Monday, December 30, 2013

பிரேக்கப் தியரி

நமக்குள் இனி ஒத்து வராது என்று உணர்ந்து, இருவருமே சம்மதித்துப் பிரிவது தான் பிரேக்கப் ஆக முடியும். ஏதோ ஒருவருக்கு மட்டும் அந்த உணர்வு வந்து, இன்னொருவர் மீது அந்தப் பிரிவு திணிக்கப்படும் போதுதான் ஏகத்துக்கு வலி வரையப்படுகிறது. உறவுகளை இருக்கமாகப் பற்றுதல் கூட ஒரு விதச் சுதந்திர மறுப்பு என்பது முற்போக்குச் சிந்தனையின் ஒரு அங்கமாய், ஒரு பக்கம், எவ்வளவு தான் நியாயமாகப் பட்டாலும், அதற்குப் பிரிவு ஒன்றுதான் தீர்வாக முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதே நேரத்தில், பிரிவது என்பதில் ஒருவர் தீர்க்கமாக இருக்கும்பட்சத்தில், உருகுதலும், உயிர் விடுதலும் முட்டாள்தனம் என்பதில் எனக்கும் நூறு சதவிகித உடன்பாடே.

மனம் விட்டுப் பேசாததால் மட்டுமே விட்டு போன உறவுகள் இங்கு அதிகம் என்றிருக்க, நாம் ஏன் அதைச் செய்துப் பார்க்கக் கூடாது என்று யாருக்கும் தோன்றுவதுமில்லை, அப்படியே தோன்றினாலும், சம்மந்தப்பட்ட இருவரும் ஒரே நேரத்தில் தயாராய் இருப்பதுமில்லை.

என்ன செய்ய, பிக்கப்களுக்கும் எஸ்கேப்களுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டால், பாவம் இந்த காதல், பாடாய்ப் படத் தான் வேண்டும்.

Friday, December 27, 2013

ஆண் ஆதிக்கம் ஒரு அசிங்கம்!

இந்த சமூகம் இன்னும் ஆண் ஆதிக்கத்தில் தான் இயங்கி வருகிறது என்பதை நாம் எப்போதெல்லாம் மறக்கிறோமோ, அப்போதெல்லாம் ஒரு பாலியல் பலாத்காரச் செய்தி நம்மை துளைக்கிறது. இப்படிப்பட்டக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்களை திட்டும் போதுகூட, ‘இவனெல்லாம் நல்ல குடும்பத்துல பொறந்திருக்க மாட்டான்’ என்று மறைமுகமாக ஒரு பெண்ணையே குறை கூறும் அளவில் தான் இன்னும் இந்தச் சமூகம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. பெண்களின் மீதான ஈர்ப்பு போல, இந்த ஆண் ஆதிக்க உணர்வும், ஆண்களின் மரபணுக்களில் ஊடுருவிவிட்ட ஒரு விஷயமாக மாறியிருக்கிறதோ என்ற அச்சம் வருகிறது.

நம் வீட்டில் உள்ள பெண்களை நாம் ஒழுங்காக நடத்தாத வரையில் நாட்டிலுள்ள பெண்களை நாடும் மரியாதையாய் நடத்தாது என்பதை ஒவ்வொரு ஆணும் உணரும் நாள் என்று வருமோ?

கொஞ்சம் உறைக்கும்படிச் சொல்வதானால், வீட்டில் இருக்கும் பெண்ணை ஒரு நாயை போல நாம் கடித்தால், நாளை தெருவில் இறங்கி நடக்கையில், வேறொரு சொறி நாய் அவளை கடிக்காது என்ற எந்த நிச்சயமும் இல்லை.

செய்தி: திருநள்ளாறில் தோழிக்காக காத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை பதினைந்து பேர், மொட்டை மாடி, சுடுகாடு என மூன்று வெவ்வேறு இடங்களில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள்.

Monday, December 16, 2013

வியாபாரம் – பிச்சை – கடமை

சனிக்கிழமை கடற்கரைக்குச் சென்றிருந்த போது, ஒரு சிறுமி, ‘இந்த ஸ்டிக்கர் வாங்கிக்கோ கா.. பத்து ரூவா தான் கா.. ப்ளீஸ் கா..’ என்றதும், என் மனைவி, ஒரு ஸ்டிக்கர் அட்டையை வாங்கிக் கொண்டு பத்து ரூபாய் கொடுத்தாள். அந்தச் சிறுமி அப்படிப் போனதும், இன்னுமொரு சிறுமி வந்து, எதையோ நீட்டி வாங்கிக்கக் சொல்லி, ‘பத்து ரூவா தான் கா.. ப்ளீஸ் கா’ என்றாள். என்னவள், ‘இல்லம்மா வேண்டாம்’ என்று தவிர்க்க முயன்ற போது. ‘வாங்கலனாலும் பரவாயில்ல கா.. பத்து ரூவா வாச்சும் குடுக்கா’ என்றாள் அந்தச் சிறுமி.

