Friday, October 9, 2015

புற்றுநோயை தூர வைக்கும் தூக்கம்

சூர்ய உதயம் மற்றும் அஸ்தமனத்தைச் சுற்றி இயங்க வேண்டிய உயிரினங்களில் மனிதர்களும் அடங்குவர். எட்டு மணி நேரம் தூக்கம் தானே, அது எப்பொழுது தொடங்கி எப்பொழுது முடிந்தால் என்ன என்று எண்ணி இரண்டு அல்லது மூன்று வரை விழித்திருந்துவிட்டு காலை பத்து பதினொன்று வரை தூங்கும் புத்திசாலிகளில் நானும் ஒருவன் தான். சரி இப்படிக் தூக்கம் கெட்டுப்போனால் என்ன ஆகிவிடப் போகிறது, மிஞ்சி மிஞ்சிப் போனால் தலை வலி வரும் என்று அலட்சியமாக இருந்து விடுகிறோம். ஆனால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை நாம் அதிமாக்குகிறோம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

Melatonin என்பது காரிருள் சூழ்ந்திருக்கும் வேளையில் நம்மில் சுரக்கும் ஒரு ஹார்மோன். அதன்படி பார்த்தால், அந்தக் காலத்தில், இரவு நேரங்களில் நம் மக்களுக்குள் இயல்பாகவே சுரந்திருக்கும். ஆனால் மின்விளக்குகளின் கண்டுப்பிடிப்பிற்குப் பிறகு, இருளின் நீளம் வெகுவாகக் குறைந்துவிட்டக் காரணத்தாலும், இரவு வாழ்க்கையென்றொன்றை நாம் பெருமையாக நினைக்கத் தொடங்கிய விபரீதத்தாலும் Melatonin தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதிலும், இந்த ஸ்மாட்போர்ன்கள் வந்த பிறகு, சொல்லவே வேண்டாம். இரவில் கண்விழிப்பதென்பது ஒரு தொற்று நோயாக மாறியிருக்கிறது. நண்டுச் சிண்டுகளெல்லாம் வாட்ஸ்ஆப் ஃபேஸ்புக்கால் தூக்கம் தொலைத்திருக்கின்றன. இது ஆரோக்கியமானதே அல்ல என்கிறது மருத்துவ உலகம்.

Melatonin ஹார்மோனில் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி அடங்கியுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறனர். ஆரம்ப நிலை புற்றுநோயாளிகள் இந்த ஹார்மோனை வாய்வழி மருந்தாக உட்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறார்கள். அப்படியிருக்க, நாம் தூங்குவதைத் தவிர்ப்பது அல்லது தாமதப்படுத்துவதன் மூலம் இந்த ஹார்மோன் சுரப்பிகளோடு மறைமுகமாக விளையாடத் தொடங்கியிருக்கிறோம். மேற்கத்திய நாடுகளில் உறக்கப் பிரச்சனைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ ஆலோசனைகளில் மிக முக்கியமானதொன்று, கருப்பு கண்ணாடிகள் அல்லது Eye Mask களை பயன்படுத்தச் சொல்வது தான். அது இருளை உறுதிப்படுத்தி Melatonin உற்பத்தியைச் சீர்ப்படுத்தும் என்பதுதான் அதன் பின்னனி. ஆனால் அதைப்பற்றிய விழிப்புணர்வு கொஞ்சம்கூட இல்லாமல், இரவு வாழ்க்கையொன்றை நமக்கு நாமே வகுத்துக்கொண்டு, புற்றுநோய்க்குப் பிள்ளையார்சுழி போட முயற்சிக்கிறோம்.

இது சம்மந்தமான, நீயா நீனா நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த டாக்டர் சிவராமனின் உரை அடங்கிய காணொளியை எனது ஃபேஸ்புக் பக்கத்தில்பகிர்ந்திருக்கிறேன். நேரமிருந்தால் பார்க்கவும்.

Wednesday, October 7, 2015

மெய்யுணர்தல் 10


இன்று காலை, வீட்டருகில் இருக்கும் ஒரு கடைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் ஒரு சிறுவன் தன் அப்பா முதுகில் உப்பு மூட்டையேறியிருந்தான். அவர்களும் வீட்டுச் சமையலுக்குத் தேவையான எதையோ வாங்க கடைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அந்த அப்பா கையில் தொங்கிய பாலித்தீன் கவரில் அப்படித்தான் ஏதோ தென்பட்டது. விஷயம் அதுவல்ல.

