Friday, February 27, 2015

பாட்டி வடை சுட்ட கதை v27.0

ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்களாம். அந்தப் பாட்டிக்குச் சொந்தம் னு சொல்லிக்க யாருமே இல்லையாம். அந்தப் பாட்டிக்கு பசிக்கும் ல. புவ்வா வேணும் ல. காசு இல்லாம் புவ்வா எப்படி தருவாங்க. தர மாட்டாங்க ல. அதான் அந்தப் பாட்டியே வடை, அதான் ரவுண்டா நடுவுல ஒரு ஓட்டையோட இருக்குமே, நம்ம அம்மாக்குக் கூட ரொம்ப புடிக்குமே, அதச் சுட்டு வித்து, அதுல வர்ற காசுல அரிசி காய் எல்லாம் வாங்கி காலம் தள்ளிட்டு இருந்துச்சாம். தன்னோட குடிசைக்குப் பக்கதுல இருக்குற ஒரு மரத்துக்குக் கீழ உட்கார்ந்து தான் தினமும் வடை சுடுமாம். அப்படி தான் ஒரு நாள் காலையில, பாட்டி வடை சுட்டு சுட்டு ஒரு பாத்திரத்துல வச்சிட்டே வந்துச்சாம். அத மரத்துல் உட்கார்ந்திருந்த ஒரு காக்கா பாத்துட்டே இருந்துச்சாம். அந்தக் காக்காக்கு செம பசியாம். முந்தின நாள் நைட் அவங்க அம்மா புவ்வா ஊட்டும் போது ஒழுங்க சாப்பிடலையாம் அந்தக் காக்கா. நீ சமத்துப் பாப்பா ஆச்சே.

ஆவி பறக்க இருந்த வடையெல்லாம் பாத்ததும், காக்காக்கு நாக்குல எச்சி ஊறி ‘ந்யம் ந்யம்’ பண்ணுச்சாம். ரொம்ப நேரமா வடை சுட்டுட்டு இருந்ததுனால பாட்டி டயர்ட்ல லைட்டா கண்ணசந்துடுச்சாம். எப்படியாவது ஒரு வடைய நம்ம டேஸ்ட் பண்ணிடனும் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்த அந்தக் க்ரிமினல் காக்கா, இது தான் ரைட் டைம் னு சொல்லி மரத்தில இருந்து சொய்ங்ங்ங்குனு கீழ வந்து பாத்திரத்துல இருந்த ஒரு வடைய அலேக்கா வாயில் கவ்வி பறந்து போய் பக்கத்துல இருந்த இன்னொரு மரத்து மேல உட்கார்ந்துகிச்சாம்.

காக்காக்கு ஒரே குஷி. இன்னும் கொஞ்ச நேரத்துல வடைய சாப்பிடப் போறோம் னு. சரி சாப்பிடலாம் னு அது கடிக்கப் போகும் போது, ‘டக் டக் டக்’ னு யாரோ நடந்து வர சத்தம் கேட்டுச்சாம். கீழே குனிஞ்சு பாத்தா ஒரு நரி. மரத்து மேல இருக்குற காக்கவையும் அது வாயில இருக்குற வடையையும் அந்த நரி வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருந்துச்சாம். காக்காக்கு ஒரே பயம். ஏன் இந்த நரி நம்மள இப்படி பாக்குது னு. ஆக்ட்சுவலா.. அந்த நரிக்கும் செம பசியாம். அதுவும் முந்தின நாள் நைட் அவங்க அம்மா குடுத்த புவ்வாவ ஒழுங்கா சாப்பிடலையாம் (இந்த லைன் சொல்லும் போது மட்டும் என் பொன்னு ஒரு மாதிரி “பாசமா” பாத்தா.. அப்பா மேல ஆசை இருக்காதா பின்ன!).

எப்படியாவது காக்கா கிட்டயிருந்து அந்த வடைய எடுத்து சாப்டுறனும் னு டீப்பா யோசிச்சுதுல செம ஐடியா ஒன்னு கிடைச்சுதாம். காக்காவ பார்த்து,
“காக்கா காக்கா நீ எப்படி இவ்ளோ அழகா இருக்கே?” னு கேட்டுச்சாம்.

காக்காக்கு ஒரே கன்ஃப்யூஷன். நம்மளே கரி பூசின மாதிரி இருக்கோம். நம்மள போய் அழுகு னு சொல்றானே னு யோசிச்சுதாம். அதுக்குள்ள நரி மறுபடியும்,
“நீ ஒரு பிளாக் ப்யூட்டி” னு ஒரு ஐஸ் வச்சுதாம்.

