ஒவ்வொரு அடிமையின் மனதிற்குள்ளும் தனக்கும் ஒரு நாளில் விடுதலை கிடைக்காதா என்ற ஏக்கம் இருக்கும். நிஜத்தில் கிடைக்காத ஒன்றை கனவுகளில் கொண்டாடப் பழகிய மனிதர்கள் என்ற வகையில் தனக்கு விடுதலை கிடைக்கும் அந்த நொடி எப்படி இருக்கும் அல்லது எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரளவிற்கு முடிவு செய்திருப்பார்கள். அது பலவருட அடிமைத்தனத்தின் பாதிப்பாகவோ, நியாயமான ஒரு எதிர்ப்பார்ப்பின் நிழலாகவோ அவர்களின் ஆழ் மனதிற்குள் எழுப்ப ஆளில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கும்.
ஆழ்மன எண்ணங்கள் தான் கனவுகளாக மாறுகின்றன என்பது அறிவியல் நமக்குள் புகுத்தியிருக்கும் நம்பிக்கை. அதன் அடிப்படையில், விடுதலைக்கான அக்கணம் அவ்வப்போது கனவுகளில் வந்து போவதில் ஆச்சர்யம் இல்லையெனினும், வந்து.. போய்விடுகிறது என்பதிலுள்ள சொல்லழுத்தம் வலியை மட்டுமே தரத்தக்கது.
கள்ளம் அறியாத ஒரு குழந்தையின் சுவாசத்தில் புத்துயிர்பெறும் சோப்பு நுரை, எப்படி கம்பிகளின் பிடியிலிருந்து விலகி, நீர்குமிழிகள் உருவத்தில் புதுவாழ்க்கை பெற்று, சுதந்திரக் காற்றில் மிதந்துச் செல்கிறதோ, அதற்கு நிகரான ஒரு விடுதலையை, சங்கிலிகள் அனுமதித்த எல்லைகளுக்குள் சுருங்கிப் போய்விட்ட ஒரு இருட்டு உலகத்தில் வாழும் தானும் பெற ஏங்கிடும் ஒரு அடிமையின் குமுறலாக எழுத நினைத்ததன் விளைவு தான் ‘அடிமை கனவுகள்’.
No comments:
Post a Comment