Tuesday, November 17, 2015

காதல் மின்னல்!

சாலையைப் பிரித்திருந்த
அடைமழை நிமிடங்களில்,
ஒருபுறம் நான்..
எதிர்புறம் நீ..

யாருக்கானப் பேருந்து முதலில் வந்தாலும் சரி,
உனைக் காண அனுமதிக்கும்
நிச்சயமில்லா மறு தருணத்திற்காக
நான் காத்திருக்க வேண்டியதுதான்!

உன்னையும் என்னையும்
இப்படி எதிரெதிர் திசையில் நிறுத்தி
வேடிக்கை பார்க்கும் விதியை
வேறொரு நாளில் நான் கட்டாயம்
பழி தீர்த்துக் கொள்வேன்!

இப்போதைக்கு..

நீயும்..
உன் உதட்டு நிறக் குடையும்..
இம் மாமழையும்..
இந்த இடத்தை விட்டு நீங்காமல்
என்னுடனே இருந்துவிடுங்களேன்!!

உன் முக லட்சணமோ,
இடை வளைவோ,
குளிரில் சிலிர்க்கும்
உன் மெல்லிய தேகமோ,
யாவுமே மங்கலானக் காட்சிகள் தான்!

எனினும்..

அவ்வப்போது..

எனது இருப்பை
உறுதிப்படுத்திக் கொள்ளும்
உன் கூரிய கண்கள் மட்டும்..
மழை விரித்த அடர் திரையைக்
கிழித் தெறியும்
அழகிய காதல் மின்னல்கள்!

Friday, October 9, 2015

புற்றுநோயை தூர வைக்கும் தூக்கம்

சூர்ய உதயம் மற்றும் அஸ்தமனத்தைச் சுற்றி இயங்க வேண்டிய உயிரினங்களில் மனிதர்களும் அடங்குவர். எட்டு மணி நேரம் தூக்கம் தானே, அது எப்பொழுது தொடங்கி எப்பொழுது முடிந்தால் என்ன என்று எண்ணி இரண்டு அல்லது மூன்று வரை விழித்திருந்துவிட்டு காலை பத்து பதினொன்று வரை தூங்கும் புத்திசாலிகளில் நானும் ஒருவன் தான். சரி இப்படிக் தூக்கம் கெட்டுப்போனால் என்ன ஆகிவிடப் போகிறது, மிஞ்சி மிஞ்சிப் போனால் தலை வலி வரும் என்று அலட்சியமாக இருந்து விடுகிறோம். ஆனால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை நாம் அதிமாக்குகிறோம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

Melatonin என்பது காரிருள் சூழ்ந்திருக்கும் வேளையில் நம்மில் சுரக்கும் ஒரு ஹார்மோன். அதன்படி பார்த்தால், அந்தக் காலத்தில், இரவு நேரங்களில் நம் மக்களுக்குள் இயல்பாகவே சுரந்திருக்கும். ஆனால் மின்விளக்குகளின் கண்டுப்பிடிப்பிற்குப் பிறகு, இருளின் நீளம் வெகுவாகக் குறைந்துவிட்டக் காரணத்தாலும், இரவு வாழ்க்கையென்றொன்றை நாம் பெருமையாக நினைக்கத் தொடங்கிய விபரீதத்தாலும் Melatonin தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதிலும், இந்த ஸ்மாட்போர்ன்கள் வந்த பிறகு, சொல்லவே வேண்டாம். இரவில் கண்விழிப்பதென்பது ஒரு தொற்று நோயாக மாறியிருக்கிறது. நண்டுச் சிண்டுகளெல்லாம் வாட்ஸ்ஆப் ஃபேஸ்புக்கால் தூக்கம் தொலைத்திருக்கின்றன. இது ஆரோக்கியமானதே அல்ல என்கிறது மருத்துவ உலகம்.

Melatonin ஹார்மோனில் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி அடங்கியுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறனர். ஆரம்ப நிலை புற்றுநோயாளிகள் இந்த ஹார்மோனை வாய்வழி மருந்தாக உட்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறார்கள். அப்படியிருக்க, நாம் தூங்குவதைத் தவிர்ப்பது அல்லது தாமதப்படுத்துவதன் மூலம் இந்த ஹார்மோன் சுரப்பிகளோடு மறைமுகமாக விளையாடத் தொடங்கியிருக்கிறோம். மேற்கத்திய நாடுகளில் உறக்கப் பிரச்சனைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ ஆலோசனைகளில் மிக முக்கியமானதொன்று, கருப்பு கண்ணாடிகள் அல்லது Eye Mask களை பயன்படுத்தச் சொல்வது தான். அது இருளை உறுதிப்படுத்தி Melatonin உற்பத்தியைச் சீர்ப்படுத்தும் என்பதுதான் அதன் பின்னனி. ஆனால் அதைப்பற்றிய விழிப்புணர்வு கொஞ்சம்கூட இல்லாமல், இரவு வாழ்க்கையொன்றை நமக்கு நாமே வகுத்துக்கொண்டு, புற்றுநோய்க்குப் பிள்ளையார்சுழி போட முயற்சிக்கிறோம்.

இது சம்மந்தமான, நீயா நீனா நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த டாக்டர் சிவராமனின் உரை அடங்கிய காணொளியை எனது ஃபேஸ்புக் பக்கத்தில்பகிர்ந்திருக்கிறேன். நேரமிருந்தால் பார்க்கவும்.

Wednesday, October 7, 2015

மெய்யுணர்தல் 10


இன்று காலை, வீட்டருகில் இருக்கும் ஒரு கடைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் ஒரு சிறுவன் தன் அப்பா முதுகில் உப்பு மூட்டையேறியிருந்தான். அவர்களும் வீட்டுச் சமையலுக்குத் தேவையான எதையோ வாங்க கடைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அந்த அப்பா கையில் தொங்கிய பாலித்தீன் கவரில் அப்படித்தான் ஏதோ தென்பட்டது. விஷயம் அதுவல்ல.