காக்காக்கு நரி மேல டவுட் இருந்தாலும் அந்தக் கமெண்ட்டு காக்காக்குப் பிடிச்சுதாம்.

“நீ ரொம்ப நல்லா பாடுவியாமே.. என் ஃபிரண்ட்ல் எல்லாம் சொன்னாங்க.. எங்க, எனக்காக ஒரு பாட்டு பாடேன்” னு இன்னொரு பிட் போட்டுச்சாம் அந்தக் கன்னிங் நரி. காக்கா பாட வாய் தொறந்தா, அது வாயில இருக்குற வடை கீழே விழும் அதத் தூக்கிட்டு ஓடிறலாம்ங்கிறது நரியோட மாஸ்டர் பிளான். அது புரியாம நரி பேசினதுல மயங்கி அந்தக் காக்கா, ‘கா……’ னு பாட வாய் தொறந்துச்சு பாரு… வடை தொப்புக்கட்டீர்ர் னு கீழ விழுந்துடுச்சு. எப்படா வடை விழும் னு காத்துட்டு இருந்த நரி, ஒரே ஜம்ப் பண்ணி, வடைய ஏர்லயே பிடிச்சு, குடு குடு னு ஓடிப் போய்டுச்சாம்.

காக்காக்கு ஒரு நிமிஷம் என்ன நடந்துச்சுன்னே புரியலயாம். அந்நியாயமா வடைய பரி கொடுத்துட்டோமே னு ரொம்ப ஃபீல் பண்ணுச்சாம். இதுக்கு நடுவுல பாட்டி எழுந்து நடந்த எல்லாத்தையும் பாத்துட்டு இருந்திருக்கு. சோகமா உட்கார்ந்திருந்த காக்காவ பாத்ததும் பாட்டிக்கு பாவமா போய்டுச்சாம். ‘கா.. கா..’ னு அந்தக் காக்காவ கூப்டு, ஒரு வடைய சாப்பிடக் குடுத்துச்சாம் பாட்டி. காக்காக்கு ஒரே பப்பி ஷேம் ஃபீலிங் வந்துடுச்சாம். இப்படி ஒரு நல்ல பாட்டிகிட்ட போய் நம்ம திருடிட்டோமே னு ரொம்ப ஃபில் பண்ணி சாரி கேட்டுச்சாம். “பராவாயில்ல விடு. நீ என்ன ஏமாத்தி வடைய தூக்கிட்டு போன, இப்போ பாரு, அந்த நரி உன்ன ஏமாத்தி வடைய தூக்கிட்டு போய்டுச்சு. இதுக்கு தான் யாரையும் ஏமாத்த நினைக்கக் கூடாது. உனக்குப் பசியிருந்தா என்கிட்ட வந்து கேளு. நானே உனக்கு குடுக்குறேன்” னு அந்தப் பாட்டி சொல்ல, காக்கா கண்ணுல தண்ணியோட பாட்டி குடுத்த வடைய சாப்பிட……..

என் பொண்ணு “ம்ம்ம்மே…..” னு ஒரே அழ!

“ஏ தங்கம்.. ஏன்டா.. தூக்கம் வந்துடுச்சா.. தூங்கிடலாம் தூங்கிடலாம்!” னு நானும் என்னென்னவோ சமாதானம் பன்றேன்.. ம்ம்க்க்கும்..

அவ அழற சத்தம் கேட்டு அவங்க அம்மா கிட்சன் ல இருந்து ஓடி வந்து என்ன “பாசமா” நாலு வார்த்த கேட்டா பாருங்க.

அதுக்கு பதிலா, “நான் நம்ம பாப்பாக்கு சூப்பரா கதை சொல்லிட்டு இருந்தேன். அதுல அவளுக்கு அப்படியே தூக்கம் சொக்கிட்டு வந்துடுச்சு. உன்னக் கூப்பிடலாம் னு யோசிட்ட்ட்ட்ட்டே இருக்கேன், நீயே வந்துட்ட, யு ர் டூ ஃபாஸ்ட்..” அப்படினு சொல்லி முடிக்கிறேன், என்ன அவ “பாசமா” பாத்துட்டு இருந்தா. தட் சேம் “கொஞ்சம் க்ளோல் பண்றியா” லுக்.

