Monday, August 24, 2015

பிரிவென்னும் மாயை!!

எல்லோரும் நீ
ஊருக்குப் போயிருக்கிறதாக
இன்று காலை பேசிக்கொண்டிருந்தார்கள்..
எனக்குச் சிரிப்பு தான் வந்தது!

நேற்று மாலை கூட,
அடுப்பில் எனக்கானத் தேனீர்
நுரைத்துக் கொண்டிருக்க,
அருகில் நின்றபடி எனைப் பார்த்துப்
புன்னகைத்தாய் எனச்
சொல்லியிருப்பேன் அவர்களிடம்..
நமக்கென்ன வந்ததென்று விட்டுவிட்டேன்!

தினம் நான் குளித்து
தலை துவட்டிக்கொண்டிருக்க,
எனது விருப்பமான பர்ஃப்யூமை
மேஜை மீதெடுத்து வைப்பது..

நீ வழக்கமாய் விரும்பிக்
கேட்கும் பாடல்கள் கொண்டு,
நமது காரை நிரப்பி
அலுவலகம் வரை உடன் பயணிப்பது..

அந்தி சாய்ந்திட,
நேரமாச்சு.. போய் அவளை
அழைத்து வா! என
என் காது மடலில் முத்தமிடுவது..

வீடே உறங்கிவிட்ட நேரத்தில்,
இரவு உணவை நான் முடிக்கும் வரை
தனிமையைத் துரத்தி
அருகிலேயே அமர்ந்திருப்பது..

அவ்வளவு ஏன்..
நள்ளிரவு பெய்யும் பேய் மழையினூடான
ஓரிரு இடிச் சத்தத்திற்கு
என்னை இறுக்கப் பிடித்துக் கொள்வது..

இதெல்லாம் யாராம்?

எனக்குத் தெரியும்..
நீ இன்னும் என்னோடு
இதே வீட்டில் தான்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறாய்!

எனக்கு மட்டுமே தெரியும்!!

Tuesday, August 18, 2015

மனிதம் வளர்ப்போம் 2

தாம்பரம் வேளச்சேரி சாலையில் செம்பாக்கத்தையடுத்து கௌரிவாக்கத்தில் பஞ்சமுக ஆஞ்சிநேயர் கோயில் உள்ளது. அம்மாவாசை நாட்களில் அங்கு தேங்காய் கட்டுதல் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வு. பக்தர்கள் தம் மனதில் நினைக்கும் காரியங்கள் நிறைவேற வேண்டி மாதந்தோறும் அம்மாவாசையன்று தேங்காய் கட்டி வந்தால், வேண்டிய காரியம் கைக்கூடும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு அம்மாசையன்று தேங்காய் கட்டும் முன்பும், முந்தைய அம்மாவாசையன்று கட்டிய தேங்காயை அவிழ்த்து உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை வீட்டிற்கு எடுத்து வந்து சம்மந்தப்பட்டவர் உணவில் சேர்த்துக் கொள்வது வழக்கம்.

கடந்து வெள்ளிக் கிழமை அலுவலகம் முடித்து அக்கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு அம்மா தன் மகன் பெயரில் அர்ச்சனை செய்து தேங்காய் கட்ட வந்திருந்தார். அர்ச்சகர் தேங்காயை பெற்றுக் கொள்ளவும் பெயர் நட்சத்திரம் ராசி அனைத்தையும் சொல்லி முடித்தார். “வேண்டுதல் சொல்லுங்கோ” என்றார் அர்ச்சகர். மென்று விழுங்கி “நீங்களே நல்லதுக்கு பண்ணுங்க” என்றாள் அந்தத் தாய். “வேண்டுதல் எதுவும் இல்லையா, சொன்னா பண்ணிடலாம்” என வற்புறுத்த அவளும் பெருந்தயக்கத்துடன் சுற்றியிருப்பவர்களுக்குக் கேட்காத அளவில் ஏதோ கிசுகிசுத்தாள்.