குளிரூட்டப்பட்ட BMW, Audi கார்களில் டிரைவர் ஓட்ட அதில் வெறும் பொம்மைகள் போல அமர்ந்து செல்லும் குழந்தைகளுக்கும், அடிக்கும் வெயிலில் இப்படி அப்பாவின் முதுகில் உணர்வுக்குவியலாக சிரித்துக் குலுங்கும் குழந்தைகளுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம். 

ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்வேன். பிறக்கும் குழந்தைகளில் எதுவும் தன் அப்பா பணக்காரனா ஏழையா என்பதெல்லாம் யோசிப்பதில்லை. நிச்சயம் அன்புமிகுந்தவனாக இருப்பான் என்ற ஒரே நம்பிக்கை தான் அவைகளுக்கு.


Monday, October 5, 2015

எங்கே போகிற தெந்தன் தேசம்!

பெற்றத் தாய் மீது கூட, தன் உத்தியோக அந்தஸ்தின் நிழல் பட்டுவிடக்கூடாது என்று மிக கவனிப்போடும் கண்ணியத்தோடும் இருந்த காமராஜர் வாழ்ந்த அதே மண்ணில் தான் இன்றைய அரசியலும் இயங்குகிறது என்று நினைக்கும் போது, இரண்டு விதமானச் சந்தேகங்களால் துளைக்கப் படுகிறேன். 

ஒன்று, காமராஜர் அப்படித் தான் வாழ்ந்தாரா என்ற சந்தேகம். 

மற்றொன்று, கொஞ்சம் பெரிது, காமராஜர் என்று ஒருவர் உண்மையிலே இருந்திருக்க முடியாமா என்ற சந்தேகம் அது. 

கொலைப் பழி சுமத்தப்பட்ட, உண்மையில் கொலை செய்த ஒரு குற்றவாளி, வரிசையாகப் பொய்ச் சாட்சிகளின் உதவியோடு விடுதலை ஆகும் போது, அந்த வழக்கை வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு, நிரபராதி (வழக்கு தொடுத்தவன் என வைத்துக் கொள்வோம்) மீது ஒரு வித கேவலமானச் சந்தேகம் எழும் பாருங்கள், அப்படிப்பட்டச் சந்தேகங்கள் இவை.

நியாய விலைக் கடைத் தராசின் பொருள் வைக்கப்படும் தட்டிற்கடியில் அந்நியாயம் ஒட்டிக் கிடக்கிறது. 

மத்திய அரசு, மாநில அரசு, ஆளுங்கட்சி, எதிர்கட்சியென தகுதிக்கேற்ற ஊழல் நடந்து கொண்டே தான் இருக்கிறது. 

பிறப்புச் சான்றிதழ் தொடங்கி இறப்புச் சான்றிதழ் வரை இன்னமும் பணத்தாள் கொண்டே தயார் செய்யப்படுகிறது. பத்திலும் இருபதிலும் ஆரம்பித்து இன்று ஆயிரங்களையும் லட்சங்களையும் கடந்து கோடிகள் வரை தொட்டு நிற்கிறது இந்த லஞ்சப் புழக்கம். 

பேசாமல், நடைமுறையில் இயங்குவதாகச் சொல்லப்படும் எல்லாத் துறைகளையும் இழுத்து மூடிவிட்டு, லஞ்சத்துறை, ஊழல்துறை என இரண்டே துறைகள் கொண்டு செயல்படலாம். 

இதையெல்லாம் மீறி, “இந்தியா மிளிர்கிறது” எனப் படிக்கும் சுவரொட்டிகளை எங்கேனும் காண நேர்ந்தால், 'குபுக்க்'கென்று சிரிப்பு வந்துவிடுகிறது.

'49-O'ஹோ

நமது ஊரில் நல்ல படைப்புகளுக்கு மரியாதையே கிடையாது. அந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கும் ஒரு மிக அவசியமான படைப்பு தான் ’49O’.

ஒரு பெரிய (நான் சொல்வது வியாபர ரீதியில்) நடிகர் நடித்திருந்தால் இன்னும் அதிகக் கவனம் பெற்றிருக்குமோ என்னவோ. ஆயிரம் தான் இருந்தாலும் கவுண்டமணியை காமெடியனாகத் தான் பார்க்கிறது தமிழ் உலகம். ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. இன்று அனல் பறக்க கதாநாயகர்கள் பேசும் பஞ்ச் வசனங்களின் சாரத்தை தொண்ணூறுகளிலேயே ஒரு துணை நடிகனாக அதுவும் காமெடியனாக தனக்கே உரிய நையாண்டியுடன் அனாயாசமாக பதிவு செய்தவர் கவுண்டமணி. அப்படி, காமெடியனாக நடிக்கும் போதே ஹீரோவாக ஜொலித்தவர், ஹீரோவாக நடிக்கும் படத்தில் சொல்லவா வேண்டும். பிண்ணியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில், தேர்தல் ஆணையத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் ஒரு புரட்சியை கவுண்டமணி தலைமை தாங்க, பத்தரிக்கையாளர்கள் அவரைத் தேடி வருகிறார்கள். அதில் ஒரு பத்திரிக்கையாளர், வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லையென்றால் NOTA பயன்படுத்தலாமேயென்று கேள்வி எழுப்புகிறார். அதற்குப் பதில் அளிக்கும் போது, ‘தேர்தலுக்கு முன் கருத்துக்கணிப்புனு ஒன்னு நடத்துறீங்க. இந்தக் கட்சிக்கு எவ்வளோ பர்சன்டேஜ், அந்தக் கட்சிக்கு எவ்வளோ பர்சன்டேஜ் னு கணக்குப் போடுற நீங்க, என்னக்காவது NOTA க்கு எவ்வளோ பர்சன்டேஜ் னு வெளியிட்டிருக்கீங்களா. NOTA வ நீங்களே இருட்டடிப்பு செஞ்சுட்டு, NOTA னு சொன்னா சாமானியனுக்கு NOTA வ பத்தி என்னமா தெரியும் னு பாயுறாரு. இதெல்லாம் தியேட்டரில் விசிலடிச்சு பார்க்க வேண்டிய காட்சி. ஒரு தவறை மறைக்க இன்னுமொரு தவறு புரிவது போல, NOTA இருட்டடிப்பைக் கேள்வி கேட்கப் போய் 49Oவும் பத்திரிக்கை உலகால் இருட்டடிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

முன்னமே சொன்னது போல, ஒரு பெரிய நடிகர் நடித்திருந்தால் அதிகக் கவனம் பெற்றிருக்கலாம். ஆனால் படம் பிரச்சனையில்லாமல் வெளியாகியிருக்குமா என்பது வேறு விஷயம். நாட்டில் ஜனநாயகத்தின் நிலையப்படி.

அதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடக்கும் இன்னுமொரு சுவாரஸ்யமான உரையாடல் தான் நினைவி்ற்கு வருகிறது.

சரி, NOTA ஜெயிச்சா என்ன ஆகும்?

மறுதேர்தல் வரலாம்!

அப்படி மறுதேர்தல் வந்தா, நாங்க நிராகரிச்ச வேட்பாளர்கள் நிக்க மாட்டாங்களா?

அது எப்படி சார் தேர்தல் ஜனநாயகமாகும்?

ஏன்மா.. ஒரு லட்சம் பேர் உணர்வுக்குக் கிடைக்காத ஜனநாயகம், வேண்டாம்னு சொல்ற நாலு வேட்பாளர்களுக்குக் கிடைக்குதுனா, அப்புறம் எதுக்குமா அந்தப் பொம்மக் கத்தி?

திரைக்கதையில் ஆங்காங்கே சின்னதாகச் சொதப்பியிருந்தாலும், வசனங்களில் கலக்கியிருக்கிறார் இயக்குனர் ஆரோக்கியதாஸ். உதாரணமாக, இவ்விரு வசனங்களை மட்டும் பகிர்கிறேன்.

“எவன தலைவன் ஆக்கணும்னு உங்களுக்கும் தெரியல, தலைவன்னா எப்படியிருக்கணும்னு அவங்களுக்கும் தெரியல, போங்கட டேய்!”

“உலகம் முழுக்கச் சொல்லலாம், வருங்காலத்த வாழ்றதுக்கு மாத்திர வரும்னு. ஆனா அந்த மாத்திரைய திண்ணுட்டு எத்தனக் காலத்துக்கு உயிர் வாழ முடியும். மண்ணுல விளையுறத திண்ணாதான் மண்ணு கடைசியில நம்மளத் திண்ணும். அத விட்டுட்டு மருந்து மாத்திரைய திண்ணீங்கனா அந்த மண்ணு கூட உங்கள திங்காது. வாந்தி எடுத்துரும்”

மொத்தத்தில், உழவையும் உழவர்களையும் கொன்ற இடத்தில் எழுப்பட்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் குற்றவுணர்ச்சியோடுப் பார்க்க வேண்டிய திரைப்படம் தான் இந்த ’49O’.

Wednesday, September 30, 2015

கைய புடிச்சு இழுத்தியா பா?

அவசரமா பஞ்சாயத்தக் கூட்டிருக்கீங்க.. என்ன விவகாரம்?

அது வேற ஒன்னும் இல்லைங்கைய்யா.. இத்தன நாளா நம்ம மோடி ஊர்ல இல்ல..

அதான் தெரிஞ்ச விஷயமாச்சே!

அட அது இல்லைங்கையா.. நம்ம ஊரு நிம்மதியா இருந்துச்சு. நேத்து தான் வந்தான். வரும்போதே ஒரு பிரச்சனையோட வந்துட்டான்.

என்ன பிரச்சன?

அதே நிக்குதே மூதேவி.. அதோட பிரச்சன தான். ஃபேஸ்புக் ஓனர் காமிராவ மறைக்குறான்னு சொல்லிட்டு, கைய பிடிச்சு இழுத்துட்டான்.

ஏற்கனவே டிஜிட்டல் இந்தியாக்கு சப்போர்ட் பண்ற மாதிரி நம்மள அவனுங்க கலாய்ச்சுபுட்டானுங்க. இதுல இந்த தகராறு வேறயா?

ஏம்பா தம்பி, அந்த மார்க்க கைய பிடிச்சு இழுத்தியா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

மார்க்க கைய பிடிச்சு இழுத்தியா பா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா பா?

ஏன் தம்பி.. மார்க் தம்பிய கைய பிடிச்சு இழுத்தியா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

ஏற்கனவே டிஜிட்டல் இந்தியானு சொல்லி நம்மாளுங்க ப்ரொபைல் பிக்சருக்கு தேசியக்கொடிச் சாயம் பூசி அவனுங்க கலாய்ச்சுபுட்டானுங்க.

என்ன கலாய்ச்சுபுட்டானுங்க?

ஏன்யா.. நான் சரியா பேசுறனா?

சரியாத்தான் இருக்கு.

இப்ப நீ கைய பிடிச்சு இழுத்ததுனால புதுசா யோசிச்சு கலாய்ப்பானுங்க.

என்ன கலாய்ப்பானுங்க?

ஏன்யா நான் சரியா பேசுறனா?

ரொம்ப கரெக்ட்!

டூர விட்டுறு..

என்ன டூர விட்டுறு?

மார்க்க கைய பிடிச்சு இழுத்தியா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

என்னயா நினைச்சுட்டு இருக்கான் அவன்?

அவன் பயங்கராமான ஊர் சுத்தி மங்கன். வேறெங்கேயும் பறக்குறதுக்கு முன்னாடி கேப் விடாம பேசுங்க.

என்ன கேப் இல்லாம பேசுங்க?

நான் பேசுறது உனக்கு புரியுதாயா? புரியுதாயா.. உனக்கு புரியுதாயா?

கைய பிடிச்சு இழுத்தியா டா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா டா?

இரு டா தண்ணி…

என்ன இரு டா…..

கைய பிடிச்சு இழுத்தியா டா?

டேய் உன்னால நான் அடி வாங்குறேன் டா..

எதையாவது புடிச்சு இழுத்தியா டா… ஏன்யா உயிர வாங்குற..

கைய பிடிச்சு இழுத்தியா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

கைய பிடிச்சு இழுத்தியா டா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா டா?

ஐயா உக்காந்து பேசலாம் யா..

இந்த மாதிரி மொள்ளமாரி பயலுக்கெல்லாம் பஞ்சாயத்து பண்ண கூப்பிடாதீங்க.. மனுஷனா இவன்..