“ஓகே!!” (இந்த இடத்துல தான் என் பொண்ணோட “பாச” லுக்கோட அர்த்தம் புரிஞ்சுது எனக்கு. தாய்க்கு மக தப்பாம பொறந்திருக்கா னு நினைச்சுகிட்டேன். ஆனா அவகிட்ட சொல்லல).

“நீ வா டா செல்லம்!” னு அவ கொழந்தைய தூக்கிக்கிட்டதும், “வே வே வ்யே வ்யே” னு ஹை பிட்ச்ல அவ பங்குக்கு ஒரு நாலு வார்த்த பேசிட்டு ஒரு வழியா அழுக நின்னுச்சு. எனக்கு இப்போ என்ன டவுட் னா, என் மனைவி என்கிட்ட சொன்ன அந்த நாலு வார்த்தைக்கும் என் பொண்ணு பேசின நாலு வார்த்தைக்கும் எதாவது சம்மந்தம் இருக்குமோங்கிறது தான்.

“ஏன் இப்படி கொழந்தைய டார்ச்சர் பண்றீங்க!”

Tuesday, February 24, 2015

மெய்யுணர்தல் 7

தவறுதல் மனித இயல்பு. அதை உணர்தல் மனிதக் கடமை.

செய்யும் தவறு எண்ணி வருந்தும் ஒவ்வொரு உயிருமே மன்னிக்கப்பட தகுதி பெறுகிறது. ஆனால் மன்னிப்புகள் அவ்வளவு சுலபத்தில் கிடைப்பதில்லை. சிலர் அலைகிறார்கள். சிலர் அழுகிறார்கள்.

மண்டியிட்டப் பிறகும் முகத்தில் எச்சில் உமிழப்படுகிற தருணங்களையெல்லாம் கடந்து வர வேண்டிய கட்டாயத்தில் சில உயிர்கள். விரக்தியின் கை ஓங்கும் இடமும் இது தான். விளைவு, சில உயிர்கள் உறவையும் சில உயிர்கள் உலகையும் விட்டு வெளியேறுகின்றன.

‘கல் நெஞ்சக்காரர்கள்’ என நமது திருப்திக்கு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். உண்மையில், இதில் பிறர் மீது எந்தத் தவறுமில்லை.

மன்னிப்பு கிடைக்காத இடத்தில் மன்னிப்பு கிடைக்காது எனத் தெரிந்திருந்தும் திரும்பத் திரும்ப தவறு புரிதல் யாருடைய பிரச்சனை? எந்த மாதிரியான ஒரு அலட்சியம்?

Friday, February 20, 2015

தேவதைகளின் இளவரசி – 6

நான் படுக்க என் மீதே,
எனது மார்புக்கும் இடுப்பிற்கும்
இடைப்பட்ட உடற்பகுதியை
ஆக்கிரமித்துப் படுத்துறங்க
கற்றுக் கொண்டிருக்கிறாள்
என் சின்னவள்!

கை எங்கும் சிக்கிக் கொள்ளுமோ..
தாடை எலும்பு தான் வலித்திடுமோ..
இந்தக் கவலைகள் எல்லாம்
எனக்கு மட்டும் தான்!

அவ்வப்போது கொஞ்சம் சோம்பலோடு
வெளியேறும் பெருமூச்சுக்கு மட்டும்
கொஞ்சமாய் அசைகிறாளே தவிர..

அவள் தொடர்ந்து.. ஆழ்ந்து உறங்குகிறாள்!!

ஏகோபித்த ஓகோபித்த இது ‘ரேட்டிங்’ மேட்டர்!!

பொறுப்பு துறப்பு:
இப்பதிவு மொத்தமுமே நகைச்சுவை கலந்து சிந்தனைக்கு மட்டுமே தவிர யார் மனதையும் புண்படுத்த அல்ல.. அல்ல.. அல்ல.

ஷ்ஷ்ஷப்பா… ‘ல் த கா சை யா’ மாதிரி ஆகிவிட்டது இந்த அப்ரெய்சலும் ரேட்டிங் மேட்டரும். “எனக்கு வந்துடுச்சு.. உங்களுக்கு?” என்று அலுவலகமே அல்லோல படுகிறது சில நாட்களாய். இது வருடாவருடம் பிப்ரவரி மாதம் அலுவலக ஆட்களுக்கு பிடிக்கும் ஒரு வித பித்து தான் என்றாலும் சிலருடைய ஆர்வம் சகித்துக் கொள்ள முடிவதில்லை. கையும் ஓடல காலும் ஓடல ரேஞ்சுக்கு சீன் போடுகிறார்கள். சில விஷயங்களை இவர்கள் எல்லோருமே புரிந்து கொள்ள வேண்டும்.