அர்ச்சகர் தன் பங்கிற்கு, “சர்வ கெட்ட பழக்கம் நிவர்த்தி சித்திரத்தம்” என்று உரக்கச் சொல்ல, மொத்தக் கூட்டமும் ஒரு நொடி அந்தத் தாயை தரிசித்துத் தலை குனிய வைத்தது.

உயிரைக் காக்க வல்லவர்களான மருத்துவர்கள் கைவிரிக்கும் வேளையில் மக்கள் தேடிப் போவது கடவுளைத்தான். ஆனால் அவர்களால் அதிகபட்சம் நெருங்க முடிவது இதுபோன்ற அரைவேக்காடு அர்ச்சகர்களைத் தான்.

தலைக்குனிவிற்கு என்னதான் மகன் காரணமென்றாலும், அந்த அர்ச்சகரையும் மன்னிக்க மறுக்கிறது மனம்

Thursday, August 13, 2015

பிரிவுத் தூது!!

நேற்றெனது கனவில்,
தூதேந்தி வந்த தேவதை ஒன்று,
ஒரு துண்டுச் சீட்டை
என் கைகளில் திணித்து இறந்துப் போகிறது!

சகுனமே சரியில்லையேயென்று
பிரித்துப் படிக்க முயற்சிக்கிறேன்..

ஏதும் எழுதப்படாதொரு
வெள்ளைக் காகிதகக் கிழியலது!

குழம்பிப் போய் நின்றிருக்க,

காகிதம் மீது
எழுத்துகள் முளைக்கின்றன
ஒவ்வொன்றாய்..

தொலை தூரம் கடந்து செல்ல
கொடும் பிரிவு வந்து சேரும்!

அருகாமை நிலவு நீங்கி
உன் இரவு வான் ஊனமாகும்!

உணவென்பதே பிடிக்காது!
உறக்கமா அது இனி ஏது?

காலங்கள் கரையாமல்
நான் பார்த்துக் கொள்வேன்!

நாள் தோறும் குறையின்றி உனை..
நானே கொல்வேன்!

காத்திரு..! காத்திரு..!!

எழுத்துகள் மறைந்து..
மீண்டும் அதே வெள்ளைக் காகிதம்,
துண்டுச் சீட்டாய்..
என் கைகளில் திணிக்கப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு,
இறந்துப் போன தேவதை உயிர்த்தெழ..
அதனோடு பறந்துப் போகிறது!

நான் விழித்துக் கொள்கிறேன்!!

Tuesday, August 4, 2015

மதுவிலக்கு – ‘மதி’விலக்கு

நமக்கு நினைவு தெரிந்ததலிருந்து குளிக்காமல் கொள்ளாமல், எப்பொழுதும் அழுக்காய், குடும்பத்திற்கு பத்து பைசாவிற்கும் பிரயோஜனம் இல்லாமல் தறுதலையாக ஊர் சுற்றி, எந்நேரமும் குடியும் கும்மாளமுமாய் இருந்த ஒருவன் திடீரென ‘நான் திருந்தி வாழப் போகிறேன்’ என்று எத்தனையாவது முறையென்றே தெரியாத அத்தனையாவது முறை சொன்னால், நாம் அவனை எப்படி அணுகுவோமோ, அப்படித்தான் நம்மை வெளியுலகம் அணுகுகிறது.

மேலும் இந்தப் போராட்ட முறைகள் எல்லாம் ‘என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் இவர்கள் செய்கிறார்களா?’ என்ற கேள்வியைத் தருகிறது. சரக்கு பாட்டில்களை உடைப்பதினால் சரக்கு வேண்டுமானால் தீர்ந்து போகும், சரக்குக்கு அடிமையானவர்கள் எப்படித் தீர்ந்துப் போவார்கள்?

மதுவிலக்கு நல்ல விஷயம் தான். மதுவிலக்கு எவ்வளவு முக்கியமோ அதை விடவும் முக்கியம் ‘மதி’விலக்கு. அதாவது நம்மாட்களின் மழுங்கிய புத்தியை சுத்தப்படுத்தி அதில் சரியானச் சிந்தனைகளை விதைப்பது. மதிவிலக்கு இல்லாத மதுவிலக்கு வெறும் கண்துடைப்பாகவே அமைந்து விடும்.