என்ன மனுஷனா இவன்?

ஐயா… கோவப்படாதீங்க!

என்ன கோவப்படாதீங்க?

பொறுமையா இருங்க!

என்ன பொறுமையா இருங்க?

வீட்டுக்குப் போங்க!

என்ன வீட்டுக்குப் போங்க?

ஐயா நீங்களே இப்படி..

என்ன நீங்களே?

ஐயா!!

என்ன ஐயா?

ஐயா!!!

என்ன ஐய்யயா??

ஐயோ.. தலையே குழம்பிட்டாரே!!

ஏம்பா.. நோக்கு சந்தோஷம் தானே.. நல்லாயிருந்த மனுஷன இப்படி பண்ணிட்டியே?

என்ன இப்படி பண்ணிட்டியே?

திரும்ப திரும்ப பேசுற நீ!

என்ன திரும்ப திரும்ப பேசுற நீ?

திரும்ப திரும்ப பேசுற நீ!

என்ன திரும்ப திரும்ப..

திரும்ப திரும்ப பேசுற நீ!

திரும்ப திரும்ப பேசுற நீ!

திரும்ப திரும்ப பேசுற நீ!

திரும்ப திரும்ப பேசுற நீ!

திரும்ப திரும்ப பேசுற நீ!

திரும்ப திரும்ப பேசுற நீ!

ஏம்பா.. தலைவர் தப்பிச்சுட்டாரு… ஐயர் போயே போய்ட்டாரே!!

என்ன போயே போய்ட்டாரே?

ஐயோ ஆள விடு!!

ஹப்பாடா.. மறைக்க ஒரு பயலும் இல்ல.. இப்போ எடுத்துட்டு வாங்கடா காமிராவா.. மோடியா.. கொக்கா… யார் கிட்ட..

Friday, September 25, 2015

Marsல் இருந்து மங்கள்யான்!

நவம்பர் 5, 2013 எழுதிய பதிவிலிருந்து..

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கானச் சாத்தியங்களை ஆராய உருவாக்கப்பட்ட இந்தியாவின் 450 கோடி ரூபாய்ச் சொத்து இன்று பிற்பகல் 2:38 மணிக்கு சும்மா ஜொய்ங்குனு கிளம்பிருச்சுங்கிறது தான் செய்தி. அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் இந்த மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை அடையும் என்பது கணிப்பு. அப்படி நடக்கையில், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய கூட்டமைப்பைத் தொடர்ந்து, மார்ஸ் மிஷனை வெற்றிகரமாக முடித்துக் காட்டிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட நாற்பது முயற்சிகளில் சீனாவின் முயற்சி உட்பட மொத்தம் இருபத்து முன்று முயற்சிகள் மண்ணைக் கவ்வியிருக்கின்றன என்ற உண்மை இந்த மிஷன் எவ்வளவு சவாலானது என்பதை ஒரளவிற்கு உணர்த்தவே செய்கிறது.

செப்டம்பர் 25, 2015 – இன்று

மங்கள்யான் செவ்வாய் கிரகச் சுற்றுப் பாதையை அடைந்து நேற்றோடு ஒரு வருடம் நிறைவானது. 2013 நவம்பர் 5ஆம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்டிருந்தாலும் நவம்பர் 29 வரை பூமியின் சுற்றுப்பாதையிலே இருந்து தனது அடுத்தக்கட்ட மிக முக்கியப் பயணத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டு, இந்திய நேரப்படி நவம்பர் 30 காலை 5:30 மணிக்கு தனது செவ்வாய் கிரகப் பயணத்தை தொடங்கிய மங்கள்யான், 298 நாட்கள் விண்ணில் பயணித்து செப்டம்பர் 24, 2014 ஆம் தேதி செவ்வாய் கிரகச் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது.

மங்கள்யானின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை கொண்டாடும் வகையில், இந்த ஒரு வருடத்தில் மங்கள்யான் எடுத்த சில புகைப்படங்களை ISRO “Mars Atlas” என்ற தொகுப்பாய் வெளியிட்டுள்ளது. அதை தரவிறக்கம் செய்ய விரும்புவோர் இங்கே க்ளிக் செய்யவும்.

வெல்டன் மங்கள்யான் and டீம்!

கூடுதல் செய்தி:

ISRO தனது செவ்வாய் கிரக ஆராய்ச்சியின் இரண்டாம் கட்டத் திட்டமான மங்கள்யான் 2 விண்கலத்தை 2018-2020 ல் செவ்வாய் கிரகச் சுற்றுப்பாதையில் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை, அது செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கவும், NASA வின் Curiosity போன்றதொரு Mars Rover ஐ நிறுவவும் திறன் கொண்டிருக்கும்.

Wednesday, September 23, 2015

எங்கே போகிற தெந்தன் தேசம்!

#1
சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில் வேலை வாய்ப்பின்மையின் விகிதம் கூடியிருப்பதற்குக் காரணம் எல்லா துறைகளிலும் பெண்கள் பணிபுரியத் தொடங்கியதே என்ற கேவலமானக் கருத்தை பத்தாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் பதிவிட்டிருக்கிறது சட்டிஸ்கர் மாநில இடைநிலைக் கல்விக் குழு.

நாட்டின் மொத்த ஸ்டீல் உற்பத்தியில் முக்கியப் பங்களிக்கும் ஒரு மாநிலத்திலிருந்து இப்படி ஒரு துருப்பிடித்தக் கருத்து.

#2
நாட்டின் பிரபலமான பத்திரிக்கைக் குழுமங்களின் ஒன்றான குமுதம் தனது சமீபத்திய ரிப்போர்ட்டர் பதிப்பின் முதல் பக்கச் செய்தியாக எடுத்துக்கொண்டிருக்கும் விஷயமும் அதை கையாண்டிருக்கும் விதமும் மிகவும் கீழ்த்தரமாகத் தெரிகிறது. “லெகின்ஸ் ஆபாசம் – எல்லை மீறும் இளசுகள்” என்ற வரிகளோடு அட்டையில் அவர்கள் பயன்படுத்தியிருக்கும் புகைப்படம் பெரும் கண்டத்திற்குள்ளாகி வருகிறது.