1. செய்யும் வேலைக்கும் அப்ரெசலுக்கும் சம்மந்தம் இருக்கு ஆனா இல்ல. சிலர் விஷயத்தில், இருக்கிறதே வேற மாதிரி கூட இருக்கும். அதையெல்லாம் பெரிதாக ஆராய்ச்சி செய்து கோவப்பட்டு எகிரி முப்பது வயதில் இரத்த அழுத்தம் பெறுவதை தவிர்ப்பது உத்தமம்.

2. சூப்பர்வைசர்களுக்கு நடிக்க தெரியாதுங்க. அவங்க மேல உள்ளவங்க ‘ஆக்ஷன்’ சொன்னா பாவம் அவங்களும் என்ன தான் பண்ணுவாங்க. உண்மைய சொல்லப் போனா, அவங்களும் பல லிமிடேஷன்ஸோட டால்மேஷன்ஸ் மாதிரி தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. சோ, அவங்க வயசுக்கான மரியாதையாவது அவர்களுக்கு கிடைக்கட்டும்.

3. அப்ரெயிசல் ஒரு வட்டம். மொத பக்கெட்ல குளிச்சவனுக்கு மூனாவது பக்கெட் கிடைக்கும். மூனாவது பக்கெட்ல குளிச்சவனுக்கு மொத பக்கெட் கிடைக்கும். எதற்கும் வருத்தப் படாதீங்க. செமி ஃபைனல்ஸ் தோத்தா என்ன, ஃபைனல் ல பாத்துக்கலாம்.

4. இந்த அப்ரெய்சல் சைக்கில்ல ஒவ்வொரு கோடும் ஏன் ஒவ்வொரு டாக்குமெண்டும் நானே செதுக்குனது டா வசனம் எல்லாம் வேண்டாம். ஏன்னா ஸ்ட்ரெஸ் அதிகமாகி ‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக் தான் மிஞ்சும்.

5. கம்பெனியையோ உங்க வேலையையோ அபிதா மாதிரி நினைச்சு உருகி அந்நியாயத்துக்கு உடலை வருத்தி எந்நேரமும் மூளைய கசக்கி வேலை செஞ்சீங்கன்னா கண்டிப்பா ஒரு நாள் நீங்க சேது ஆய்டுவீங்க. தேசிய விருது விடுங்க, அஸ்ஸோசியேட் ஆஃப் தி க்வார்டர் கூட கிடைக்காம போகலாம். வர்க் லைஃப் பேலன்ஸ் ரொம்ப முக்கியம்.

6. நீ என்ன வேல செஞ்சனே னு தெரியாமலேயே நீ ஒழுங்கா வேல செய்யல னு சொல்றவன் சூப்பர்வைசரா ஏன் கடவுளா கூட இருக்க முடியாதே. ஒருத்தன திட்டனும்னு மீட்டிங் ரூமுக்கு இழுத்துட்டு போய்ட்டு அவன் நிலைமையையும் புரிஞ்சுகிட்டு சுமூகமா பேசிட்டு வர்ற மனசு இருக்கே என்ன பொருத்த வரைக்கும் அது தான் கடவுள். அன்பே அடுத்த அப்ரெய்சல்.

7. லாஷ்ட் பட் நாட் லீஷ்ட். அதிகமா சோப் போடுற அஸோசியேட்டும் அகிகமா ரேட்டிங் போடுற சூப்பர்வைசரும் இந்த இன்டஸ்ட்ரீல நீங்க நிறைய பார்க்கலாம். பேப்பர் போடுற நாள் தெரிஞ்சு போச்சுனா வேலை செய்யுற நாள் நரகமாயிடும். நீங்க எல்லாம் நல்லா இருக்கனும் சொல்லி அந்த அருணாச்சலேஸ்வரர வேண்டி தலைவர் விடைபெறட்டும் நீங்களும் போய் உங்க வேலைய பாருங்க.

பை தி வே, கேட்க மறந்துட்டேன்..

உங்களுக்கு வந்துடுச்சா??

Tuesday, February 17, 2015

தேவதைகளின் இளவரசி – 5

ஒரு பட்டுப் பூச்சியிடம்
இரவல் பெற்ற சிறகொன்றில்
கொட்டிக் கிடக்கும் வர்ணங்கள் அள்ளி,
என் சின்னவளுக்கோர் பிரத்யேக
ஆடை நெய்திட
ஆசை கொள்கிறது மனம்!

