Thursday, November 28, 2013

ஐ.டி வேலை

ஐந்து வருடத்திற்கு முன்பு அந்தக் கேள்வியை நம்மிடம் கேட்டவர்கள் எல்லாம் இப்போது நாம் ஐ.டியில் கைநிறைய சம்பளம் (சிலருக்கு வாய் நிறைய வருமே.. புரிகிறது..) வாங்குவதைப் பார்த்து அமைதியாகிவிட்டார்கள். ஆனால் தற்போது அந்தக் கேள்வியை, டாலர்களுக்காக அடையாளங்களை தொலைத்து நிற்கும் நாமே நம்மிடம் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது என்ன கேள்வி என்று யோசிக்கிறீர்கள்தானே. கேள்வியை தெரிந்துக் கொண்டால் இன்னும் ரொம்பவே யோசிக்க வேண்டியிருக்கும். பரவாயில்லையா??
.

.
.
.
.

“நீயெல்லாம் எப்போதான் உருப்படப் போறியோ?”

Wednesday, November 27, 2013

விவாகம் + ரத்து + ஏன்?

முன்பை விட அதிக எண்ணிக்கையிலான காதல் திருமணங்கள் விவாகரத்தில் (பெரும்பாலானவை ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே) முடிவதாக ஒரு பதிவில் படித்தேன். காதலுக்கு இது சோகமான விஷயம் தான். காதலிக்கும் போது கல்யாணம் செய்துகொள்ளத் தோன்றும் பலருக்கு, கல்யாணம் செய்து கொண்ட பிறகு காதலிக்கத் தோன்றுவதில்லையோ என்ற சந்தேகம் தான் வருகிறது.

இந்த உலகில் பிரிந்த நண்பர்கள் சேர்ந்துக்கொள்ளும் அளவிற்கு பிரிந்த காதலர்களோ தம்பதிகளோ சேருவதில்லை. வாழ்க்கைத் துணையும் நாமும் நல்ல நண்பர்களாய் இருத்தல் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்த இதைவிட ஒரு பெரிய புள்ளி விவரம் தேவையென்று தோன்றவில்லை.

Tuesday, November 26, 2013

நவம்பர் 26

முன்பின் பழக்கமில்லாத ஒரு நபரை காப்பாற்ற,
முன்பின் பழக்கமில்லாத ஒரு பெரும் வலியை,
முன்பின் பழக்கமில்லாத ஒரு கரும் இருளை,
முன்பின் பழக்கமில்லாத ஒரு கலையாத் தூக்கத்தை,
முன்பின் பழக்கமில்லாத ஒரு கொடிய பிரிவை,
முன்பின் பழக்கமில்லா,
முகமளவில் கூடப் பரிட்சயமில்லாத
ஏதோவொரு நபரின் கைகளில் இயங்கும்
ஏகே47 துப்பும் குண்டுகளிடம்,
வரமாய் பெற்றிட,
நம்மில் யாரேனும் தயாராய் இருக்கிறோமா?

26/11 மும்பை தாக்குதல் பற்றிய இரத்தக்கறை அகலா நினைவுகள் என்னை துருவித் துருவிக் கேட்பது இந்த கேள்வியைத் தான்.

Thursday, November 21, 2013

பெங்களூரு ஏடிஎம் தாக்குதல்

#1
பெங்களூரில் ஏடிஎம் அறையில் பெண் தாக்கப்பட்ட சிசிடிவி பதிவினை இப்பொழுதுதான் பார்த்தேன். அந்த பெண்மனி தற்போது கோமாவில் கிடக்கிறாள் என்ற செய்தியைவிட கொஞ்சமும் மனுஷத்தன்மை காட்டாத அந்த காட்டுமிராண்டி இன்னும் எங்கோ சுதந்திரமாய் சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான் அதிகமாய் பாதிக்கிறது.

#2
ஒவ்வொரு ஏடிஎமுக்கும் ஒரு செக்யூரிட்டி கட்டாயம் என அறிவித்து அனைத்து வங்கிகளுக்கும் மூன்று நாள் கெடு விதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எல்லாம் சரி. அவர்கள் நியமிக்கும் அந்த நபர் நாற்பது ஐம்பது வயது கடந்தவராக இல்லாமல், இத்தகைய காட்டுமிராண்டிகளை கையாளத் தக்கவராக இருப்பின் சந்தோஷமே.