பெண்ணுரிமை பெண்சுதந்திரம் மகளிர் மேம்பாடு என ஒரு பக்கம் வாய்கிழியப் பேசிக் குவிக்கும் பத்திரிக்கைத்துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் குமுதம் இப்படிச் செய்திருப்பது, என்னதான் முற்போக்குச் சிந்தனையாளர்களாக வெளியில் காட்டிக் கொண்டாலும், இன்னமும் ஓர் ஆணாதிக்கவாத, குறுகிய மனப்பான்மையுடையச் சமூகமாகத் தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையே உணர்த்துகிறது.

காற்று வீசும் ஏதோவொரு நொடிக்காக, எங்கோ தொலைவில் ஒளிந்துக் காத்திருந்த வக்கிரப் புத்திக்காரர்கள் கையில் இயங்கிய கேமிராக்கள் கண் சிமிட்டியதில் சிக்கியக் காட்சிகளை இப்படி வியாபாரம் செய்ய முயற்சி செய்திருக்கும் குமுதத்திற்கும், பிரபல நடிகைகள் குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரும் அயோக்கியனுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாய் தெரியவில்லை. இதில் உச்சக்கட்ட வேதனை என்னவெனில், குமுதத்தின் இச்செயலை கண்டித்து சமூக வலைத்தளங்களில் உலவும் பதிவுகளின் பின்னூட்டங்களில் சில ஆண் (அ)சிங்கங்கள் வெட்கமே இல்லாமல் கர்ஜித்திருப்பது தான்.

காலம் காலமாக வயக்காட்டில் கோவணத்தோடு வேலை செய்யும் ஒரு விவசாயியை எந்தப் பத்திரிக்கையும் இப்படிக் கேள்வி கேட்டதாய் நினைவில் இல்லை. எந்தெந்த வேலைக்கு எந்தெந்த உடை யார் யாருக்குச் சௌகரியமோ, அதை அவர்கள் அணிந்துக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக உடையென்பது உடுத்துபவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. நீ இதை அணி, நீ அதை அணியாதே என்று சொல்ல இங்கு யாருக்கும் உரிமை கொடுக்கப்படவில்லை. பெண்களைக் கேள்வி கேட்கும் இத்தகைய கீழ்த்தரமான வாய்ப்பிற்காகக் காத்திருக்காமல் அவர்களை மதிக்கப் பழக வேண்டும் இச்சமுதாயம், குறிப்பாக ஆண்கள். என்னைப் பொருத்தவரையில் அதில் தான் உண்மையான ஆண்மையும் வாழ்கிறது.

பை தி வே, நீண்ட நாட்களாகவே தினசரி நாட்டு நடப்புகளில் என்னை பாதிக்கும் செய்திகளை, அதன் மீதான எனது விருப்பு வெறுப்புகளை எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்ததன் விளைவு தான் இந்த ‘எங்கே போகிற தெந்தன் தேசம்’. தொடர்ந்து எழுத முடியும் என்ற நம்பிக்கையில் தொடங்கியிருக்கிறேன்.

Tuesday, September 22, 2015

தேவதைகளின் இளவரசி – 11

உலகின் மிக
அழகான கைவிலங்கு,
அயன்றுறங்கும் மகளின் கைகளால்
பிண்ணப்படுகிற தென்பதை
உணரச் செய்த நேற்றைய இரவில்..
ஆயுளுக்கும் கைதியானேனடி!

Monday, August 24, 2015

பிரிவென்னும் மாயை!!

எல்லோரும் நீ
ஊருக்குப் போயிருக்கிறதாக
இன்று காலை பேசிக்கொண்டிருந்தார்கள்..
எனக்குச் சிரிப்பு தான் வந்தது!

நேற்று மாலை கூட,
அடுப்பில் எனக்கானத் தேனீர்
நுரைத்துக் கொண்டிருக்க,
அருகில் நின்றபடி எனைப் பார்த்துப்
புன்னகைத்தாய் எனச்
சொல்லியிருப்பேன் அவர்களிடம்..
நமக்கென்ன வந்ததென்று விட்டுவிட்டேன்!

தினம் நான் குளித்து
தலை துவட்டிக்கொண்டிருக்க,
எனது விருப்பமான பர்ஃப்யூமை
மேஜை மீதெடுத்து வைப்பது..

நீ வழக்கமாய் விரும்பிக்
கேட்கும் பாடல்கள் கொண்டு,
நமது காரை நிரப்பி
அலுவலகம் வரை உடன் பயணிப்பது..

அந்தி சாய்ந்திட,
நேரமாச்சு.. போய் அவளை
அழைத்து வா! என
என் காது மடலில் முத்தமிடுவது..

வீடே உறங்கிவிட்ட நேரத்தில்,
இரவு உணவை நான் முடிக்கும் வரை
தனிமையைத் துரத்தி
அருகிலேயே அமர்ந்திருப்பது..

அவ்வளவு ஏன்..
நள்ளிரவு பெய்யும் பேய் மழையினூடான
ஓரிரு இடிச் சத்தத்திற்கு
என்னை இறுக்கப் பிடித்துக் கொள்வது..

இதெல்லாம் யாராம்?

எனக்குத் தெரியும்..
நீ இன்னும் என்னோடு
இதே வீட்டில் தான்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறாய்!

எனக்கு மட்டுமே தெரியும்!!

Tuesday, August 18, 2015

மனிதம் வளர்ப்போம் 2

தாம்பரம் வேளச்சேரி சாலையில் செம்பாக்கத்தையடுத்து கௌரிவாக்கத்தில் பஞ்சமுக ஆஞ்சிநேயர் கோயில் உள்ளது. அம்மாவாசை நாட்களில் அங்கு தேங்காய் கட்டுதல் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வு. பக்தர்கள் தம் மனதில் நினைக்கும் காரியங்கள் நிறைவேற வேண்டி மாதந்தோறும் அம்மாவாசையன்று தேங்காய் கட்டி வந்தால், வேண்டிய காரியம் கைக்கூடும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு அம்மாசையன்று தேங்காய் கட்டும் முன்பும், முந்தைய அம்மாவாசையன்று கட்டிய தேங்காயை அவிழ்த்து உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை வீட்டிற்கு எடுத்து வந்து சம்மந்தப்பட்டவர் உணவில் சேர்த்துக் கொள்வது வழக்கம்.

