைகள் இப்படியாக எல்லோரும் துணை தான். ஆனால், இவர்கள் எல்லோரும் உணர்வுகள் கொண்டவர்கள், காயப்படும் இயல்புடைய உள்ளம் படைத்தவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக எமனுக்குக் கடன் பட்டவர்கள், எப்போது வேண்டுமானாலும் தனிமையைப் பரிசளித்துவிட்டு கையசைத்து விடுவார்கள். உங்களின் விருப்பங்கள் பற்றியெல்லாம் யோசிக்கும் அளவிற்கு இங்கு யாருக்கும் நேரம் இருப்பதில்லை. உண்மையில், நேரம் கொடுக்கப்படவில்லை.

சில சமயங்களில், நம்மையும் மீறி, நாமே அறியாமல், நாம் சுயநலமாக நடந்து கொள்வதுண்டு. அப்படி நான் செய்தது தான் இந்தத் தமிழ் மீதான என் காதல் என நினைக்கிறேன். எப்படி யோசித்துப் பார்த்தாலும் இரண்டே காரணங்கள் தான் தோன்றுகிறது. ஒன்று, மொழிக்கு உயிர் வரையறை கிடையாது, எனது விருப்பமின்றி என்னை எப்படியும் பிரியாது. இரண்டு, தனிமையை என் விருப்பத்திற்கு மாற்றியெழுத எனக்கு ஒரு துணை. போதுமே!

Friday, September 13, 2013

நன்றியுடன் காகிதம்!

ஒரு காகிதம், பேனாவிற்கு எழுதும் கடிதமாகப் பார்க்கவும்.

கிழிபடும் என்னை வழிபடச் செய்தாய்!
சுவாசிக்க வைத்தாய்..
பிறர் வாசிக்கவும் வைத்தாய்!

கவிகளின் ஒரு கையாய்,
அறிஞரின் மறு கைபோல்,
எழுத்தாளரின் உயிர்ரேகையே..
வியப்பளிக்கும் உன் வாழ்க்கை!

மேதைகளின் மேஜைகளில்
நீங்கா இடம் உனக்கு!
பாறையோ.. பனிச்சிலையோ..
தடம் மாற்றும் திறனிருக்கு!

நித்தம் நித்தம் உனக்கு யுத்தம் யாருடனோ?!
இரத்தச் சிதரல்களாய்
என் மேல் எழுத்துக்கள்!

உன் கூரிய உதடுகள் குத்தும் முத்தம்..
சத்தமின்றி என் மேல் சரித்திரம் படைக்குதே!

நீல இரத்தம் சிந்தும் இலட்சியவாதியே..
என் நிலை நிமிர்த்தத் தான்
உன்னுடல் சாய்க்கிறாயோ?!

எதிர்பாரா உதவிக்கு நீயே இமயம்!
மறவா பண்புக்கு நானோர் உபயம்!!

                                                        என்றும் நன்றியுடன்,
                                                        காகிதம்.

Thursday, September 5, 2013

அனாதை!

தவழத் தொடங்கும் முன்,
தாயை இழந்தவனுக்கு மட்டுமே தெரியும்..
அனாதை என்பதன் முழு அர்த்தமும்!

o0o

‘உயிர்’ எழுத்துக்களை,
மறந்துவிட்ட பிரம்மன்!
எழுத்துப்பிழையாய்
இவன்!

o0o

நாத்திகர்களில் பாதிபேர்,
அனாதையாகக்கூட இருக்கலாம்..
தாயே இல்லாத போது,
சாமி எங்கிருந்து
என்ற எண்ணமோ என்னவோ!

o0o

காதலுக்கு பரிசாய்,
அழகாய் ஒரு குழந்தை!
அதில் கள்ளம் கலப்பதால்,
இனாமாய் ஒரு பட்டம்!

o0o

பெற்று விடுத்த ஜோடிக்கும்
ஈரம் இல்லை!
பெயர் கொடுத்த கோடிக்கும்,
ஈரம் இல்லை!
இடையில்..
அசிங்கப்பட்டு அழுவதெல்லாம்..
இந்த அப்பாவி நண்பன் தான்!!

o0o

உடற்ச் சுகம் தந்த
முதல் சோகம்!

o0o

ஒரு அனாதையைத் தத்தெடுக்கும் முன்,
உன் நாவினை தானம் கொடுத்திடு!
இல்லையேல்..
என்றாவது ஒரு நாள்,
கோபத்தில்.. அது
உண்மையை உளறிவிடும்!

o0o

ஒரு அனாதை இல்லத்தில்,
விவரமறியா குழந்தைகள் கூட,
விளையாட்டாக பேசிக் கொள்கின்றன..
“நீ அம்மா.. நா அப்பா..
இது நம்ம கொழந்த!” என்று
குப்பைத் தொட்டிகளில்
போடும் முன்பாவது
உங்களுக்கும் இதுபோல
தோன்றிருக்கலாம்..!

Tuesday, September 3, 2013

நானும்.. என் அவளும்!!