#3
பெங்களூரு ஏடிஎம் தாக்குதல் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் அந்த நபர் பற்றி தகவல் கொடுப்பவர்க்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது காவல்துறை. இப்பொழுது யாராவது அந்த நபரை பிடிக்க உதவி, அந்த ஒரு லட்ச ரூபாய் பெற்று, தாக்கப்பட்ட அந்த பெண்மணியின் மருத்துவ செலவுக்கே கொடுத்தால், அது மனித நேயம்.

Tuesday, November 19, 2013

காதலும்.. பெண்மையும்..

அடியே கள்ளி..

என் மீதான
ஆசைகளை எல்லாம்
கண்களால் பேசிவிட்டு,
கோபங்களை மட்டும்
ஏனோ
உதட்டால் பேசிவிடுகிறாய்!

கேட்டால்..
இதில் தான்
பெண்மை வாழ்வதாகச் சொல்கிறாய்!

எங்கே,
இன்றொரு நாள் மட்டும்..

உனது ஆசைகளை
உதடுகளால் பேசிவிட்டு,
கோபங்கள் இருப்பின்
அதை உன்
கண்களால் பேசிப் பாரேன்!

பார்க்கிறேன் நானும்..
எதில் பெண்மை அதிகமென்று!!

Friday, November 15, 2013

சச்சின்ன்ன்ன்…. சச்சின்!! - 2

கிரிக்கெட் எனக்குக் கொஞ்சமும் பழகிறாத நாட்கள் அவை. பக்கத்து வீட்டில் நம்மை விட பெரிய பையன் ஒருவன் இருந்து அவன் செய்வதையெல்லாம் நம் வயதையும் மீறி நாம் எப்படி செய்ய முயற்சிப்போமோ, உதாரணத்துக்கு, அவன் தன் முழுக்கைச் சட்டையை மடித்துவிட்டுக் கொள்ள நாமும் மடித்துவிட்டுத் திரிய முயற்சிப்போம், நாம் அணிந்திருப்பது அரைக்கை சட்டையாக இருக்கும் என்பது வேறு விஷயம், அப்படித்தான் அந்நாட்களில் என் சுற்றத்தின் நடுவில் மிகப் பிரபலமாகியிருந்த கிரிக்கெட்டை தொடர முயன்றேன். அந்த ஆரம்ப நாட்களில் எனக்கு தெரிந்த மிகப்பெரிய கிரிக்கெட் ரகசியங்கள் இரண்டு. ஒன்று பேட். மற்றொன்று பால். அதன் பிறகு கொஞ்சம் தேறி ஃபோர், சிக்ஸ், வைட் பற்றி தெரிந்து கொண்டேன். அப்போதும் நோ பால் சற்று குழப்பம் தருவதாகவே படும். அதையும் சிறிது நாட்களில் புரிந்துக் கொண்டேன்.

குழந்தைகளை கடைக்கு அழைத்துச் செல்கையில், அங்கு இருக்கும் சில மிட்டாய்களைச் சுட்டிக் காட்டி, அது வேணும் என்று கேட்பார்கள். எனக்கு ரொம்ப பிடிக்கும் எனச் சொல்வார்கள். உண்மையில் அதை அதுவரை கண்ணால் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். ஆனாலும் அவர்களுக்குப் பிடிக்கும் என்பதில் அவ்வளவு நேர்மையாக தங்களைக் காட்டிக் கொள்வார்கள். அப்படிக் காட்டிக் கொள்வதில் உண்மையில் கொஞ்சம் உண்மையும் இருக்கும். பிடித்திருக்கிறது என்பது தான் அந்த நேர்மையான உண்மை. அப்படி கிரிக்கெட்டில் எனக்குப் பிடித்த வீரர் சச்சின்.

1998-இன் ஒரு ஏப்ரல் இரவு அது. பத்து மணியை கடந்த நிமிடங்களில் எனக்குத் தூக்கம் சொக்கிக் கொண்டிருந்தது. கூடத்தில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி முன்பு என் அப்பாவும் இரண்டு சித்தப்பாக்களும் ஏறத்தாழ சிலைகள் போல அசைவற்றுக் கிடந்தார்கள். அப்பாவை, ‘தூங்க வா’ என எங்கே நச்சரிக்கத் தொடங்கிவிடுவேனோ என்ற எச்சரிக்கையில், எனது பலவீனம் அறிந்து, உனக்குப் பிடிச்ச சச்சின் ஆடுறான் பாரு என்று சொன்னார்கள். சச்சின் என்று சொல்லிவிட்டார்களே, அப்புறம் என்ன சொல்லுவது, நானும் தூக்கத்தைக் கட்டுபடுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

டக்வர்த் லூயிஸ் விதி, நெட் ரன் ரேட் என எனக்குக் கொஞ்சமும் விளங்காத விஷயங்களை என் அப்பாவும் சித்தப்பாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை நோக்கி ஆடிக் கொண்டிருந்த இந்தியா சில விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது என்பது அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை வைத்து என்னால் அப்போதே புரிந்துக் கொள்ள முடிந்தது. சச்சின் மீது மொத்த நம்பிக்கையையும் வைத்து மொத்த இந்தியாவும் விழித்திருந்த இரவுகளில் அதுவும் ஒன்று. என் அப்பா சித்தப்பாவும் அப்படித்தான் சிலையாகி இருந்திருக்க வேண்டும்.