ஒரு முறை, பைக்கில் பயணித்துக் கொண்டிருந்த என் நண்பனை ட்ராஃபிக் கான்ஸ்டபிள் ஒருவர் வழி மடக்கி, ‘லைசன்ஸ் காட்டு’ என்று சொல்லியிருக்கிறார். என் நண்பனும் எடுத்துக் காட்டியிருக்கிறார். வண்டி ஆர்.சி புக், இன்சூரன்ஸ் என அவர் கேட்க, அவற்றையும் காண்பித்திருக்கிறார். ‘எல்லாம் சரியா தான் இருக்கு, பாத்தா படிக்கிற பையன் மாதிரி வேற தெரியுற, அப்புறம் ஏன் பா இப்படி வேகமா போற, சரி சரி, ஒரு அம்பது ரூவா ஃபைன கட்டிட்டுப் போ’ என்று சொல்லி, கையில் அவ்வளவு பணமில்லை என்று சொன்ன என் நண்பனிடம், அவன் வாலட்டில் வைத்திருந்த முப்பது ரூபாயை வாங்கிக் கொண்ட பிறகுதான் விட்டிருக்கிறார் அந்த கடமை தவறாத அதிகாரி.

பை தி வே, நான் சொன்ன இந்த இரண்டு விஷயத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

Wednesday, December 11, 2013

பாரதி யாரு?

பெண்கள் மீது அதிக அக்கறை கொண்ட ஒரு நபருக்கு இன்று பிறந்தநாள். ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், அவர்கள் வீட்டுப் பெண்ணுக்கு ஏதாவது ஒன்றென்றாலும் துடிதுடித்துப் போவார் என்றால் பாருங்களேன்.

அட என்னப்பா முழிக்குறீங்க. நம்ம மதராஸபட்டணம் ஆர்யாவிற்கு தான் இன்று பிறந்தநாள்.
ஆமாம்… அது யாருப்பா பாரதியாரு??

பி.கு: இந்த பதிவின் நோக்கத்தைப் புரிந்துக்கொள்ளாது, யாரேனும் ‘ஹாப்பி பர்த் டே மை ஸ்வீட் ஜாமி’ என்று பின்னூட்டம் இட்டுவிடுவார்களோ என பயத்தில் பதறிப்போய் இந்த பின்குறிப்பை இணைக்கிறேன். இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்.

Tuesday, December 10, 2013

அஷ்டமி நவமி!

மு.கு: ஃபேஸ்புக்கில் யாரோ ஒரு புண்ணியவான் எழுதி பகிர்ந்திருந்ததை அப்படியே இங்கு பகிர்ந்திருக்கிறேன்.  எனக்கும் இந்த எழுத்துக்கும் எள்ளளவும் சம்மந்தம் இல்லை என்பதை தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள்.ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார். நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார். நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி போங்க அண்ணா நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான் இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள். நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள். 2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும். 3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா? 4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண்டது. 5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள். 6. சஷ்டி என்றால் ஆறாம் நாள். 7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா? 8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம். 9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும். 10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம். 11. ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று. 12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும். 13. திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று. 14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும். சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும்.

இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள். என் சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர். நான் மேலும் கூறினேன்.

அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள். க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன். மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம். பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம். “செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம்,கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன.(நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்) இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம். வாரத்தில் செவ்வாய்,சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது(10 நாட்கள்). மாதத்தின் அஷ்டமி,நவமி நன்மைக்கு உகந்தது அல்ல(4நாட்கள்). பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை(2 நாட்கள்). ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம்,குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள். ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட…எப்படி முன்னேற…? என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?

Friday, December 6, 2013

நெல்சன் மண்டேலா

கல் உடைக்கனும்,
கண்ட வெள்ளைத்தோல் வாய்களின்
ஏச்சு சகிக்கனும்!

உடை மறக்கனும்,
உட்காரக்கூட முடியா இடத்தில்
நீட்டிப் படுக்கனும்!

உதை பொறுக்கனும்,
ரத்தம் கித்தம் சிந்தினாலும்
உடல் பிழைக்கனும்!

குரல் எழுப்பனும்,
பற்கள் உடை பட்டாலுமே
நாவு துடிக்கனும்!

இனம் உயரனும்,
குனிந்து குனிந்தே பழகிவிட்ட
தலை நிமிரனும்!

சுயம் ஒதுக்கனும்,
மண் தந்த மக்களுக்கென்றே
உயிர் எழுதனும்!

செய்தனன் யாவும் ஏன்
பெய்தன யாவுமே!

உன் புகழ் சொல்லியே
பெயர் புவிதனை ஆளுமே!