குளிரூட்டப்பட்ட BMW, Audi கார்களில் டிரைவர் ஓட்ட அதில் வெறும் பொம்மைகள் போல அமர்ந்து செல்லும் குழந்தைகளுக்கும், அடிக்கும் வெயிலில் இப்படி அப்பாவின் முதுகில் உணர்வுக்குவியலாக சிரித்துக் குலுங்கும் குழந்தைகளுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம். 

ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்வேன். பிறக்கும் குழந்தைகளில் எதுவும் தன் அப்பா பணக்காரனா ஏழையா என்பதெல்லாம் யோசிப்பதில்லை. நிச்சயம் அன்புமிகுந்தவனாக இருப்பான் என்ற ஒரே நம்பிக்கை தான் அவைகளுக்கு.


Monday, October 5, 2015

எங்கே போகிற தெந்தன் தேசம்!

பெற்றத் தாய் மீது கூட, தன் உத்தியோக அந்தஸ்தின் நிழல் பட்டுவிடக்கூடாது என்று மிக கவனிப்போடும் கண்ணியத்தோடும் இருந்த காமராஜர் வாழ்ந்த அதே மண்ணில் தான் இன்றைய அரசியலும் இயங்குகிறது என்று நினைக்கும் போது, இரண்டு விதமானச் சந்தேகங்களால் துளைக்கப் படுகிறேன். 

ஒன்று, காமராஜர் அப்படித் தான் வாழ்ந்தாரா என்ற சந்தேகம். 

மற்றொன்று, கொஞ்சம் பெரிது, காமராஜர் என்று ஒருவர் உண்மையிலே இருந்திருக்க முடியாமா என்ற சந்தேகம் அது. 

கொலைப் பழி சுமத்தப்பட்ட, உண்மையில் கொலை செய்த ஒரு குற்றவாளி, வரிசையாகப் பொய்ச் சாட்சிகளின் உதவியோடு விடுதலை ஆகும் போது, அந்த வழக்கை வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு, நிரபராதி (வழக்கு தொடுத்தவன் என வைத்துக் கொள்வோம்) மீது ஒரு வித கேவலமானச் சந்தேகம் எழும் பாருங்கள், அப்படிப்பட்டச் சந்தேகங்கள் இவை.

நியாய விலைக் கடைத் தராசின் பொருள் வைக்கப்படும் தட்டிற்கடியில் அந்நியாயம் ஒட்டிக் கிடக்கிறது. 

மத்திய அரசு, மாநில அரசு, ஆளுங்கட்சி, எதிர்கட்சியென தகுதிக்கேற்ற ஊழல் நடந்து கொண்டே தான் இருக்கிறது. 

பிறப்புச் சான்றிதழ் தொடங்கி இறப்புச் சான்றிதழ் வரை இன்னமும் பணத்தாள் கொண்டே தயார் செய்யப்படுகிறது. பத்திலும் இருபதிலும் ஆரம்பித்து இன்று ஆயிரங்களையும் லட்சங்களையும் கடந்து கோடிகள் வரை தொட்டு நிற்கிறது இந்த லஞ்சப் புழக்கம். 

பேசாமல், நடைமுறையில் இயங்குவதாகச் சொல்லப்படும் எல்லாத் துறைகளையும் இழுத்து மூடிவிட்டு, லஞ்சத்துறை, ஊழல்துறை என இரண்டே துறைகள் கொண்டு செயல்படலாம். 

இதையெல்லாம் மீறி, “இந்தியா மிளிர்கிறது” எனப் படிக்கும் சுவரொட்டிகளை எங்கேனும் காண நேர்ந்தால், 'குபுக்க்'கென்று சிரிப்பு வந்துவிடுகிறது.

'49-O'ஹோ

நமது ஊரில் நல்ல படைப்புகளுக்கு மரியாதையே கிடையாது. அந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கும் ஒரு மிக அவசியமான படைப்பு தான் ’49O’.

