Friday, October 25, 2013

அவள் பிறந்த நாள்!!

வெயில் மங்கியிருந்த ஒரு மதிய வேளையில் அவள் வீடு திரும்பியிருந்தாள். ஒரு எட்டு வயது உடல் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு கத்திக் கீறலை தைரியமாகத் தாங்கியிருந்தாள் என்பது எனக்குத் தெரியும். அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழைய மறுத்தபடி அம்மாவை பார்த்து அவள் அழுத நிமிடங்கள் பற்றி அம்மா சொல்லியிருந்தது நினைவிற்கு வந்தது. எப்படி இருக்கு இப்போ? வலிக்குதா? என்றெல்லாம் கேட்கத் தோன்றவில்லை. அவளாகவே எழுந்து போகும் வரையில் அவளை என் மடியில் படுக்க வைத்துக்கொள்ள வேண்டும் போலத் தோன்றியது. அதுவரையில் உடன் விளையாடும் குழந்தையாக, அவ்வப்போது சண்டை போட்டுக் கொள்ளும் தோழனாக, அவளது பொய்க் கண்ணீரால் அப்பாவிடம் எப்போதும் வசை வாங்கும் அண்ணனாக மட்டுமே உணர்ந்திருந்த என்னை, முதன் முறையாக தந்தை ஸ்தானத்தை உணரச் செய்த அவளின் ஒரு ஏக்கப் பார்வை இன்னும் என் கண்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

கடவுள் எனக்கு ஒரு தங்கையை பரிசளித்த நாள் இது.

Thursday, October 24, 2013

இதுக்கு ஒரு முடிவே இல்லையா?

இந்த தனியார் சானல்களில் ஒளிபரப்பப்படும் பாட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக்கொள்ளும் பாடகர்கள் ஓரிரு வரிகள் பாட, அது படு மொக்கையாகவே இருந்தாலும், போட்டியாளர்கள் முதல் நடுவர்கள் வரையில் பேசி வைத்தது போல எல்லோரும் “ஆஹா.. ஓஹோ.. அடடடடடடா.. அப்பப்பப்பப்பா..” என்று ஓவராக ரியாக்ட் செய்கிறார்கள். அவர்கள் போடும் சீனுக்கு நம் ஞானத்தின் மீது வேற நமக்குச் சந்தேகம் வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளை முற்றிலும் புறக்கணிக்கலாம் என சில நேரங்களில் எண்ணினாலும் விளம்பர யுத்திகளுக்கு அடிமையாகிப் போய்விட்ட நம் புத்தி கேட்டுத் தொலைக்க மாட்டேங்குறது.

ஒரு காலத்தில் தலை சிறந்து விளங்கிய ஒரு இசைக் கலைஞரை சபையில் வைத்து நீங்கள் பாடியதில் பிழையிருந்தது எனச் சுட்டிக்காட்டி சங்கடத்தில் தள்ளவோ அவமானப்படுத்தவோ வேண்டாம் என்பதில் நானும் உங்களோடு தான் நிற்கிறேன். அதே நேரத்தில், பொய் கலந்த ஒரு மிகைப்படுத்தப்பட்ட பாராட்டு என்பது அங்கு தேவையில்லை, அதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் வரட்டும், அவர்களால் முடிந்தளவு பாடட்டும், இதுவரையில் இசைக்கு அவர்கள் செய்த மரியாதையை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்க முயற்சிப்போம், அவர்களுடனான நினைவுகளை தேடி எடுத்துப் பகிர்வதில் மகிழ்ச்சி கொள்வோம், எழுந்து நின்று கை தட்டுவோம், காலில் விழுந்து வணங்குவோம், அத்தோடு நிறுத்துக் கொள்வோம். அவர்கள் பாடிய பாட்டோ மீட்டிய இசையோ அவர்களை கௌரவப்படுத்திய அளவிற்கு நாம் ஒன்றும் பெரிதாகச் செய்துவிட முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.