ஆனால் அவள்..
அதை வேண்டாமென்றே
சொல்லப் போகிறாள்!

“பட்டுப் பூச்சி பாவம் பா!”
எனக் கொஞ்சுவாள்.

அப்படியே அம்மா புத்தி!!

அது ஒரு ப்ரீபெய்ட் காலம்!!

எதை எதையோ பற்றி எழுதுகிறாய்,
எனைப் பற்றி எழுதேனெனக் கேட்டுவிட்டாய்!
வாலியும் தாசனும் என்னுள் கொண்டும்,
கவி இயற்றப்படாக் காரணம் உன்னில் கொண்டாய்!
*
உன்னில் ரசிக்கும் ஒவ்வொன்றையும்,
நான் எழுத்தில் செதுக்கத் துடித்திடுவேன்..!
அதை எழுதத் தொடங்கும் அக்கணமே,
மீண்டும் ரசிக்கும் வேலை தொடங்கிடுதே!!
*
தாயின் அணைப்பில் உறங்கிய எனை,
தனியறை கேட்டிடத் தூண்டிவிட்டாய்!
போர்வைதான் தனிமை கொடுத்திடினும்,
அலைபேசி துணையால் இணைந்துக் கொண்டோம்.
*
வாயசைவின் உணர்ச்சியே தொடுவதில்லை
ஆனால் வார்த்தைகளாய் உனை வந்து சேர்கிறது!
போர்வைக்குள் நாம் செய்யும் இவ்வொலிப்பதிவு
எந்த ஒலியியல் கொம்பனையும் வியக்க வைக்கும்!!
*
உன் அலைபேசி உதட்டை நீ கடித்தும்,
என் செவியினை இதமாய்த்தான் துளைக்கிறது!
ரசிக்கிறேன் என்று மட்டும் நினைக்காதடி!
உன் நோக்கியாவிற்கு எமன் நான்தானடி!!
*
மாதம் ஒருமுறை அந்த நிலவுகூட,
சொல்லாமல் கொள்ளாமல் உறக்கம் கொல்லும்!
என் தனிமையை மெருகேற்றும் இக்கருப்பிரவோ,
நம் நெருக்கத்தில் நெருப்பூட்டி காதல் வளர்க்கும்!!
*
என் உறக்கம்.. மூடிய உன் இமைகளின் மேல்,
அதன் முடி அசைவிலும் நான் விழித்தெழுவேன்!
இரவினில் பிறக்கும் காதலோடு,
உன் கண்மணி அசைவோடு மிதந்திடுவேன்!!
*
நீ தூங்கும் அழகைக் கவிபாட,
புதுக்கவிஞன் ஒருவன் குதித்திடுவான்!
அதை நானும் படித்து இன்புறுவேன்..
அவன் உனக்கும் எனக்குமே பிறந்துவிட்டால்!!
*
உன் இதழ்வழி கசியும் ஒரு வார்த்தை,
இனிக்கத்தான் போகிறதெனக் காத்திருக்க..
என் நிலுவைத் தொகையில் பற்றாக்குறையென,
நம்ம ஏர்டெலைப் பெத்த ஆத்தா கூவிவிடுவாள்!!

Monday, February 16, 2015

ஷமிதாப்‬

உண்மையிலேயே சொல்லிக்கும்படியான ஒரு நல்ல கதையை தான் தயார் செய்திருக்கிறார்கள். அக்கதைக்கு இரண்டு நாயகர்கள் தேவை. கதைப்படி அதில் ஒருவர் முதியவராக இருக்க வேண்டிய கட்டாயம். அப்புறம் இந்த இரண்டு நாயகர்களையும் கட்டி மேய்க்க இன்னுமொரு கதாப்பாத்திரம் இருக்க அங்கு வைத்து நாயகியின் அறிமுகம். மூவருமே நடிப்பில் பிண்ணியிருக்கிறார்கள். ஆங்காங்கே கொஞ்சம் சலிப்பைத் தரும் திரைக்கதை தான் என்றாலும் மொத்தத்தில் பரவாயில்லை ரகம். வசனங்களுக்காகவே பால்கியை தனியாக பாராட்டலாம். அவ்வளவு அசத்தல். பி.சி யின் ஒளிப்பதிவு சிறப்பு.