என் திருமண அழைப்பிதழுக்காக நான் எழுதியது.

“என் வாழ்வின்
இரண்டாம் அத்தியாயம்,
இங்கே தொடங்குகிறது!

பிறருடையச் சரிகளிலும்
எம்முடையச் சரிவுகளிலும்
கற்றுக் கொண்டவையோடு,
இந்த பயணத்தின் முதல் அடி,
இதோ..
எடுத்து வைக்கிறோம்..
மிகக் கவனத்தோடு!!

இந்த பூலோகத்தின்
வெவ்வேறான இரு புள்ளிகளை,
கோர்க்க நினைத்த
ஒரு விஞ்ஞான நிகழ்வாகவே..
எங்களின் முதல் சந்திப்பினை
அறிமுகப்படுத்த விரும்புகிறோம்!

பிஞ்சு குழந்தைகள்,
நடக்க முயற்சிக்கும் தொடக்கத்தில்..
தத்தி.. துவண்டு.. விழும்!
அப்படிப்பட்ட ஒரு மழலைக்கு,
ஒரே நேரத்தில்..
ஒரு பக்கம் நானும்,
மற்றொரு பக்கம் இவளும்,
விரல் கொடுத்து நடை பழக்கியது..
ஒர் ஆச்சர்யமான் இன்பம்!!

விழவிருக்கும் மூன்று முடிச்சுகளும்,
மேளச் சத்தமும்,
மங்கள அரிசியும்,
தங்களின் வருகையோடும்,
மனம் தொட்ட வாழ்த்துகளோடும்,
முழுமை பெறட்டும்!!

மிக ஆவலாய் எதிர்நோக்கும்..
நானும்.. என் அவளும்!! “

Monday, September 2, 2013

விவாஹக் கவிதை!!

என் கவிதைகளைக் கேட்டு வாங்கி விரும்பிப் படிப்பவர். இது அருமை, இதை இப்படி எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என உரிமையுடன் என்னுடன் பகிர்பவர். என் எழுத்துக்கள் மேல் என்னை விட அதிகம் நம்பிக்கை கொண்டவர். அவர் காதலித்து மணமுடிக்கும் அந்த தருணத்தைக் கொண்டாட அச்சிடப்படும் பத்திரிக்கைக்குக் கவிதை எழுதித் தரச் சொல்லி வாங்கியதோடு நில்லாமல், எங்கோ பிறந்து, இடையில் சில வருடங்கள் முன்பு தொடங்கி, உடன் பயணிக்கும் என்னை, அதே பத்திரிக்கையில் தம்பி எனக் குறிப்பிட வேண்டிய அவசியம் அவருக்கு யதார்த்தமாகவே பட்டிருக்கிறது. “ஒரு இளவரசியை கல்யாணம் முடிக்கப் போகிறேன். ஒரு கவிதை எழுதி கொடு!” என்று கேட்டார். நானும் எழுதினேன்.

“இன்று எனது உணர்வுகள் ஏனோ
பலநூறு வருடங்கள் பின்னோக்கிப் பறக்கின்றன.

என் கண்முன்னே மிளிர்கிறது,
ஒரு தெளிந்த குளம்.
நடுவிலே.. ஒரு அம்புஜம்.

என்ன இது எங்கிருக்கிறோமென
கொஞ்சம் சுதாரித்துக் கொள்ள முயல்கையில்,
அக்குளத்தின் மையத்திற்கு
நானும் இடம் பெயர்க்கப்படுகிறேன்.

மலர் கண்ட இடத்தில்.. ஒரு மங்கை!
அதன் பிம்பம் கிடந்த இடத்தில்.. நான்!
கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்குகிறது.

மிகவும் பரிட்சயமான அந்த முகம்,
பாண்டிய நாட்டு இளவரசிக்குச் சொந்தம்.
என் கண்களுக்குள் பார்த்தவள் கேட்கிறாள்,
“நீ.. சேர நாட்டவன் தானே?” என்று.

அந்த பிரம்மையில் இருந்து
விடுபட நினைக்கையில்..
சுற்றம் சட்டென்று மாற்றி அமைக்கப்படுகிறது.
ராஜ குல சுபமுகூர்த்தங்கள்
நடைபெறும் ஒரு அவையில்,
மணக்கோலத்தில் நான் அமர்ந்திருக்கிறேன்.
தூரத்தில்.. இளவரசி,
என்னை நோக்கி நடந்து வருகிறாள்!

கண்மூடித் திறக்கிறேன்..
நிகழ்காலத்தில் நிற்கிறேன்!
கையில் மலர் மாலை..!
அது வழியே என் காதலி முகம்..!
அட்சதை நிரப்பப்பட்ட ஒரு தாம்பூலத் தட்டில்,
ஒரு தேங்காய்..!
ஒரு தாலி..!
ஒரு அம்புஜம்..!

அட.. இன்றெனக்குக் கல்யாணம்!
வந்து விடுங்கள்! வாழ்த்துங்கள்!!”