கடந்து வெள்ளிக் கிழமை அலுவலகம் முடித்து அக்கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு அம்மா தன் மகன் பெயரில் அர்ச்சனை செய்து தேங்காய் கட்ட வந்திருந்தார். அர்ச்சகர் தேங்காயை பெற்றுக் கொள்ளவும் பெயர் நட்சத்திரம் ராசி அனைத்தையும் சொல்லி முடித்தார். “வேண்டுதல் சொல்லுங்கோ” என்றார் அர்ச்சகர். மென்று விழுங்கி “நீங்களே நல்லதுக்கு பண்ணுங்க” என்றாள் அந்தத் தாய். “வேண்டுதல் எதுவும் இல்லையா, சொன்னா பண்ணிடலாம்” என வற்புறுத்த அவளும் பெருந்தயக்கத்துடன் சுற்றியிருப்பவர்களுக்குக் கேட்காத அளவில் ஏதோ கிசுகிசுத்தாள்.

அர்ச்சகர் தன் பங்கிற்கு, “சர்வ கெட்ட பழக்கம் நிவர்த்தி சித்திரத்தம்” என்று உரக்கச் சொல்ல, மொத்தக் கூட்டமும் ஒரு நொடி அந்தத் தாயை தரிசித்துத் தலை குனிய வைத்தது.

உயிரைக் காக்க வல்லவர்களான மருத்துவர்கள் கைவிரிக்கும் வேளையில் மக்கள் தேடிப் போவது கடவுளைத்தான். ஆனால் அவர்களால் அதிகபட்சம் நெருங்க முடிவது இதுபோன்ற அரைவேக்காடு அர்ச்சகர்களைத் தான்.

தலைக்குனிவிற்கு என்னதான் மகன் காரணமென்றாலும், அந்த அர்ச்சகரையும் மன்னிக்க மறுக்கிறது மனம்

Thursday, August 13, 2015

பிரிவுத் தூது!!

நேற்றெனது கனவில்,
தூதேந்தி வந்த தேவதை ஒன்று,
ஒரு துண்டுச் சீட்டை
என் கைகளில் திணித்து இறந்துப் போகிறது!

சகுனமே சரியில்லையேயென்று
பிரித்துப் படிக்க முயற்சிக்கிறேன்..

ஏதும் எழுதப்படாதொரு
வெள்ளைக் காகிதகக் கிழியலது!

குழம்பிப் போய் நின்றிருக்க,

காகிதம் மீது
எழுத்துகள் முளைக்கின்றன
ஒவ்வொன்றாய்..

தொலை தூரம் கடந்து செல்ல
கொடும் பிரிவு வந்து சேரும்!

அருகாமை நிலவு நீங்கி
உன் இரவு வான் ஊனமாகும்!

உணவென்பதே பிடிக்காது!
உறக்கமா அது இனி ஏது?

காலங்கள் கரையாமல்
நான் பார்த்துக் கொள்வேன்!

நாள் தோறும் குறையின்றி உனை..
நானே கொல்வேன்!

காத்திரு..! காத்திரு..!!

எழுத்துகள் மறைந்து..
மீண்டும் அதே வெள்ளைக் காகிதம்,
துண்டுச் சீட்டாய்..
என் கைகளில் திணிக்கப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு,
இறந்துப் போன தேவதை உயிர்த்தெழ..
அதனோடு பறந்துப் போகிறது!

நான் விழித்துக் கொள்கிறேன்!!

Tuesday, August 4, 2015

மதுவிலக்கு – ‘மதி’விலக்கு

நமக்கு நினைவு தெரிந்ததலிருந்து குளிக்காமல் கொள்ளாமல், எப்பொழுதும் அழுக்காய், குடும்பத்திற்கு பத்து பைசாவிற்கும் பிரயோஜனம் இல்லாமல் தறுதலையாக ஊர் சுற்றி, எந்நேரமும் குடியும் கும்மாளமுமாய் இருந்த ஒருவன் திடீரென ‘நான் திருந்தி வாழப் போகிறேன்’ என்று எத்தனையாவது முறையென்றே தெரியாத அத்தனையாவது முறை சொன்னால், நாம் அவனை எப்படி அணுகுவோமோ, அப்படித்தான் நம்மை வெளியுலகம் அணுகுகிறது.

மேலும் இந்தப் போராட்ட முறைகள் எல்லாம் ‘என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் இவர்கள் செய்கிறார்களா?’ என்ற கேள்வியைத் தருகிறது. சரக்கு பாட்டில்களை உடைப்பதினால் சரக்கு வேண்டுமானால் தீர்ந்து போகும், சரக்குக்கு அடிமையானவர்கள் எப்படித் தீர்ந்துப் போவார்கள்?

மதுவிலக்கு நல்ல விஷயம் தான். மதுவிலக்கு எவ்வளவு முக்கியமோ அதை விடவும் முக்கியம் ‘மதி’விலக்கு. அதாவது நம்மாட்களின் மழுங்கிய புத்தியை சுத்தப்படுத்தி அதில் சரியானச் சிந்தனைகளை விதைப்பது. மதிவிலக்கு இல்லாத மதுவிலக்கு வெறும் கண்துடைப்பாகவே அமைந்து விடும்.

என்னதான் டாஸ்மாக்குகள் ஒழிந்தாலும், நகரத்தின் காஸ்ட்லி ஏசி பார்கள், நவநாகரீக கேளிக்கை விடுதிகள், மது பரிமாறும் நட்சத்திர ஒட்டல்கள் தொடர்ந்து இயங்கத்தான் போகின்றன, காசு படைத்தவன் குடிக்கத்தான் போகிறான்.

ஏற்கனவே, இந்தியாவில் நடக்கும் அக்கிரமங்களுக்கு பாலியல் வறட்சி ஒரு காரணமாகிவிட்டது. பாட்டில் வறட்சி என்றொன்று உருவாகி அதனால் அக்கிரமங்கள் கூடாமல் இருந்தால் சரி.