“இந்த மேட்ச் தோத்துட்டா நம்ம ஃபைனல் போக முடியாதா?” என் அப்பா.

“அப்படி சொல்ல முடியாது. தோத்தாலும் நெட் ரன் ரேட் நல்லா இருந்தா நியூசிலாந்த ஓரங்கட்டிட்டு நம்ம ஃபைனல் போயிடலாம்”, இது என் சித்தப்பா.

“ஓ!”, என் அப்பா.

“ஓ ஹோ!”, இது நான்.

ஆங்கிலம் அவ்வளவாய் படிக்கத் தெரியாதவர்கள் நாளிதழ்களில் உள்ள எழுத்துக்களை நிராகரித்துவிட்டு படங்களை வேடிக்கை பார்ப்பது போல நான் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததையெல்லாம் மொத்தமாய் நிராகரித்துவிட்டு சச்சினை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல், தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் என் அப்பா மடியில் தலை வைத்து உறங்கியிருந்தேன். இடையிடையே சச்சின் விளாசிய ஃபோர், சிக்ஸர்களுக்கு என் சித்தப்பா ஆர்ப்பரித்ததில் தூக்கம் பூசப்பட்டிருந்த கண்கள் திறந்து பார்த்த ஞாபகம் கொஞ்சமாய் இருக்கிறது. மற்றபடி வேறெதுவும் நினைவில் இல்லை.

அடுத்த நாள் காலை எழுந்த போது, இந்தியா ஃபைனலில் நுழைந்துவிட்டதென அப்பா சொன்னார். “சச்சின்?” என்றேன். “சென்ட்சுரி!” என்றார். எனக்கு சச்சினை மேலும் சில மடங்குகள் அதிகம் பிடிக்கத் தொடங்கியது. நான் தூங்கியதில் பார்க்கத் தவர விட்ட சச்சினின் அந்த மேஜிக்கல் இன்னிங்க்ஸை அதன் பிறகு பலநூறு தடவை மறு ஒளிபரப்பாகவும், யூ ட்யூபிலும் பார்த்தாகி விட்டது. இன்று பார்த்தாலும் உடல் புல்லரித்துப் போகச் செய்யும்.

1998-இல் இந்தியா-ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடர், கோகோ கோலா கப்-இன் கடைசி லீக் ஆட்டம் அது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா ஐம்பது ஓவர்களில் 284 குவித்தது. பின்னர் டக்வொர்த் லூயில் விதிப்படி வெற்றி இலக்கான 277-ஐ 46 ஓவர்களில் எடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. மற்ற வீரர்கள் ஒரு பக்கம் சொர்ப்ப ரன்களில் பெவிலியன் திரும்பிக் கொண்டிருக்க, ஆஸ்திரேலிய பத்துவீச்சை துவம்சம் செய்து சச்சின் அசுரத்தனமாக விளையாடி 143 ரன்கள் குவித்து ஆட்டமிழப்பார். 46 ஓவர்களின் இறுதியில் இந்தியா 250 ரன்கள் மட்டுமே எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவும். ஆனால்.. அந்த தோல்விக்கு முன், இந்தியா ஃபைனலில் நுழைய என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து முடித்திருப்பார் அந்த கிரிக்கெட் கடவுள்.

ஆம்.. சாகப் போகிறவர்களை சாவிலிருந்து காப்பாற்றுபவர் கடவுள் எனில், எங்கள் சச்சினும் கடவுள் தான்.

Thursday, November 14, 2013

சச்சின்ன்ன்ன்…. சச்சின்!!