Friday, October 18, 2013

குழந்தை கொண்டு பிச்சை

சிக்னலில் குழந்தை கொண்டு பிச்சை எடுப்பவர்களைப் பற்றியும், அந்தக் குழந்தைகள் எப்போதும் தூங்கிக் கொண்டே இருப்பதற்கானக் காரணத்தை விளக்கியும் இணையத்தில் உலவும் செய்திகள் காவல் துறைக்கும் அரசுக்கும் தெரியாமல் இருக்குமா என்ன. சென்னையில் இன்றும் பல இடங்களில் அவர்களை பார்க்க முடிகிறது.

எங்கேனும் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் கையில் இருக்கும் குழந்தையை கூர்ந்து கவனித்துள்ளேன். சப்தங்களால் மட்டுமே சூழப்பட்ட, வாகன நெரிசல் மிக்கச் சாலைகளிலும், எந்த ஒரு சின்ன அசைவும் காட்டிறாது, கண்கள் இறுக்கி, அப்படி ஒரு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும். “குழந்தைக்கு பால் வாங்கக் கூட காசு இல்ல யா” என்று அந்த பெண்மணி (தாய் என்று சொல்ல ஏனோ பிடிக்கவில்லை) நம்மிடம் கூறுவாள். குழந்தை மீது பரிதாபமும், அதை வைத்து பிச்சை எடுத்து வாழ நினைக்கும் அவள் மீது கோபமும் ஒரே நேரத்தில் பொத்திக்கொண்டு வரும். எதை எந்த அளவிற்குக் வெளிக்காட்டுவதெனத் தெரியாமலேயே அங்கிருந்து உடன் விலகி நடந்து விடுகிறேன். சில அடி தூரத்தில், என் மனசாட்சி, அந்த குழந்தையை மட்டும் திரும்பிப் பார்க்க முயற்சிக்கிறது.
உங்களில் யாருக்கேனும் இப்படி நிகழ்ந்திருக்கிறதா?

பி.கு: அடுத்த முறை அப்படி யாரையேனும் பார்க்க நேர்ந்தால், நேராகப் போய் அவர்களிடம் கேட்டுவிடப் போகிறேன், “ஏன் குழந்தை எப்போதும் தூங்கிட்டே இருக்கு?” னு. யாரைக் கூட்டி எவ்வளவு பிரச்சனை பண்ணினாலும் பராவாயில்லை.

Thursday, October 17, 2013

இந்தியா வெற்றி!!

விராட் கோலி மின்னல் வேக சதம். இந்தியர் ஒருவரால் பூர்த்தி செய்யப்பட்ட அதி வேக சதம். 52 பந்தில் 100 ரன்கள் விளாசி சேவாக்-இன் முந்தைய சாதனையான 60 பந்துச் சதத்தை பின்னுக்குத் தள்ளினார்.

சிகர் தவான், ரோஹித் ஷர்மா அபார தொடக்கம். தவான் ஐந்து ரன்னில் சதத்தை தவற விட்டிருந்தாலும், ஷர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 141 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இப்படியாக, இந்தியர்கள் அசுரத்தனமாக விளையாடி ஜெயித்தார்கள் என்று பலரும் சொல்ல கேட்க முடிகிறது. ஆனால் என்ன செய்ய, சச்சின் இல்லாததால் பார்க்க தான் முடியவில்லை.

Wednesday, October 16, 2013

மெய்யுணர்தல் 4!

