Monday, March 30, 2015

தேவதைகளின் இளவரசி – 8

அவள் பிறந்து ஓரிரு வாரங்கள் இருக்கும்.

இரவு எந்நேரமும் அழுதுக் கொண்டே இருப்பாள்.

அது பசியா, தூக்கமா, வலியா அல்லது உடலுக்கு வேறேதேனும் கஷ்டமா ஒன்றுமே விளங்காது.

கண்களை இருக்க மூடி அவளது பிஞ்சு இதழ்கள் வழி கசியும் அந்த அழுகைச் சத்தத்தை இன்று நினைத்துப் பார்த்தாலும் என்னை ஏதோ செய்கிறது.

எத்தனையோ இரவுகளில் அவள் பாட்டி குழந்தைய அழாம எந்தக் கஷ்டமுமில்லாம பாத்துக்கோ தாயி என அம்மனுக்கு காசு முடித்து வைத்திருக்கிறாள்.

மடியில் கிடத்தியும், தோளில் சுமந்து நடந்தும், கைகளையே தூலியாக்கியும், பிறகென்னென்னவோ செய்துப் பார்த்தும் நின்றுப்போகாத அந்த அழுகை கொஞ்சம் கொஞ்சமாக தானாகவே அடங்கி ஒரு கட்டத்தில் அவள் தூங்கிப் போவாள்.

ஏன் அழுகிறாள் என்ற கேள்விக்கு மட்டும் எந்த ஒரு இரவிலும் பதில் கிடைத்ததில்லை.

குழந்தைகளின் அழுகைச் சத்தத்திற்கு எரிச்சலடைந்த காலமெல்லாம் கடந்து இரண்டு நாட்களுக்கு முன்பு நான் வசிக்கும் அபார்ட்மெண்டின் நான்காவது தளத்திலிருந்து ஒலித்த ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரலுக்கு என்னைப் பதறிப் போகச் செய்திருப்பவள் என் மகள்.

Friday, March 27, 2015

தேவதைகளின் இளவரசி – 7

எனக்கு அவளை மூன்று மாதக் கருவிலிருந்தே தெரியும். மூன்றாவது மாத ஸ்கேன் முடிந்து வெளியில் வந்த அவளது அம்மாவின் முகத்தில் பத்து நொடிகளுக்கு புன்னகையை தவிர வேறு எதுவுமே என்னால் பார்க்க முடிந்ததில்லை. பூரிப்பில் சிவந்திருந்த அவளது கன்னங்கள் நான் சொல்வதற்குச் சாட்சி. ‘பாத்தியா?’ என்று கேட்டேன். தன் இரு கைகளின் ஆள் காட்டி விரல்களை அருகருகே வைத்து என் மகள் எப்படி கைகளை ஆட்டிக் கொண்டிருந்தாள் என்பதை அவள் விவரித்தபோது எப்படியாவது கருவில் புகுந்து என் மகளை பார்த்திட முடியாதா என்று ஏங்கியது மனம். அதன் பிறகான ஒவ்வொரு ஸ்கேனுக்கும் என்னையும் உள்ளே அனுமதித்தார்கள். ‘தலை, முகம் இது, இங்கே பாருங்க.. வாயில விரல் வச்சிருக்கு.. சோ ச்வீட்!’ என்று டாக்டர் சொல்ல எங்கே எங்கேயென்று பதைபதைக்கும் ஒரு ஞானசூணியமாகவே பெரும்பாலான நேரங்களில் அங்கு நின்றுக் கொண்டிருப்பேன். ஏன் இந்தத் தந்தைகளுக்கெல்லாம் ஸ்கேனிங் பற்றிய ஒரு பயிற்சி முன்கூட்டியே அளிக்கப்படக் கூடாது என்று கடிந்துக் கொள்வேன். நேற்றோடு அவளுக்கு ஒன்பது மாதங்கள் முடிவடைந்துவிட்டது. கருவில் கையைசத்துக் கொண்டிருந்தவள் இன்று நான் எங்காவது வெளியில் கிளம்பிவிட்டால் என் மேல் ஏறிக் கொண்டு அவள் அம்மாவுக்கு ‘பை’ சொல்கிறாள். காலம் ரொம்பவே விரைகிறது. இன்று காலை கூட அவளுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் இந்த எண்ணங்கள் எல்லாம் என்னை கடந்துக் கொண்டிருந்தன. அலுவலகத்திற்கு நேரமாகவே அவளை பாட்டியிடம் விட்டுவிட்டு வந்துவிட்டேன். உடல் மட்டும் தான் இங்கு என் ஆன்மா இன்னும் அவளுடனே விளையாடிக் கொண்டிருக்கிறது.