இன்று காலை 7.30 மணி தொடங்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலே கதி என்று அமர்ந்திருந்தேன். சச்சின் பற்றி நிறைய பேசினார்கள். கவாஸ்கர், சித்து, அக்ரம், கங்குலி, டிராவிட், லக்ஷ்மன் என முன்னால் வீரர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இடையிடையே பயிற்ச்சியில் ஈடுபட்டிருந்த சச்சினை காட்டினார்கள். பத்து வருடத்திற்கு முன் இதே போன்றதொரு நிகழ்ச்சியில் நான் பார்த்து ஆச்சர்யப்பட்ட அதே சச்சினை இன்றும் அதைவிட பெரிய ஆச்சர்யத்துடன் பார்க்க முடிகிறது என்பதே எல்லா பெரிய ஆச்சர்யங்களைக் காட்டிலும் மிகப் பெரிய ஆச்சர்யமாக இருந்தது.

நான் தனியாய் அமர்ந்திருந்த கூடத்தில் என்னை சுற்றிலும் வட்டமடித்துக் கொண்டிருந்த மௌன உதடுகள் என்னுடன் ஏதோ பேச முயற்சித்துக் கொண்டிருந்தன. நான் அவற்றை கண்டு கொள்ளவேயில்லை. என் நிராகரிப்பை மீறியும் என் செவியினை தொட முயன்ற சில மௌனங்களை மட்டும் எனது மௌனத்தின் கைகளால் கழுத்தை நெறித்து பேச விடாமல் தடுத்துக் கொண்டிருந்தேன். ‘தெரியும் தானே உனக்கு, உன் சச்சின் விளையாடப் போகும் கடைசி சர்வதேச போட்டி இது தான்’ என எனக்கு அவை தரும் நினைவுகளைச் சுமந்து என்னால் நிம்மதியாக நடமாட முடியாது என்பது தெரியும். இன்னும் சிறிது நேரத்தில் நான் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் வேறு. நான் அவைகளை பேச விடுவதில்லை என்பதில் உறுதியாகவே இருந்தேன். இறுக்கத்தில் ஒரு சில மௌனங்கள் இறந்தும் போயிருந்தன, ஆனால் அவைகளுக்காக சிந்த என்னிடம் வேறு கண்ணீர் இல்லை. நான் அமைதியாக சச்சினை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.

மூன்று பேட்களோடு ஒரு சிறுவனுக்குரிய துள்ளலுடன் படியில் இறங்கி வந்ததில் தொடங்கி, பயிற்சியாளர் டங்கன் ஃபிளட்சருடனான உரையாடல் போதும், நேரே சென்று பிட்சை ஒரு முறை ஆராய்ந்தறிந்த போதும், சக வீரர்களுடனான ஹடிலின் போதும், கை கால்களை நீட்டி சில ஸ்ட்ரெட்ச்கள் செய்த போதும், பயிற்சியின் ஒரு பங்காய் ஒரு சில பந்துகளை எதிர்கொண்ட போதும், என்னால் திரும்பத் திரும்பப் புரிந்துக் கொள்ள முடிந்தது ஒரே ஒரு விஷயம் மட்டும் தான். சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், சச்சினுக்குள் இருக்கும் கிரிக்கெட் என்றுமே ஓய்வு பெறப் போவதில்லை.

பி.கு: அடுத்தச் சில நாட்களுக்கு நான் எழுதப்போவது வெறும் சச்சினைப் பற்றி மட்டும் தான் இருக்கும். படிக்க விருப்பமில்லாதவர்கள், சச்சின் பெயர் கேட்டால் கடுப்பாவபர்கள், இதெல்லாம் ரொம்ப ஓவர்யா னு நினைப்பவர்கள் மற்றும் இன்ன பிற சச்சின் எதிர்பாளர்கள் என யாராவது இருப்பின், தயவு செய்து இந்தப் பக்கம் வந்து விடாதீர்கள் என்று ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படக் கிளைமாக்ஸில் சந்தானம் கேட்டுக் கொள்வது போல மிகவும் ‘தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’. :)

Wednesday, November 13, 2013

மனிதம் நேசிக்கிறோமா?

எதில் மனநிறைவு அடைகிறோமோ இல்லையோ, நாம் நமது சுற்றம் வரை நலமாக இருந்தால் போதும் என்பதில் மட்டும் சுலபத்தில் மனநிறைவு அடைந்துவிடுகிறோம். இவ்வுலகின் ஒவ்வொரு உயிரைப் பேணிக் காப்பதிலும் நம் ஒவ்வொருக்கும் பொறுப்பிருக்கிறது என்பதை என்றைக்காவது உணர்ந்து செயல் பட்டிருக்கிறோமா என்று யோசித்துப் பார்த்தால் இல்லை.