ஒரு துலாபாரம்.

அதன் ஒரு தட்டில் இதுவரை குறிப்பிட்ட எல்லாமே வைத்திடுங்கள். சமநிலை வேண்டுவோர் மட்டும் மறு தட்டில் வையுங்கள்.. படத்தின் பின்னனி இசையை.

1. அமிதாப்
2. இளையராஜா
3. தனுஷ்

இவ்வளவு சொல்லிவிட்டு அக்ஷராவைப் பற்றி எதுவுமே சொல்லாமல் போனால் மனசாட்சி மன்னிக்காது. ஒரே வரியில் சொல்கிறேன்..

அக்ஷரா, கமலின் உண்மையான வாரிசு!

Saturday, February 14, 2015

Valentine’s Day

ருமானிய கிருத்துவத் துறவி ஒருத்தர் தன் நாட்டுப் போர் வீரர்களுக்கு அரசு விதிமுறைகள் மீறி திருமணம் நடத்தி வச்சிருக்காரு. அதுல காண்டான அந்நாட்டு அரசர் துறவிக்கு மரண தண்டனை விதிச்சு ஜெயில்ல தூக்கிப் போட்டிருக்காரு. உள்ள இருந்த நேரத்துல சாகக் கிடந்த ஜெயிலரோட பொண்ண நம்மாளு காப்பாற்றியதாகவும், தன்னோட மரண தண்டனை நிறைவேற்றபட இருந்த நாள் ல அந்தப் பொண்ணுக்கு ஒரு ‘லெட்டர்’ எழுதியதாகவும் சொல்றாங்க. அது வெறும் நல விசாரிப்புடனான விடைபெறுதலுக்கான ஒரு கடிதம் தான் னு ஒரு செய்தியும், அப்பெண் மீதான துறவியின் விருப்பம் தாங்கிய ஒரு காதல் கடிதம் னு மற்றொரு செய்தியும் இணையத்துல பார்க்க முடியுது. இதுல எது உண்மை னு இதுவரைக்கும் யாராலையும் உறுதியா சொல்ல முடியல.

இதெல்லாம் நடந்திருப்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பான ஏதோவொரு பிப்ரவரி 14 ல். அதன்படியே ஒவ்வொரு வருடமும் அதே நாளை அத்துறவியை நினைவு கொள்ளும் தினமாக கடைப்பிடிக்கப் பட்டிருக்கு. Valentine என்ற ஒரு பொதுவான பெயர் துறவிகளைக் குறிக்கப் பயன்பட்டு வந்ததால அப்படியே Valentine’s Day ஆகியிருக்கு.

Thursday, February 12, 2015

தேவதைகளின் இளவரசி – 4

பிரசவ காலத்தில்,
தாயின் முகம்
பொலிவிழந்தால் பையன்
அழகேறினால் பொண்ணு
என்று பலரும் சொன்னார்கள்!
என்னவள் தான்
எனக்கென்றும் அழகாச்சே!!

தேவதைகளின் இளவரசி – 3

எல்லோரும் அவள்
என்னைப் பார்த்துத்தான் சிரிக்கிறாள்
என்று சொல்வதில்
குறிப்பாய் இருந்தார்கள்!

எனக்குப் புரியவில்லை..

அவள் சிரிக்கிறாள் என்பதே
சந்தோஷம் தானே!!

Friday, February 6, 2015

தேவதைகளின் இளவரசி – 2

பிறந்த இரண்டாம் நாள்..
உறக்கமில்லா முன்னிரவை
கவலை கலந்த ஒரு பிரம்மிப்புடன்
கடந்திருந்த என்னிடம்,
‘அவளைத் தூக்கிக் கொண்டு வாருங்கள்..
தடுப்பூசி..’ என்றார்கள்.

அப்படியொரு கொடிய கணத்தை தவிர்க்கவல்லவா
உலகின் முதல் தடுப்பூசி
கண்டுப்பிடிக்கப் பட்டிருக்க வேண்டும்?
மனம் அல்லாடியது!

Thursday, February 5, 2015

தேவதைகளின் இளவரசி – 1

தலை வரை முக்காடிட்ட
ஒரு ஆழ்ந்த உறக்கத்தை,
போர்வை இடுக்கில் கை நுழைத்து,
முகமெல்லாம் எச்சில் பூசி,
மிக இதமாய்க் கலையச் செய்ய..

நான் சொல்வதெல்லாம் உணர
உங்களுக்கொரு மகள் வேண்டும்!