Monday, March 23, 2015

மனைவி என்றொருத்தி!!

ஏனோ
முன்பு போல உன்னை
நான் காதலிப்பதில்லை!

உன் மீது காதலில்லாமல் இல்லை..

இந்தக் காதல் மீது தான்,
கொஞ்சம் காதல் குறைந்திருக்கிறது!!

இனிப்பு வேண்டுபவளுக்கு,
தொடர்ந்து கசப்புகளை சுவைக்கும்
வாய்ப்புகளே அமையும் பொழுது,
ஒரு கட்டத்தில்..
கசப்பின் மீதும் வெறுப்பு முளைக்கும்!
இனிப்பின் மீதும் வெறுப்பு முளைக்கும்!

அப்படித் தான்,
இந்தக் காதலும்
எனக்குப் பிடிக்காமல் போயிருக்கிறது!

காதலில்லாமல் வாழத் தெரியாதவளுக்கு
எத்தகைய பேரிடி இது!

ஆனாலும்,
வாழ்வின் இந்த அத்தியாயம்
ஒரு வகையில் பிடித்திருக்கிறது!

அழுகை அழித்து கொஞ்சம் வலிகள் பயில்கிறேன்.
அனுபவம் கிடைக்கிறது!

கோபங்கள் கொன்று புன்னகை அணிகிறேன்.
பக்குவம் பிறக்கிறது!

சண்டைகளே வேண்டாமென சரணடைகிறேன்.
வேதனை குறைகிறது!

மிகப் பிடித்தாலும் உனக்காகத் தவிர்க்கிறேன்.
அமைதி பரவுகிறது!

வேறென்னென்ன வேண்டும் கேள்,
அத்தனையும் செய்யத் தயார்!

ஆனால்..

வாரத்தில் ஒரு மாலை வேளையேனும்
எனக்கென முழுதாய் அற்பணி!

முதலில் கொஞ்சம் வீடு வா!

என்னோடு ஓரிரு வார்தைகள் பேசு!

ஒரே ஒரு குவளை காஃபி பகிர்!

உனதருகில் அமர்ந்து
உன் விரல் பிடித்துவிட அனுமதி!

உனக்கென நான் எழுதி வைத்திருக்கும்
கவிதைகளுள் ஒன்றை படி!

நிலவு எட்டிப் பார்க்க என் கை கோர்த்து நட!

பத்தடிக்கொரு முறை
நான் சாய்ந்துக் கொள்ள உன் தோள் கொடு!

முக்கியமாக,
சிடுசிடுக்காமல் எனை வீடு திருப்பு!

உனக்குப் பிடித்தமான அந்த ஐரோப்பிய உணவை
இரவுக்குச் சமைத்துத் தருகிறேன், உண்!

பிறகு குடிக்க வேண்டுமெனில் குடி!

புகைக்க தோன்றின் அதையும் செய்!

ஆனால்,
நீ செய்வதை
நீ அறியும் அளவில் மட்டும் முடி!

அப்புறமென்ன..