குடி குடியைக் கெடுக்கும் என்பது மாறி, குடிக்க முடியாதவன் குடிப்பவனின் குடியை கெடுக்கும் நிலை வந்துவிடக் கூடாதென்கிற அச்சம் தான்.

மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு நான் சொல்வது புரியும். Sudden withdrawal of drugs, அதாவது நீண்ட காலமாய் உட்கொள்ளப்பட்டு வந்த ஒரு மருந்தை சட்டென்று பயன்பாட்டிலிருந்து நீக்குவது, மிகவும் அபாயகராமான முடிவுகளைக் கொடுக்கும் என்று சொல்வார்கள். அது உடல்ரீதியாகவும் இருக்கலாம் மனரீதியாகவும் அமையலாம். இந்த விதி Alcohol க்கும் பொருந்தும்.

டாஸ்மாக் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் எண்ணத்தை விடுத்து, முதல்கட்டமாக, குடியிருப்பு, மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகிலிருக்கும் மதுபானக் கடைகளை களைவது, அடுத்து, டாஸ்மாக்குகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைப்பது, பிறகு, அலுவலகங்களில் எப்படி யாருக்கும் தொந்தரவில்லாத விதம் ஒதுக்குப்புறமாய் Smoking Zone அமைத்திருக்கிறார்களோ அதுபோல ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்குப்புறமாய் ஒரு பகுதியை தீர்மாணித்து டாஸ்மாக்குகளை அங்கு இடம் மாற்றுவது போன்ற நடைமுறைக்குரிய நடவடிக்கைகளில் இறங்குதல் உத்தமம்.

Monday, August 3, 2015

தேவதைகளின் இளவரசி – 10

என் மகள் அழைக்கச் சொன்னதாக என் அலைப்பேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது.

விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென ஒரு அலைபேசியை எடுத்து வந்து தன் அம்மாவிடம் கொடுத்து, “halllo… baa.. vaavaavaavaa” என்றிருக்கிறாள்.

ஸ்பீக்கர் போடச் சொல்லி, நான் அவள் பெயரை உச்சரித்து, ‘குட்டி.. என்னடா பண்ற.. என்னை தேடுறியா.. baa சீக்கிரம் வந்துட்றேன்..’ என்று ஏதோ அவள் புரிந்துக் கொள்வாள் என்பது போலவே பேசுகிறேன்.

அவளும் புரிந்துக் கொண்டது போலவே ஒரு ‘ஹ்ம்ம்!’ சொல்கிறாள்.

சில நாட்களுக்கு முன்பொரு பதிவில் என் இந்த வாழ்க்கையை மொத்தமும் இயக்கி ஆள்பவளாய் அதுவும் வேகமாய் மாறி வருகிறாள் என்று எழுதியிருந்தது நினைவிற்கு வந்து போகிறது.

வார்த்தைகளை அடுக்கி
வாக்கியங்கள் செய்துக் கொண்டிருப்பது வெறும் தேகம் தான்!

உணர்வுகளெல்லாம்..
அக்கணமே புறப்பட்டுவிட்டன,
அவள் தேடுதலுக்கோர் முற்றுப்புள்ளியை முதுகில் சுமந்தபடி!

Tuesday, July 28, 2015

Kalam Lives Forever!!

நேற்று மாலை செய்தி கேட்டதிலிருந்து எனது வருத்தங்களாய் Facebookல் நான் எழுதியவை, எழுதிக்கொண்டிருப்பவை..

கலாம் அவர்கள் பற்றி பேச, பகிர, தெரிந்துக் கொள்ள, பின்பற்ற இன்னும் எவ்வளவோ மிச்சமிருக்கின்றன. அவற்றை நேரம் கிடைக்கும்போதெல்லாம், இதயம் கேட்கும்போதல்லாம் எனது அனுபவங்களாய் இந்தப் பதிவில் இணைக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன்.

நீங்களும், விருப்பமிருந்தால், பின்னூட்டங்களாய் இட்டுச் செல்லுங்கள்.

கலாம் ஃபார் ஷ்யூர் வில் லிவ் ஃபாரெவர்!!

#1
கலாம் ISROவின் உறுப்பினராக எப்படியும் தொடரத்தான் போகிறார்.
Indian –> Indhiraloga

#2
தீர்ந்துப் போனது..
காலம் மட்டும் தான்!
கலாம் அல்ல!!

#3
In a nation which celebrates democracy, for having done just his duty in a position that is absolutely ‘for the people’, one remembered, by all, as below, speaks volumes about how genuinely clean, unparalleled and unaffected the person has been throughout on otherwise acutely corrupted grounds.

Kalam, the people’s President??

To me, he is the first REAL President.

#4
அப்துல் கலாம் அவர்களை விரும்பாதவர்கள் என இத்தேசத்தில் யாரும் இருத்தல் சாத்தியம் இல்லை என்பதே ஒரு ஆசிரியர், தலைசிறந்த விஞ்ஞானி, முன்னாள் ஜனாதிபதி என்பதையெல்லாம் மீறிய எவ்வளவு சிறந்த எளிய மனிதராக அவர் வாழ்ந்திருக்கிறார் என்பதை விளக்குகிறது.

#5
பள்ளியிலாகட்டும், கல்லூரியிலாகட்டும், ஆரம்பக் கால அலுவலக வாழ்கை வரை, ஏன் இன்றும் கூட எப்போதாவது அது தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.

உங்களுக்கெல்லாம் அப்துல் கலாமை, பெயரளவிலாவது, எந்த வயதிலிருந்து தெரியும்?

அவருடைய முதல் அறிமுகம் அவரை யாராகக் காட்டியிருக்கிறது?

ஒரு நாளில், அதிகபட்சமாக, சுமார் எத்தனை முறை அவர் பெயரை, நீங்களோ அல்லது மற்றவர்கள் உங்களிடமோ சொல்லி கேட்டிருக்கிறீர்கள்?