சாலையில் விரைந்து கொண்டிருப்போம், நம் கண் முன் ஒரு விபத்து நிகழும், நாமும் வாகனத்தை நிறுத்துவோம், உதவ என்று நினைத்துவிட வேண்டாம், நமக்கு வேடிக்கை பார்ப்பது அதைவிட மிக முக்கியமாச்சே.

இரவு அலுவலகம் விடுத்து பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டை நோக்கி நடந்து கொண்டிருப்போம், சாலையோரம் ஒரு குடிமகன் உடை கலைந்து கிடப்பான், உற்றுப் பார்த்துவிட்டு ச்சீ என்று நடையைக் கட்டுவோம். எவன் கோவனம் காத்துல பறந்தா நமக்கென்ன.

நீரு என்ன கிழிச்சீரு னு என் மேல யாரும் எகிற வேண்டாம், நாம னு சொன்னதுல நானும் தான் அடக்கம். நேற்று தூக்கமில்லாமல் உலாத்திக் கொண்டிருந்தச் சமயத்தில் Restoring Faith in Humanity என்ற தலைப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு காணொளி எனக்குள் ஒரு பாதிப்பை எற்படுத்தியது.  நேரம் இருந்தால் நீங்களும் கூகுள் செய்துப் பாருங்கள்.  மனிதம் நேசிக்கப்படட்டும்.

டேக் டைவர்ஷன்

பல்லாவாரம் மேம்பால இறக்கத்தில் தொடங்கி (துரைப்பாக்கம்-பல்லாவரம் இணைப்புச் சாலை வழி GST தொட்டதால், அங்கு தொடங்கி கவனித்ததை மட்டும் தான் சொல்ல முடியும்) ஒவ்வொரு ஐம்பது அடிக்கும் ஒரு காக்கிச் சட்டை, சந்திப்புகள் தோறும் ஓரிரு வெள்ளைச் சட்டைகள் (வாக்கி டாக்கி மற்றும் பிகிலுடன்). அனைத்து யு-டர்ன் சந்திப்புகளையும் தடுத்து, கைகளை ஆரவாரமாய் அசைத்தசைத்து வாகனங்களை எங்கும் (ஓரமாய் கூட) நிறுத்த விடாமல் விரட்டிக் கொண்டிருக்க, நானும் வேடிக்கை பார்த்துக்கொண்டே அப்படியே அவர்களின் வழிக்காட்டுதல்படி பயணி்த்து விட்டேன்.

திருமலை படத்தில் விவேக் திருப்பதி சென்றடையும் ‘டேக் டைவர்ஷன்’ காமெடி நினைவிற்கு வந்தபோது கூட, அதெல்லாம் மிகைப்படுத்தப்பட்டு சினிமாவிற்காக காட்டப்பட்டதென எனக்கு நானே நம்பிக்கை சொல்லிக் கொண்டிருக்கையில், சாலையோரப் பலகை ஒன்றில், பச்சை நிறப் பின்புலத்தில் வெள்ளையில் எழுதப்பட்டிருந்ததை படிக்க நேர்ந்தது.
.
.
.
.
.
.
அடப் பாவிகளா.. என்ன ஏன்டா பெருங்களத்தூருக்கு கூட்டிட்டு வந்தீங்க… நா MEPZ ல ரைட் எடுக்க வேண்டியவன் டா!!

Tuesday, November 12, 2013

காதல் ஒரு குத்தமா?

என்னது… உங்கள்து லவ் மேரேஜ் ஆஆஆஆஆ? சூப்பருங்க… வீட்ல ஒன்னும் சொல்லலையா? அவங்க வீட்லயும் உடனே ஒத்துக்கிட்டாங்களா??

.
.
.
நீங்க இவ்வளோ ஆச்சர்யப்படுற அளவுக்கு காதல் ஒன்னும் வேற்றுக் கிரகக் குரங்கு இல்லயே. உங்கள சொல்லி குத்தமில்ல. எதார்த்தமா பார்க்க வேண்டிய ஒரு விஷயத்த ஆச்சர்யமா பார்க்க வச்சிருக்குன்னா, நம்ம சமூகத்த பாராட்டியே ஆகணும்.

நீங்க லவ் பண்றீங்க தானே?

எழுதத் தொடங்கிய காலத்தில் எனது கவிதைகளைப் படித்துவிட்டு பலரும் கேட்டிருக்கிறார்கள், “உண்மையைச் சொல்லுங்க, நீங்க லவ் பண்றீங்க தானே?” என்று. அவர்களுக்கெல்லாம் ஒரு மெல்லிய புன்னைகயை மட்டுமே பதிலாகக் கொடுத்திருக்கிறேன். 