நியாயம் ஒவ்வொரு முறையும் மிக நேர்மையாகத் தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. நாம் நிராகரித்து விடுகிறோம். தன் பக்கம் இருக்கும் உண்மைக் காரணங்களை ஒரு முறை உரக்கப் பேசிப் பார்க்கிறது. அவற்றை ஏற்க மறுத்து விடுகிறோம். கொஞ்சம் பொறுமையிழப்பதில் எட்டிப்பார்க்கும் தன் கோபத்தின் வாயைப் பொத்தி அதனை தனக்குள் இறுக்கி அமர்த்திவிட்டு தரையிறங்கியும் பார்க்கிறது. பதிலுக்கு ஒரு பெருந்தோல்வியை தூக்கி அதன் கைகளில் வைத்து விடுகிறோம். தோற்க விரும்பாதவர்கள் அவர்களுக்கென எழுதப்பட்டத் தோல்வியை தனக்குக் கொடுத்துவிட்டுத் தப்பிக்கப் பார்ப்பார்கள் என்ற வழக்கம் புரிய வர, இனியும் போராடிப் பிரயோஜனம் இல்லையென ஒரு கட்டத்தில் மௌனம் நாடுகிறது. சந்தர்ப்பங்களை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளப் பழகிவிட்ட மனித குணம் அந்த மௌனத்தையும் விட்டு வைப்பதாயில்லை. தோல்விக்கான நியாயத்தின் ஒப்புதல் என அதற்கு ஒரு பட்டம் கட்டி நியாத்தின் நிஜத்தை மொத்தமுமாய் அழித்துவிட முயற்சிக்கிறோம். மனிதன் ஒரு மிருகம். ஒப்புக்கொள்ள வேண்டி உள்ளது.

Thursday, October 10, 2013

முதல் துரோகம்!

இந்த உலகின் முதல் துரோகம் யாரால் நிகழ்ந்திருக்கும்? எவருக்கிடையில் அல்லது எதற்கிடையில் அது நடந்திருக்கும்?அது எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்? அந்த வலி எப்படி இருந்திருக்கும்? அந்த துரோகத்திற்கு தண்டனை என்னவாக இருந்திருக்கும்?

விஜய் டிவியின் ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ பிரபலமும், சன் நியூஸ் செய்தி வாசிப்பாளருமான திரு. நெல்சன் அவர்கள் முன் வைத்திருந்த கேள்விகள் இவை. அவர் கேட்டிருந்த இந்த கேள்விகள் போக, இதை படித்த போது எனக்குள் வேறு நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. எல்லாவற்றையும் ஒரே பதிவு மூலம் விவாதிக்க முடியும் என்று தோன்றவில்லை. இருப்பினும், எழுதத் தூண்டும் தலைப்பு இந்த முதல் துரோகம். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இதைப் பற்றிய ஒரு தனி கதை இருக்கும். விரைவில் அப்படி ஆழமாய் அலசிப் பார்க்கும் ஒரு பதிவையும் எழுத ஆவலாய் இருக்கிறேன். நேரம் கை கொடுத்தால் சீக்கிரமே பதிவிடுகிறேன். அதுவரையில் என்னால் முடிந்தது திரு.நெல்சனின் கேள்விகளுக்கு நான் எழுதியிருந்த பதிலை இங்கே உங்களோடு பகிர்வது மட்டும் தான்.

“சுயநலத்தின் பிறப்பால், நம்பிக்கை வைத்திருந்த ஒருவருக்கும் அந்த நம்பிக்கைக்குச் சொந்தக்காரருக்கும் இடையில், விவரிக்க முடியாத ஒரு அசிங்கமாய், உயிரையே திருப்பிப் போட்ட ஒரு வலி தந்து நிகழ்ந்திருக்கும் அந்த முதல் துரோகம், கண்டிப்பாக தண்டனை பெற்றிருக்காது, மாறாக, அதுவரையில் யாராலும் அசைத்திட முடியாமல், பெருமிதத்தோடுச் சிரித்துக்கொண்டிருந்த அந்த நம்பிக்கையை அது தண்டித்திருக்கும், கொஞ்சமும் கருணையில்லாமல் கொன்று போட்டிருக்கும்.”

Tuesday, October 8, 2013

விவாகரத்து செய்யேல்!!