சுத்தகரிக்கப்பட்ட நமதறையின் அகண்ட மெத்தை விரிப்பை
வழக்கம் போல் நீயே ஆக்கிரமித்துப் படு!

கண்ணுறங்கிப் போகும் முன் ஒரே ஒரு நொடி..

முக்காலமும் இருண்டுக் கிடந்த என் முகம்
எப்படி மலர்ந்து ஒளிர்கிறதென்பதை பார்!

விலையுர்ந்த உடையோ அல்லது
எவ்வித ஆடம்பரத்தின் நிழலோ வேண்டாம்
உன் இந்த நேரம் மட்டுமே போதும் என்பதை உணர்!

அது போதும்..
நீயே கதியென வாழும் இந்தப் பைத்தியக்காரிக்கு!!

Wednesday, March 18, 2015

மெய்யுணர்தல் 8 – மறப்போம் மன்னிப்போம்

மறப்பதும் மன்னிப்பதும் எவ்வளவு முக்கியம் என்று உணர்த்தும் ஒரு நிகழ்வு நம் எல்லோர் வாழ்க்கையிலும் கடவுளால் கதையாக்கப் பட்டிருக்கிறது.

அத்தருணத்தில்,
தான் அதுவரை மன்னிக்காதவற்றை மறக்க முடியாமலும்
மறக்காதவற்றிற்காக தன்னை மன்னிக்க முடியாமலும்
மனம் அல்லாடத் தான் போகிறது!

சில உறவுகள் நம்மைத் தொடுகின்றன..
சில உறவுகளை நாமாகவே தொடுகிறோம்..
எவ்வகையாயினும் கூடி மகிழ்கிறோம்!
தோள் கோர்த்து ஒன்றாக
நன்றாகவே பயணிக்கிறோம்!

பிறகொரு நேரத்தில்,
காலத்தின் சூழ்ச்சியாலோ..
அன்பின் சிறு வீழ்ச்சியாலோ..
ஒரு தவறு நிகழ்கிறது!
ஆறாத ரணங்களால் நெஞ்சம் நிரம்புகிறது!
கோபம் குவியல் குவியலாய் முளைத்து நிற்கிறது!

உடைபட்டு அழுகிறோம்!!

பேசக் கூடாத வார்த்தைகளை விட்டு எறிந்தும்,
கடக்கக் கூடாத எல்லைகளையும் நொடியில் கடந்தும்,
ஒரு கட்டத்தில்..
ஆசையாய் தொட்ட அதே கைகளால்
கழுத்தையும் நெறிக்கிறோம்!

இன்னும் கொஞ்சம் தான்
உயிர் பிரிந்துவிடும் என்ற தருணம் அதில்,
விட்டு விடுகிறோம்..
ஒரே அடியாக!!

யோசித்துப் பார்த்தால்..
இந்தக் கோபங்கள் எல்லாமே
ஓர் நாள் கரைந்துப் போகக் கூடியவை!
கண்ணீரும் வடிந்து காய்ந்துப் போகக் கூடியதுவே!
என்ன..
இந்த ரணங்களுக்கு மட்டும் கொஞ்சம் ஆயுள் அதிகம்..
ஒரு பக்கமாய் அவை இருந்துவிட்டுத் தான் போகட்டுமே!
இவ்வுலகில் யாருக்கில்லை வலி?

மகிழ்வித்தவர்கள் வலி தருவார்கள்
என்று நாம் எதிர்ப்பார்க்கிறோமா என்றால் இல்லை!
ஆனால் தந்து விடுகிறார்கள்!!

அது போலவே தான்,
வலி தந்தவர்களும் மீண்டும் ஓர் நாளில்
நம்மை மகிழ்விப்பார்கள்!
இதையும் நம்ப வேண்டாம்..
ஒருவேளை நடந்து விட்டால்?

மறப்போமே!
இன்னுமொரு முறை
மன்னித்துத் தான் பார்ப்போமே!!