பி.கு: நெல்சன் மண்டேலா அவர்களின் இருப்பத்தேழு வருட சிறை வாழ்க்கையை வியந்ததில் தாமாய் வந்து விழுந்த வார்த்தைகளை கொஞ்சம் ஒழுங்கிப்படுத்தி வைத்திருக்கிறேன்.  மாபெரும் தலைவரின் நிகரில்லாத் தியாகத்திற்கு ஏதோ என்னால் இயன்றதொரு சிறிய அர்ப்பணிப்பு.

Thursday, December 5, 2013

உனக்கானது மழை!

நீர் ஆவியாகிறது!
நீராவி மேலெழுகிறது!
திரவமாக்குதல் அதனை துளிகளாக்க
அத்துளிகள் சேர்ந்து மேகமாகிறது!
ஒரு கட்டத்தில்,
புவியீர்ப்புக்கு இணங்கிடும் தன் எடையால்,
அத்துளிமூட்டை அவிழ நேர்கிறது!

மழையை விளக்கிக் கொண்டிருந்த அறிவியலுக்கு,
தெரிந்ததெல்லாம் இவ்வளவுதான்!
மிச்சத்தை சொல்லத் தொடங்கியது
காதலியல்!

அதுவரையில்..
ஒரு ஆறாக ஓடிக்கொண்டிருந்த,
ஒரு குளமாக தேங்கிப்போயிருந்த,
ஒரு கிணறாக புதைந்துக்கிடந்த,
நீருக்கு..

உன் உச்சந்தலையில் தொடங்கி,
வகுடு வழி பயணித்து,
நெற்றிக் குங்குமத்தின் மஞ்சல் வாசம் முகர்ந்ததும்,
புருவ எல்லை கடக்கும் முன்னரே
ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டு விடுகிறது!

மூக்கின் மீதான ஒற்றையடி பாதையில்,
வேண்டுமென்றே அடி பிறளத்துடிக்கும்
துளிகள் சிலவற்றிற்கு,
உன் விழிகளுள் விழுந்து மரிக்கத்தான்
ஆசை ஒன்றும் முளைக்கிறது!

இளஞ்சிவப்பில் குளித்திருக்கும்
உன் இதழ்களை வருடிவிட்டு,
தாடை நுனியில்
சொட்டும் நொடியில்
‘மறுவாழ்வு இது’ என்று புரிகிறது!

தோள்களில் வழுக்கிய
உந்தன் மார்வழி பிரயாணம்,
பூர்வ ஜென்மத்துப் பலனொன்றை
அதி ரகசியமாய் திருடி,
நீருக்கே தெரியாமல் நீருக்குள் கலக்கிறது!

தேகம் முழுக்க ஓடிக் களைத்தும்,
தொப்புள் குளமாய் தேங்கித் தவித்தும்,
கணுக்கால் இறங்குகையிலே
இறந்துவிடத் துடிக்கும்
மொத்தத் துளிகளின்
மறுஜென்மம் தான் இந்த மழை!

தேவதையே,
உனக்கானது மழை!

Tuesday, December 3, 2013

மெய்யுணர்தல் 5

நண்பர்களின் பிறந்தநாளுக்கு அவர்களை ஃபோனில் அழைத்து ‘ஹாப்பி பர்த் டே’ எனச் சொல்லிவிட்டு, அதன் பிறகும், ‘இன்னைக்கு என்ன ஸ்பெஷல்’, ‘கோயிலுக்கு போகலயா’, ‘டின்னருக்கு என்ன பிளான்’ என அந்நாளின் கொண்டாட்டங்கள் சுற்றியே பல மணி நேரங்கள் பேச முடியும்போது, அப்பா அம்மாவின் பிறந்தநாளுக்கு மட்டும் ஃபோன் செய்த கையோடு, ஒரு ஹாப்பி பர்த் டே சொல்லி முடித்தும் முடிக்காகததுமாய், “அப்புறம்..” என்று ஒரு நாட்டு நடப்புக்கோ, அன்றைய சமையல் கதைக்கோ உடன் தாவி விடுகிற அளவில் தான் நாம் நம் எதார்த்தத்தை நிரூபிக்க முயல்கிறோம்.

நெருங்கிய நண்பன், நெருங்கிய தோழி என சொல்வதில் இல்லாத ஒரு கூச்சம், நமது இரத்தச் சொந்தங்களுடனான நம் நெருக்கத்தை விவரிக்க முயற்சிக்கையில், கண்கள் எட்டாதத் தூரத்திலிருந்து ஓடி வந்து நம் மீது சட்டென்று ஏறிக் கொள்கிறது.

பி.கு: இவையெல்லாம் உணராமல் சொல்லப்படாத காதல்களுக்கு இன்றளவும் நாம் ‘இதயம்’ முரளியை கலாய்த்துக் கொண்டிருக்கிறோம்.