அந்தச் சிறு புன்னகையில் அவர்கள் எதிர்பார்த்த ‘ஆமாம்’, நான் சொல்ல நினைத்த ‘இல்லை’ இரண்டும் சம அளவில் கலந்து வைத்திருப்பேன். அவரவருக்கு வேண்டிய பாதியை மட்டும் எடுத்துக் கொண்டு பதிலுக்கு சிரிப்பார்கள். அந்தச் சிரிப்புகள் ஒவ்வொன்றும், எனது அடுத்த புன்னகை எப்படி அமைய வேண்டும் என்பதற்கான திருத்தங்கள் எனப் புரிந்துக் கொண்டிருக்கிறேன். 

Friday, November 8, 2013

செவ்வாய் தோஷம்

செவ்வாய் கிரகம், மங்கள்யான் எனப் பேசிக் கொண்டிருந்த வேளையில் செவ்வாய் தோஷம் பற்றி சிலர் பேசி இருந்தார்கள். உடனே, செவ்வாய் தோஷம் இங்கு எத்தனை திருமணங்களை தடுத்து நிறுத்தியிருக்கும் என்ற கேள்வி எழுந்தது. நூறு? ஆயிரம்? லட்சம்? இன்னும் அதிகமாய் இருக்குமோ என்னவோ, தெரியவில்லை.

காலமும் படிப்பறிவும் இந்த நிலையை முற்றிலும் மாற்றிவிடும் என்று நம்பப்படுகிறது. ஆனால், சமீபத்தில் கூட ஒரு பொறியியல் பட்டதாரி இந்த காரணம் சொல்லி ஒரு பெண்ணை நிராகரித்ததாக ஒரு செய்தியை படித்த நியாபகம் இருக்கிறது. ஒரு வேளை இத்தகைய நிராகரிப்புகளின் எண்ணிக்கை முன்பைக்காட்டிலும் குறைந்துள்ளதாக ஆய்வுகள் சொன்னால் சந்தோஷம் தான்.

செவ்வாய் தோஷம் அப்படி என்னதான் சொல்லி இந்த மக்களை பயமுறுத்தியிருக்கிறது என்பதறிய சில வலைப்பக்கங்களை துழாவினேன். அவற்றின் படி, ஜாதகங்கள் மூன்று வகையாகப் பார்க்கப்படுகின்றன. செவ்வாய் தோஷம் உள்ளது ஒன்று, செவ்வாய் தோஷம் இல்லாதது இரண்டு, செவ்வாய் தோஷம் இருந்தும் சில விதிகளின் அடிப்படையில் அஃது செவ்வாய் தோஷம் அற்றது என்று எடுத்துக்கொள்ளப்படும் முன்றாவது. ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்பதை எதன் அடிப்படையில் கணிக்கிறார்கள் எனப் புரிந்துக்கொள்ள முயன்றபோது, அங்கு லக்னம், வீடு என்று எனக்கு விளங்காத சொற்கள் மூலம் விளக்கியிருந்தார்கள், அதனால் விட்டுவிட்டேன்.

இரண்டாவது ரக ஜாதகம் இரண்டுடனோ, மூன்றுடனோ அல்லது மூன்றாவது ரகம் மூன்றுடனோ சேர்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லும் அந்தப் பதிவுகள், முதல் ரகம், அதாவது செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை இரண்டுடனோ, மூன்றுடனோ சேர்ப்பதை ஒப்புக்கொள்ளவில்லை. துணையின் உயிருக்கு ஆபத்து, தம்பதிகளுக்கு இடையில் தீரா மனப் பிரச்சனை, குடும்பத்தில் பணப் பிரச்சனை என இன்னும் நீள்கிறது அந்த விளைவுகள் பட்டியல். அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான். செவ்வாய் தோஷம் உள்ள ஒருவரை செவ்வாய் தோஷம் உள்ள இன்னொருவரோடு தான் சேர்க்க வேண்டும். மைனஸ் இன்டு மைனஸ் பாடிடிவ் என்ற விதிப்படியோ என்னவோ.