ஒரு பெரிய (நான் சொல்வது வியாபர ரீதியில்) நடிகர் நடித்திருந்தால் இன்னும் அதிகக் கவனம் பெற்றிருக்குமோ என்னவோ. ஆயிரம் தான் இருந்தாலும் கவுண்டமணியை காமெடியனாகத் தான் பார்க்கிறது தமிழ் உலகம். ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. இன்று அனல் பறக்க கதாநாயகர்கள் பேசும் பஞ்ச் வசனங்களின் சாரத்தை தொண்ணூறுகளிலேயே ஒரு துணை நடிகனாக அதுவும் காமெடியனாக தனக்கே உரிய நையாண்டியுடன் அனாயாசமாக பதிவு செய்தவர் கவுண்டமணி. அப்படி, காமெடியனாக நடிக்கும் போதே ஹீரோவாக ஜொலித்தவர், ஹீரோவாக நடிக்கும் படத்தில் சொல்லவா வேண்டும். பிண்ணியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில், தேர்தல் ஆணையத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் ஒரு புரட்சியை கவுண்டமணி தலைமை தாங்க, பத்தரிக்கையாளர்கள் அவரைத் தேடி வருகிறார்கள். அதில் ஒரு பத்திரிக்கையாளர், வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லையென்றால் NOTA பயன்படுத்தலாமேயென்று கேள்வி எழுப்புகிறார். அதற்குப் பதில் அளிக்கும் போது, ‘தேர்தலுக்கு முன் கருத்துக்கணிப்புனு ஒன்னு நடத்துறீங்க. இந்தக் கட்சிக்கு எவ்வளோ பர்சன்டேஜ், அந்தக் கட்சிக்கு எவ்வளோ பர்சன்டேஜ் னு கணக்குப் போடுற நீங்க, என்னக்காவது NOTA க்கு எவ்வளோ பர்சன்டேஜ் னு வெளியிட்டிருக்கீங்களா. NOTA வ நீங்களே இருட்டடிப்பு செஞ்சுட்டு, NOTA னு சொன்னா சாமானியனுக்கு NOTA வ பத்தி என்னமா தெரியும் னு பாயுறாரு. இதெல்லாம் தியேட்டரில் விசிலடிச்சு பார்க்க வேண்டிய காட்சி. ஒரு தவறை மறைக்க இன்னுமொரு தவறு புரிவது போல, NOTA இருட்டடிப்பைக் கேள்வி கேட்கப் போய் 49Oவும் பத்திரிக்கை உலகால் இருட்டடிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

முன்னமே சொன்னது போல, ஒரு பெரிய நடிகர் நடித்திருந்தால் அதிகக் கவனம் பெற்றிருக்கலாம். ஆனால் படம் பிரச்சனையில்லாமல் வெளியாகியிருக்குமா என்பது வேறு விஷயம். நாட்டில் ஜனநாயகத்தின் நிலையப்படி.

அதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடக்கும் இன்னுமொரு சுவாரஸ்யமான உரையாடல் தான் நினைவி்ற்கு வருகிறது.

சரி, NOTA ஜெயிச்சா என்ன ஆகும்?

மறுதேர்தல் வரலாம்!

அப்படி மறுதேர்தல் வந்தா, நாங்க நிராகரிச்ச வேட்பாளர்கள் நிக்க மாட்டாங்களா?

அது எப்படி சார் தேர்தல் ஜனநாயகமாகும்?

ஏன்மா.. ஒரு லட்சம் பேர் உணர்வுக்குக் கிடைக்காத ஜனநாயகம், வேண்டாம்னு சொல்ற நாலு வேட்பாளர்களுக்குக் கிடைக்குதுனா, அப்புறம் எதுக்குமா அந்தப் பொம்மக் கத்தி?

திரைக்கதையில் ஆங்காங்கே சின்னதாகச் சொதப்பியிருந்தாலும், வசனங்களில் கலக்கியிருக்கிறார் இயக்குனர் ஆரோக்கியதாஸ். உதாரணமாக, இவ்விரு வசனங்களை மட்டும் பகிர்கிறேன்.

“எவன தலைவன் ஆக்கணும்னு உங்களுக்கும் தெரியல, தலைவன்னா எப்படியிருக்கணும்னு அவங்களுக்கும் தெரியல, போங்கட டேய்!”

“உலகம் முழுக்கச் சொல்லலாம், வருங்காலத்த வாழ்றதுக்கு மாத்திர வரும்னு. ஆனா அந்த மாத்திரைய திண்ணுட்டு எத்தனக் காலத்துக்கு உயிர் வாழ முடியும். மண்ணுல விளையுறத திண்ணாதான் மண்ணு கடைசியில நம்மளத் திண்ணும். அத விட்டுட்டு மருந்து மாத்திரைய திண்ணீங்கனா அந்த மண்ணு கூட உங்கள திங்காது. வாந்தி எடுத்துரும்”

மொத்தத்தில், உழவையும் உழவர்களையும் கொன்ற இடத்தில் எழுப்பட்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் குற்றவுணர்ச்சியோடுப் பார்க்க வேண்டிய திரைப்படம் தான் இந்த ’49O’.