விவரம் சரிவர தெரியாத வயதில் ஒரு தட்டில் பத்து பதினைந்து சாக்லெட்டுகள் போட்டுக் கொடுத்து வீட்டிற்கு வருபவர்கள் முன் நீட்டச் சொல்வார்கள் அம்மா.
இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு, நூறு காரமில்க் சாக்லெட்டுகள் வேண்டும் என்று அடம்பிடித்துக் கேட்டு வாங்கி, பள்ளியில் என் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்பு வகுப்புாய் சென்று பிற ஆசிரியர்களுக்கும் கொடுத்திருக்கிறேன்.
அதுவே, கொஞ்சம் மீசை அரும்பத் தொடங்கியதும், மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் பள்ளி முடிந்து திரும்புகையில் ரோஸ் மில்க் வாங்கித் தருவதாக மாறியிருந்தது.
கல்லூரியிலோ, நடுச்சாமக் கோவைக் குளிரில், தங்கியிருந்த வீட்டின் மொட்டை மாடியில் கேக் வெட்டி பெப்சி குளியலோடு முடிந்திருக்கிறது.
பிறகொரு கட்டத்தில், காதலியின் சர்ப்ரைஸ் அன்பளிப்புகள், பின் அதே காதலி மனைவியாகி நாள் முழுதுமானச் சின்னச்சின்னக் கொண்டாட்டங்களென பருவங்கள் தோறும் இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மாறிக் கொண்டே வந்துவிட்டது.
இருப்பினும், எந்தவொரு பிறந்தநாளும் கடந்த இரண்டு வருடங்கள் போல இருந்ததில்லை. கடந்த வருடம் அவள் பிறந்து பதினான்கு நாட்களே. இம்முறை என் விரல் கோர்த்து கொஞ்சம் நடக்கிறாள். என் இந்த வாழ்க்கையை மொத்தமும் இயக்கி ஆள்பவளாய் அதுவும் வேகமாய் மாறி வருகிறாள்.
அவள் வந்த பிறகு,
பிறந்தநாளில் உள்ள இறந்த காலம்
இறந்து விட்டதாகத் தோன்றுகிறது.
அவளோடு இனி எல்லாமே..
பிறக்கும் நாட்கள் தான்!
No comments:
Post a Comment