எண்ணிக்கையில் பெருகி வரும் விவாகரத்துகள் பற்றிய ஒரு கவலையாய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு பதிவில், ஒரு கணவனும் மனைவியும் நீண்ட காலம் சேர்ந்து குப்பை கொட்ட சார்பு நிலை அவசியம் என்பது போல சொல்லப்பட்டிருந்தது. அதாவது, இன்று அறுபதாம் கல்யாணம், என்பாதம் கல்யாணம் எனக் காணும் பெருசுகளின் காலத்தில், சம்பாதிக்கும் இடத்தில் வகித்த கணவனைச் சார்ந்து மனைவிமார்களும், குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்களின் வளர்ப்பு, வீட்டு நிர்வாகம், சமையல் என இதர வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்ட மனைவியைச் சார்ந்து கணவன்மார்களும் இருந்ததால் அந்த தம்பதியர்களால் நாற்பது ஐம்பது ஆண்டுகள் சேர்ந்து வாழ முடிந்ததாகச் சொல்லிப் போகிறது அந்தப் பதிவு.

சார்பு நிலை அவசியம் என்பதில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை. கணவன் உத்தியோகமற்று, சம்பாத்தியமற்ற நிலையிலும் கூட, எத்தனையோ குடும்பங்களை பெண்கள் தன்னந்தனியாகவே கையாள்கிறார்கள். சுமாராக சமைக்கும், குழந்தை பெறாத மனைவியோடு கூட கணவன்மார்கள் அன்போடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அடிப்படையில், தன் துணை புரியும் தவறுகளையும் அவர் தம் குறைகளையும் ஏற்றுக்கொள்ளவதில் தான் இங்கு பலருக்கும் பிரச்சனை. தன் துணையைவிட இவ்வுலகின் எந்த விஷயமும் பெரிதில்லை என்ற உண்மையான எண்ணம் உள்ளவர்களாக மாறுவதில் தான் நம்மில் பலரும் தவறுகிறோம்.

***
தவறுகள் புரியாத ஒருவனுக்கும்
தவறுகள் புரியாத ஒருத்திக்கும்
திருமணம் என்பது சாத்தியமேயில்லை!
அது இயற்கைக்கு முரணானதும் கூட!!

***
சில சமயங்களில்,
நம்மிடமே நாம் நம்
தோல்வியை ஒப்புக்கொள்வதில்லை!
புதிதாய் இணைந்த உயிர் மட்டும்
எப்படி விதிவிலக்காகும்..
ஏற்றுக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!

Friday, October 4, 2013

பிளடி டாக்.. செத்துப் போயிட்டான்

தெருமுனை விளக்குக் கம்பத்தில் சாய்ந்தபடி
யாரோ ஒருவர் உட்கார்ந்திருந்தது போல தெரிய,
அருகில் சென்று பார்த்தபோது.. அது நீ!

‘என்னடா இங்கு.. அதுவும் இந்த நேரத்துல’
எனக் கேட்க
நீ அழத் தொடங்கினாய்.

உன் விசும்பல் சத்தம்
மொத்த வீதியின் அமைதியையும் விழுங்கத் தொடங்கியதறிந்து,
‘சரி வா.. பன்னென்டு ஆய்டுச்சு..
வீட்டுக்குப் போய் பேசலாம்’
உன் கை பிடித்து இழுத்தேன். நீ வர மறுத்தாய்.

உன் விரல்களுக்கு நடுவில் சிகரெட் சுட்ட வடு,
உனது மறுகை கொண்டிருந்த மதுவில் குளித்து
என்னிடம் பரிதாபம் வேண்டி இழித்தது.
எனக்குக் கோபம் தான் வந்தது.

‘ஏன்டா இப்படிக் குடிச்சே அழியுற’ என்றதும்
ஒரு ஞானச் சிரிப்பு அங்குப் பூத்தது.
‘காதல் மச்சி’ என்ற பிதற்றல் வேறு துணை.
‘அதுக்கு???’ என்றேன் கோபமாய்.
பதில் சொன்னாய் நீயும் மௌனமாய்.