இந்த மூன்று கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் விடைகளுக்கும் என் விடைகளுக்கும் இடையேயான தூரம் அவர் கண்டுப்பிடித்த ஏவுகணைகள் இதுவரை கடந்திருக்கும் தூரமாகக்கூட இருக்கலாம்.

அவர் APJ

நான் ABJ

Wednesday, July 22, 2015

மெய்யுணர்தல் 9 (Golden Childhood)

ஸ்கூல்ல படிக்கும் போது, ‘இரண்டு மணிநேரத்துல திருப்பி குடுத்துட்றேன்’னு ஃபிரண்ட்கிட்ட இரவல் வாங்கி வேக வேகமா வீட்டுக்கு எடுத்துவந்து, மாடியில ஒரு ஓரமா உட்கார்ந்து, ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ணாம அந்த கை வீடியோ கேம்ல அப்படி விளையாடியிருக்கேன். இன்னைக்கு மார்க்கெட்ல இருக்குற எந்தவொரு ஸ்மார்ட் ஃபோன், பிளேஸ்டோர்ல கொட்டிக் கிடக்குற எந்தவொரு அதிநவீன கேம்னாலயும் கொடுக்க முடியாத சந்தோஷம் அது.

எதுவுமே இல்லாத காலத்தில் எல்லாமும் இருப்பது போல கொண்டாடிய நமது குழந்தை பருவம், எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதவர்கள் போல முகம் கவிழ்த்து நிற்கும் இன்றைய குழந்தைகளை தத்தெடுக்கவும் முடியாமல் தவிக்கிறது.

என்ன செய்ய..

பழுதுபார்த்தும் பயனில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது இந்த வாழ்க்கை.

கடைசிப் பொற்காலக் குழந்தைகள் நாம்.

Tuesday, July 21, 2015

திரைப்படங்களில் ‘புகை’ தவிர்?

திரைப்படங்களில் புகை மது ஆகியவற்றை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வதில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை.

ஒரு ராணுவ அதிகாரி, எல்லையில் ஊடுருவல்களை தடுத்து, நாட்டையும் அதன் மக்களையும் எப்படிக் காப்பாற்றுகிறான் என்பது போன்ற தேசப்பற்று மிக்க மயிர் கூச்செரியும் காட்சியமைப்புகள் கொண்ட திரைப்படங்கள் எவ்வளவோ வந்து போயும், எப்படியாவது ராணுவத்தில் சேர்ந்து தாய் நாட்டை காப்பாற்றியே தீருவேன் என எவனும் எல்லைக்கு ஓடியதாகத் தெரியவில்லை.

மாரி போன்ற படங்களில், லோக்கல் தாதாக்களை, தினம் எழுந்ததும் குளித்து முடித்து, நெற்றியில் பொட்டு வைத்து, நெய் வடிய பொங்கல் திங்கும் ஸ்மால் பாயாகவா காட்ட முடியும்? அப்படித்தான் என்றால் புதுப்பேட்டை போன்ற காவியமும், செல்வராகவன் போன்றதொரு படைப்பாளியும் இன்று தமிழ் திரையுலகிற்கு கிடைக்காமலேயே போயிருக்கும்.

பிரம்பு, துப்பாகிகள் எல்லாம் வன்முறைக்கு வழிவகுக்கும் என்று சொல்லி, நாட்டையே உலுக்கிய ஒரு பயங்கர குண்டு வெடிப்பு வழக்கில் கைதியான ஒருவனை போலிஸ் கதாப்பாத்திரங்கள் சுற்றி நின்று ஆளாளுக்கு கிச்சு கிச்சு மூட்டியே உண்மையை வரவழைக்கும் ஒரு கொடூரக் காட்சியை இதுவரை உலக சினிமாவில் எங்குமே படமாக்கப்படவில்லை என்ற நிலையை மாற்றியமைப்போமோ?

சும்மா போங்க சார். கெடுற புள்ள கே.பி.சுந்தராம்பாள் புள்ளையா இருந்தா கூட கெடும்.

Tuesday, July 14, 2015

தேவதைகளின் இளவரசி – 9

விவரம் சரிவர தெரியாத வயதில் ஒரு தட்டில் பத்து பதினைந்து சாக்லெட்டுகள் போட்டுக் கொடுத்து வீட்டிற்கு வருபவர்கள் முன் நீட்டச் சொல்வார்கள் அம்மா.

இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு, நூறு காரமில்க் சாக்லெட்டுகள் வேண்டும் என்று அடம்பிடித்துக் கேட்டு வாங்கி, பள்ளியில் என் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்பு வகுப்புாய் சென்று பிற ஆசிரியர்களுக்கும் கொடுத்திருக்கிறேன்.

அதுவே, கொஞ்சம் மீசை அரும்பத் தொடங்கியதும், மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் பள்ளி முடிந்து திரும்புகையில் ரோஸ் மில்க் வாங்கித் தருவதாக மாறியிருந்தது.

கல்லூரியிலோ, நடுச்சாமக் கோவைக் குளிரில், தங்கியிருந்த வீட்டின் மொட்டை மாடியில் கேக் வெட்டி பெப்சி குளியலோடு முடிந்திருக்கிறது.

பிறகொரு கட்டத்தில், காதலியின் சர்ப்ரைஸ் அன்பளிப்புகள், பின் அதே காதலி மனைவியாகி நாள் முழுதுமானச் சின்னச்சின்னக் கொண்டாட்டங்களென பருவங்கள் தோறும் இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மாறிக் கொண்டே வந்துவிட்டது.

இருப்பினும், எந்தவொரு பிறந்தநாளும் கடந்த இரண்டு வருடங்கள் போல இருந்ததில்லை. கடந்த வருடம் அவள் பிறந்து பதினான்கு நாட்களே. இம்முறை என் விரல் கோர்த்து கொஞ்சம் நடக்கிறாள். என் இந்த வாழ்க்கையை மொத்தமும் இயக்கி ஆள்பவளாய் அதுவும் வேகமாய் மாறி வருகிறாள்.

அவள் வந்த பிறகு,
பிறந்தநாளில் உள்ள இறந்த காலம்
இறந்து விட்டதாகத் தோன்றுகிறது.

அவளோடு இனி எல்லாமே..
பிறக்கும் நாட்கள் தான்!