Friday, October 9, 2015

புற்றுநோயை தூர வைக்கும் தூக்கம்

சூர்ய உதயம் மற்றும் அஸ்தமனத்தைச் சுற்றி இயங்க வேண்டிய உயிரினங்களில் மனிதர்களும் அடங்குவர். எட்டு மணி நேரம் தூக்கம் தானே, அது எப்பொழுது தொடங்கி எப்பொழுது முடிந்தால் என்ன என்று எண்ணி இரண்டு அல்லது மூன்று வரை விழித்திருந்துவிட்டு காலை பத்து பதினொன்று வரை தூங்கும் புத்திசாலிகளில் நானும் ஒருவன் தான். சரி இப்படிக் தூக்கம் கெட்டுப்போனால் என்ன ஆகிவிடப் போகிறது, மிஞ்சி மிஞ்சிப் போனால் தலை வலி வரும் என்று அலட்சியமாக இருந்து விடுகிறோம். ஆனால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை நாம் அதிமாக்குகிறோம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

Melatonin என்பது காரிருள் சூழ்ந்திருக்கும் வேளையில் நம்மில் சுரக்கும் ஒரு ஹார்மோன். அதன்படி பார்த்தால், அந்தக் காலத்தில், இரவு நேரங்களில் நம் மக்களுக்குள் இயல்பாகவே சுரந்திருக்கும். ஆனால் மின்விளக்குகளின் கண்டுப்பிடிப்பிற்குப் பிறகு, இருளின் நீளம் வெகுவாகக் குறைந்துவிட்டக் காரணத்தாலும், இரவு வாழ்க்கையென்றொன்றை நாம் பெருமையாக நினைக்கத் தொடங்கிய விபரீதத்தாலும் Melatonin தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதிலும், இந்த ஸ்மாட்போர்ன்கள் வந்த பிறகு, சொல்லவே வேண்டாம். இரவில் கண்விழிப்பதென்பது ஒரு தொற்று நோயாக மாறியிருக்கிறது. நண்டுச் சிண்டுகளெல்லாம் வாட்ஸ்ஆப் ஃபேஸ்புக்கால் தூக்கம் தொலைத்திருக்கின்றன. இது ஆரோக்கியமானதே அல்ல என்கிறது மருத்துவ உலகம்.

Melatonin ஹார்மோனில் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி அடங்கியுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறனர். ஆரம்ப நிலை புற்றுநோயாளிகள் இந்த ஹார்மோனை வாய்வழி மருந்தாக உட்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறார்கள். அப்படியிருக்க, நாம் தூங்குவதைத் தவிர்ப்பது அல்லது தாமதப்படுத்துவதன் மூலம் இந்த ஹார்மோன் சுரப்பிகளோடு மறைமுகமாக விளையாடத் தொடங்கியிருக்கிறோம். மேற்கத்திய நாடுகளில் உறக்கப் பிரச்சனைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ ஆலோசனைகளில் மிக முக்கியமானதொன்று, கருப்பு கண்ணாடிகள் அல்லது Eye Mask களை பயன்படுத்தச் சொல்வது தான். அது இருளை உறுதிப்படுத்தி Melatonin உற்பத்தியைச் சீர்ப்படுத்தும் என்பதுதான் அதன் பின்னனி. ஆனால் அதைப்பற்றிய விழிப்புணர்வு கொஞ்சம்கூட இல்லாமல், இரவு வாழ்க்கையொன்றை நமக்கு நாமே வகுத்துக்கொண்டு, புற்றுநோய்க்குப் பிள்ளையார்சுழி போட முயற்சிக்கிறோம்.

இது சம்மந்தமான, நீயா நீனா நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த டாக்டர் சிவராமனின் உரை அடங்கிய காணொளியை எனது ஃபேஸ்புக் பக்கத்தில்பகிர்ந்திருக்கிறேன். நேரமிருந்தால் பார்க்கவும்.

No comments:

Post a Comment