இதையெல்லாம் வீட்டில் பெற்றோர்கள் பார்க்கும் வரன்களுக்குச் சரி, காதல் திருமணங்களுக்கு என்கிறீர்களா? நியாயப்படி நீங்கள் ஜாதகமே பார்க்கக் கூடாது. காதலை உங்களுக்கு அறிமுகப்படுத்திய விதியிடமே உங்கள் வாழ்க்கையையும் ஒப்படைத்துவிட்டு வாழ்வின் இரண்டாம் அத்தியாயத்தை நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் தொடங்குங்கள். சொல்லப்பட்ட விளைவுகளில் பெரிதாய் தெரியும் உயிர் இழப்பைத் தவிர வேறு எதையும் நல்லதொரு புரிதல் கொண்டு சமாளித்துவிடலாம். அப்போ உயிரிழப்பு? உங்களுக்காக ஏற்கனவே பதில் எழுதிவிட்டார் சுஜாதா. “சாகுற நாள் தெரிஞ்சு போச்சுனா, வாழ்ற நாள் நரகமாய்டும்.” :)

சரி, இந்த செவ்வாய் தோஷம் நம்மைப் பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ரொம்ப சிம்பில். செவ்வாய் தோஷம் பற்றிய இந்நம்பிக்கைகள் நமக்குப் பிடிக்காமல் போக வேண்டும்.

# இப்படியே விட்டா ஜலதோஷம் பிடிச்சவங்களுக்கு ஜலதோஷம் பிடிச்சவங்கள தான் கல்யாணம் பண்ணி வைக்கணும் னு சொல்லுவாங்க போல. சும்மா ஒரு காமெடிக்கு.

Thursday, November 7, 2013

ஹ்ம்ம்ம்.. அது தீபாவளி!!

பண்டிகை நாளுக்கு முன்னர் இரண்டு மூன்று நாட்கள், பின்னர் ஒரிரண்டு நாட்கள் என விடுமுறை காலம் தன் இஷ்டத்திற்கு விரிந்து கிடக்கும். பத்து இருபது நாட்கள் முன் தொடங்கியே வீட்டில் கை முறுக்குகள், இனிப்புப் பண்டங்கள் எனத் தயாராகத் தொடங்கி மணம் வீசி வந்திருக்கும். போதாத குறைக்கு சொந்தங்கள் நண்பர்கள் வீட்டிலிருந்து வேறு தூக்கு தூக்காய் வந்து இறங்கியிருக்கும்.

இரத்தக் கொதிப்பு, சக்கரை வியாதி போன்ற குறைபாடுகளால் கைகள் கட்டிப் போடப்பட்டிருந்தாலும், கொஞ்சமும் கட்டுப்படாத குழந்தை மனம் வீட்டுப் பெரியவர்களை ஒரு சில அதிரசங்களையும் கை முறுக்குகளையும் திருட உட்படுத்தும் வேளையில், இனிப்புத் தூக்குகள் பத்திரப்பட்டிருக்கும் அலமாரிகளுக்குப் பின்னால் ஒளிந்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் நம்மிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்ள, நமக்கும் மாமூல் வழங்கப்பட்டிருக்கும்.

பள்ளி விடுமுறை தொடங்கும் முந்தைய நாள் மாலை கடைசி வகுப்பில் அப்பா அந்த வருடம் புதிதாய் வாங்கி வந்த ராக்கெட்களைப் ஏதோ ஏற்கனவே பத்த வைத்துவிட்ட களிப்பில் நாம் வானில் உயர பறந்து கொண்டிருப்போம். பள்ளி முடிவடைந்ததை குறிக்கும் அந்த கடைசி மணி ஒலிக்கையில் அந்த வருட தீபாவளிக்கு நம் ஊரில் வெடிக்கக் காத்திருக்கும் மொத்தப் பட்டாசுகளின் சத்தத்தையும் நாம் உரக்கக் கூச்சலிட்டு தோற்கடித்திருப்போம். நேரே வீடு சென்று, புத்தக மூட்டையிடம் ‘உனக்கும் எனக்கும் அடுத்த மூன்று நாட்களுக்கு வாய்கால் தகராறு’ என்ற ரீதியில் அதற்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு அறையின் ஒரு ஓரத்தில் கிடாசிவிட்டு, பட்டாசுப் புகையினுள் தொலைந்து போயிருப்போம்.

அங்கு தொடங்கி அடுத்து பள்ளி துவங்கும் நாள் வரை எந்நேரமும் வெடி மருந்துகள் அப்பப்பட்டே காட்சி தரும் நம் கை விரல்களை ஒவ்வொரு உணவுக்கு முன்னும் ஹமாம் சோப்புகள் காப்பாற்றிக் கொடுத்திருக்கும்.

இப்படியெல்லாம் தீபாவளியை கொண்டாடிவிட்டு இன்றும் கொண்டாடுகிறோமே (?) உப்பு சப்பில்லாத ஒரு தீபாவளியை.