என்னதான் டாஸ்மாக்குகள் ஒழிந்தாலும், நகரத்தின் காஸ்ட்லி ஏசி பார்கள், நவநாகரீக கேளிக்கை விடுதிகள், மது பரிமாறும் நட்சத்திர ஒட்டல்கள் தொடர்ந்து இயங்கத்தான் போகின்றன, காசு படைத்தவன் குடிக்கத்தான் போகிறான்.

ஏற்கனவே, இந்தியாவில் நடக்கும் அக்கிரமங்களுக்கு பாலியல் வறட்சி ஒரு காரணமாகிவிட்டது. பாட்டில் வறட்சி என்றொன்று உருவாகி அதனால் அக்கிரமங்கள் கூடாமல் இருந்தால் சரி.

குடி குடியைக் கெடுக்கும் என்பது மாறி, குடிக்க முடியாதவன் குடிப்பவனின் குடியை கெடுக்கும் நிலை வந்துவிடக் கூடாதென்கிற அச்சம் தான்.

மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு நான் சொல்வது புரியும். Sudden withdrawal of drugs, அதாவது நீண்ட காலமாய் உட்கொள்ளப்பட்டு வந்த ஒரு மருந்தை சட்டென்று பயன்பாட்டிலிருந்து நீக்குவது, மிகவும் அபாயகராமான முடிவுகளைக் கொடுக்கும் என்று சொல்வார்கள். அது உடல்ரீதியாகவும் இருக்கலாம் மனரீதியாகவும் அமையலாம். இந்த விதி Alcohol க்கும் பொருந்தும்.

டாஸ்மாக் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் எண்ணத்தை விடுத்து, முதல்கட்டமாக, குடியிருப்பு, மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகிலிருக்கும் மதுபானக் கடைகளை களைவது, அடுத்து, டாஸ்மாக்குகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைப்பது, பிறகு, அலுவலகங்களில் எப்படி யாருக்கும் தொந்தரவில்லாத விதம் ஒதுக்குப்புறமாய் Smoking Zone அமைத்திருக்கிறார்களோ அதுபோல ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்குப்புறமாய் ஒரு பகுதியை தீர்மாணித்து டாஸ்மாக்குகளை அங்கு இடம் மாற்றுவது போன்ற நடைமுறைக்குரிய நடவடிக்கைகளில் இறங்குதல் உத்தமம்.

Monday, August 3, 2015

தேவதைகளின் இளவரசி – 10

என் மகள் அழைக்கச் சொன்னதாக என் அலைப்பேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது.

விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென ஒரு அலைபேசியை எடுத்து வந்து தன் அம்மாவிடம் கொடுத்து, “halllo… baa.. vaavaavaavaa” என்றிருக்கிறாள்.

ஸ்பீக்கர் போடச் சொல்லி, நான் அவள் பெயரை உச்சரித்து, ‘குட்டி.. என்னடா பண்ற.. என்னை தேடுறியா.. baa சீக்கிரம் வந்துட்றேன்..’ என்று ஏதோ அவள் புரிந்துக் கொள்வாள் என்பது போலவே பேசுகிறேன்.

அவளும் புரிந்துக் கொண்டது போலவே ஒரு ‘ஹ்ம்ம்!’ சொல்கிறாள்.

சில நாட்களுக்கு முன்பொரு பதிவில் என் இந்த வாழ்க்கையை மொத்தமும் இயக்கி ஆள்பவளாய் அதுவும் வேகமாய் மாறி வருகிறாள் என்று எழுதியிருந்தது நினைவிற்கு வந்து போகிறது.

வார்த்தைகளை அடுக்கி
வாக்கியங்கள் செய்துக் கொண்டிருப்பது வெறும் தேகம் தான்!

உணர்வுகளெல்லாம்..
அக்கணமே புறப்பட்டுவிட்டன,
அவள் தேடுதலுக்கோர் முற்றுப்புள்ளியை முதுகில் சுமந்தபடி!