ஓங்கி அறையலாம் போல இருப்பினும்
அமைதியாகவே உனை தூக்க முயன்றேன்.
‘வா.. வீட்டுக்குப் போகலாம்’ – இது இரண்டாம் முறை.

‘விடுறா என்னய..’ – ஒரு அலறல் சத்தம்.
‘அவ போயிட்டா….
என்ன மட்டும் சந்தோஷமா இருக்கச் சொல்லுறியா???
அஞ்சு வருஷம் மச்சி..
அஞ்சு வருஷ லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்’
என லவ்-ஐ ஒரு வழியாய் இழுத்துப் பிய்த்து முடித்தாய்.
எனக்கு சிரிப்புதான் வந்தது.

லவ் தான்!
அஞ்சு வருஷம், நீ சொல்லும் நல்ல ஆழம் தான்!
ஆனால் அந்த ஆழத்தின்
எத்தனாவது அடிக்குப் போய் தேடினாலும்
உன் இந்த நிலைக்கு நியாயம் மட்டும் கிடைக்காது.

உனை வேண்டாமென விட்டுச் சென்றவளுக்காக
உயிர் வேண்டாமென அதை நீ விற்றுக் குடிப்பது
கண்டிப்பாக காதல் இல்லை!
முட்டாள் தனத்திற்கு முப்பாட்டன் முறை தான் வரும்!!

நீ வருவது போல தெரியாததால்,
நான் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.
வழியில்,
உன் வீட்டு வாசல் முன் உன் அம்மா,
‘நீ எப்படியும் இப்படித்தான் போவ னு காத்துட்டிருந்தேன்.
நாளைக்கு அவனுக்கு திதி ப்பா..
ஞாபகப் படுத்தலாம் னு தான்’ என முடித்தாள்.

‘மறக்கல மா.. வந்துடுறேன்..’
எனச் சொல்ல அவள் தலையசைத்தாள்.
என் கால்களும் அசையத் தொடங்கின.
அழ நிறுத்தியிருந்த கண்கள்
மீண்டும் தயாராகிக் கொண்டிருந்தன.
.
.
.
.
.
.
.
‘பிளடி டாக்.. செத்துப் போயிட்டான்!’

Tuesday, October 1, 2013

உலக முதியோர் தினம்!

நம்மில் யாரும் பற்கள் இழந்த நம் பொக்கை வாய் எப்படி இருக்குமென யோசித்துப் பார்ப்பதில்லை. நடக்க முடியாமல் போக தடி ஊன்ற வேண்டி வருமே என உணர்வதுமில்லை. நரை தட்டும், பார்வை மங்கும், கேட்கும் திறன் குறையும், தோல் சுருங்கும் என எதையுமே நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. ஒவ்வொரு வேளைக்கும் ஒரு தட்டுச் சோறுக்காக இன்னொருவரை எதிர் பார்க்கும் நிலையே ஒரு கொடுமையென நாம் என்றுமே புரிந்து கொள்வதில்லை. தான் பெற்றதுகளே தன்னை வளர்க்க மறுத்ததில் அநாதைகளாகி, கோயில்களில், பிரம்மாண்டக் கடைகளின் வாசலில், பேருந்து நிறுத்தங்களில், நடைபாதைகளி்ல், சாலைச் சந்திப்புகளில் தேங்கும் கார்களின் கண்ணாடி ஜன்னல்களுக்கு வெளியில், எச்சில் இலைகள் குவியும் குப்பைத் தொட்டிகள் பக்கத்தில் என எங்கும், ஒட்டிக் கொண்டிருக்கும் தனது மிச்ச உயிருக்காகக் கையேந்தும், சில நேரங்களில் வயிற்றைத் தடவிக் காட்டி கைகள் கூப்பும் ஜீவன்களாக பல அப்பாக்களையும் அம்மாக்களையும் கண்டும் காணாதபடி நாம் கடந்து சென்று கொண்டே தான் இருக்கிறோம்.