Wednesday, November 6, 2013

ஃபேஸ்புக் தீபாவளி

பல வருடங்களுக்குப் பிறகு இந்த தீபாவளியை என் பள்ளிக் காலங்களில் கொண்டாடியபடி கொண்டாடினேன் என்று பேசிக்கொண்டிருந்தேன். அப்படி என்ன செய்தாய் என்றார்கள்.
ஃபேஸ்புக் பக்கம் தல வச்சி கூட படுக்கல.

நண்பர்கள், உறவினர்களை நேரில் சந்தித்தோ, நேரில் சந்திக்க முடியாமல் போக தொலைபேசியில் அழைத்தோ பண்டிகை தின சந்தோஷங்களை பகிர்வது என்பது மறந்தே போக இன்று பக்கத்து வீட்டுப் பையனுக்கும் ஃபேஸ்புக்கில் தான் வாழ்த்து சொல்கிறோம். அவனும் அதுக்கு ஒரு ‘லைக்’கை போட்டு ஒரு ‘தாங்கஸ் ப்ரோ’ வும் அனுப்புகிறான்.

மைன்டு வாய்ஸ்: ஒரு அரை மணி நேரத்திற்கு முன்னாடிதானடா நீங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டு வாசல்ல ஒன்னா வெடி வெடிச்சுட்டு இருந்தீங்க.

கடுப்பேத்துறாங்க மை லார்ட்!

சச்சினும் மற்ற எந்த ஒரு விளையாட்டு வீரர் போலதானே. அவருக்கும் வயதாகும், ஓய்வு பெற வேண்டி வரும் என்பது தெரிந்ததுதானே. பிறகு ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகுறீர்கள். உங்கள் அப்பாவிற்கு கவாஸ்கர், கபில் தேவ் எப்படியோ, அப்படித்தான் சச்சின் உங்களுக்கு. உங்கள் பையனுக்கு கோலி. அவன் பையனுக்கு எனத் தொடர முயன்ற போது, “மவனே…” கூடவே நான்கைந்து வார்த்தைகளும் ஒத்து இசைக்கத் துடித்தன. விளையாட்டு, வயது, விருப்பம் ஆகியவற்றை சுற்றியுள்ள எதார்த்தம் கூட புரியாத அளவிற்கு இங்கு யாரும் முட்டாளாய் இருப்பதில்லை என்பதை ஏனோ இவர்கள் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள்.

“சச்சினும் மற்ற எந்த ஒரு விளையாட்டு வீரர் போல தானே” என்பதில் தொட்டு அடிப்படைப் புரிதலே அங்கு தவறாக இருந்தது. எங்களால் அவரை அப்படிச் சாதாரணமாய் பார்க்க முடியவில்லை என்பது தான் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் இருக்கும் ஒரே வித்தியாசம். அவர் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார்கள் என்று மகிழ்வதா, அதன் பிறகு அவர் ஆடவே மாட்டாரே என்று வருந்துவதா என்பது தெரியாமல் நாங்களே மிகவும் குழம்பிப்போய் உள்ளோம். நீங்க வேற ஏன் டா இம்ச பண்ணுறீங்க.

Tuesday, November 5, 2013

மங்கள்யான்!

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கானச் சாத்தியங்களை ஆராய உருவாக்கப்பட்ட இந்தியாவின் 450 கோடி ரூபாய்ச் சொத்து இன்று பிற்பகல் 2:38 மணிக்கு சும்மா ஜொய்ங்குனு கிளம்பிருச்சுங்கிறது தான் செய்தி. அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் இந்த மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை அடையும் என்பது கணிப்பு. அப்படி நடக்கையில், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய கூட்டமைப்பைத் தொடர்ந்து, மார்ஸ் மிஷனை வெற்றிகரமாக முடித்துக் காட்டிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட நாற்பது முயற்சிகளில் சீனாவின் முயற்சி உட்பட மொத்தம் இருபத்து முன்று முயற்சிகள் மண்ணைக் கவ்வியிருக்கின்றன என்ற உண்மை இந்த மிஷன் எவ்வளவு சவாலானது என்பதை ஒரளவிற்கு உணர்த்தவே செய்கிறது.

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படுகிறதால் ‘மங்கள்’யான் என்று பெயர், அது சரி. ஆனால் அதையும் செவ்வாய்க் கிழமையன்று தான் ஏவ வேண்டுமா? தாங்க முடியல உங்க செவ்வாய் மோகம்!!

# செவ்வாயன்று செவ்வாய்க்கு ஒரு செவ்வாயே பறக்கிறதே.. அடடே.. ஆச்சர்யக்குறி!