நமது ஊரில் நல்ல படைப்புகளுக்கு மரியாதையே கிடையாது. அந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கும் ஒரு மிக அவசியமான படைப்பு தான் ’49O’.
ஒரு பெரிய (நான் சொல்வது வியாபர ரீதியில்) நடிகர் நடித்திருந்தால் இன்னும் அதிகக் கவனம் பெற்றிருக்குமோ என்னவோ. ஆயிரம் தான் இருந்தாலும் கவுண்டமணியை காமெடியனாகத் தான் பார்க்கிறது தமிழ் உலகம். ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. இன்று அனல் பறக்க கதாநாயகர்கள் பேசும் பஞ்ச் வசனங்களின் சாரத்தை தொண்ணூறுகளிலேயே ஒரு துணை நடிகனாக அதுவும் காமெடியனாக தனக்கே உரிய நையாண்டியுடன் அனாயாசமாக பதிவு செய்தவர் கவுண்டமணி. அப்படி, காமெடியனாக நடிக்கும் போதே ஹீரோவாக ஜொலித்தவர், ஹீரோவாக நடிக்கும் படத்தில் சொல்லவா வேண்டும். பிண்ணியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில், தேர்தல் ஆணையத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் ஒரு புரட்சியை கவுண்டமணி தலைமை தாங்க, பத்தரிக்கையாளர்கள் அவரைத் தேடி வருகிறார்கள். அதில் ஒரு பத்திரிக்கையாளர், வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லையென்றால் NOTA பயன்படுத்தலாமேயென்று கேள்வி எழுப்புகிறார். அதற்குப் பதில் அளிக்கும் போது, ‘தேர்தலுக்கு முன் கருத்துக்கணிப்புனு ஒன்னு நடத்துறீங்க. இந்தக் கட்சிக்கு எவ்வளோ பர்சன்டேஜ், அந்தக் கட்சிக்கு எவ்வளோ பர்சன்டேஜ் னு கணக்குப் போடுற நீங்க, என்னக்காவது NOTA க்கு எவ்வளோ பர்சன்டேஜ் னு வெளியிட்டிருக்கீங்களா. NOTA வ நீங்களே இருட்டடிப்பு செஞ்சுட்டு, NOTA னு சொன்னா சாமானியனுக்கு NOTA வ பத்தி என்னமா தெரியும் னு பாயுறாரு. இதெல்லாம் தியேட்டரில் விசிலடிச்சு பார்க்க வேண்டிய காட்சி. ஒரு தவறை மறைக்க இன்னுமொரு தவறு புரிவது போல, NOTA இருட்டடிப்பைக் கேள்வி கேட்கப் போய் 49Oவும் பத்திரிக்கை உலகால் இருட்டடிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
முன்னமே சொன்னது போல, ஒரு பெரிய நடிகர் நடித்திருந்தால் அதிகக் கவனம் பெற்றிருக்கலாம். ஆனால் படம் பிரச்சனையில்லாமல் வெளியாகியிருக்குமா என்பது வேறு விஷயம். நாட்டில் ஜனநாயகத்தின் நிலையப்படி.
அதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடக்கும் இன்னுமொரு சுவாரஸ்யமான உரையாடல் தான் நினைவி்ற்கு வருகிறது.
சரி, NOTA ஜெயிச்சா என்ன ஆகும்?
மறுதேர்தல் வரலாம்!
அப்படி மறுதேர்தல் வந்தா, நாங்க நிராகரிச்ச வேட்பாளர்கள் நிக்க மாட்டாங்களா?
அது எப்படி சார் தேர்தல் ஜனநாயகமாகும்?
ஏன்மா.. ஒரு லட்சம் பேர் உணர்வுக்குக் கிடைக்காத ஜனநாயகம், வேண்டாம்னு சொல்ற நாலு வேட்பாளர்களுக்குக் கிடைக்குதுனா, அப்புறம் எதுக்குமா அந்தப் பொம்மக் கத்தி?
திரைக்கதையில் ஆங்காங்கே சின்னதாகச் சொதப்பியிருந்தாலும், வசனங்களில் கலக்கியிருக்கிறார் இயக்குனர் ஆரோக்கியதாஸ். உதாரணமாக, இவ்விரு வசனங்களை மட்டும் பகிர்கிறேன்.
“எவன தலைவன் ஆக்கணும்னு உங்களுக்கும் தெரியல, தலைவன்னா எப்படியிருக்கணும்னு அவங்களுக்கும் தெரியல, போங்கட டேய்!”
“உலகம் முழுக்கச் சொல்லலாம், வருங்காலத்த வாழ்றதுக்கு மாத்திர வரும்னு. ஆனா அந்த மாத்திரைய திண்ணுட்டு எத்தனக் காலத்துக்கு உயிர் வாழ முடியும். மண்ணுல விளையுறத திண்ணாதான் மண்ணு கடைசியில நம்மளத் திண்ணும். அத விட்டுட்டு மருந்து மாத்திரைய திண்ணீங்கனா அந்த மண்ணு கூட உங்கள திங்காது. வாந்தி எடுத்துரும்”
மொத்தத்தில், உழவையும் உழவர்களையும் கொன்ற இடத்தில் எழுப்பட்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் குற்றவுணர்ச்சியோடுப் பார்க்க வேண்டிய திரைப்படம் தான் இந்த ’49O’.
No comments:
Post a Comment