ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்களாம். அந்தப் பாட்டிக்குச் சொந்தம் னு சொல்லிக்க யாருமே இல்லையாம். அந்தப் பாட்டிக்கு பசிக்கும் ல. புவ்வா வேணும் ல. காசு இல்லாம் புவ்வா எப்படி தருவாங்க. தர மாட்டாங்க ல. அதான் அந்தப் பாட்டியே வடை, அதான் ரவுண்டா நடுவுல ஒரு ஓட்டையோட இருக்குமே, நம்ம அம்மாக்குக் கூட ரொம்ப புடிக்குமே, அதச் சுட்டு வித்து, அதுல வர்ற காசுல அரிசி காய் எல்லாம் வாங்கி காலம் தள்ளிட்டு இருந்துச்சாம். தன்னோட குடிசைக்குப் பக்கதுல இருக்குற ஒரு மரத்துக்குக் கீழ உட்கார்ந்து தான் தினமும் வடை சுடுமாம். அப்படி தான் ஒரு நாள் காலையில, பாட்டி வடை சுட்டு சுட்டு ஒரு பாத்திரத்துல வச்சிட்டே வந்துச்சாம். அத மரத்துல் உட்கார்ந்திருந்த ஒரு காக்கா பாத்துட்டே இருந்துச்சாம். அந்தக் காக்காக்கு செம பசியாம். முந்தின நாள் நைட் அவங்க அம்மா புவ்வா ஊட்டும் போது ஒழுங்க சாப்பிடலையாம் அந்தக் காக்கா. நீ சமத்துப் பாப்பா ஆச்சே.
ஆவி பறக்க இருந்த வடையெல்லாம் பாத்ததும், காக்காக்கு நாக்குல எச்சி ஊறி ‘ந்யம் ந்யம்’ பண்ணுச்சாம். ரொம்ப நேரமா வடை சுட்டுட்டு இருந்ததுனால பாட்டி டயர்ட்ல லைட்டா கண்ணசந்துடுச்சாம். எப்படியாவது ஒரு வடைய நம்ம டேஸ்ட் பண்ணிடனும் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்த அந்தக் க்ரிமினல் காக்கா, இது தான் ரைட் டைம் னு சொல்லி மரத்தில இருந்து சொய்ங்ங்ங்குனு கீழ வந்து பாத்திரத்துல இருந்த ஒரு வடைய அலேக்கா வாயில் கவ்வி பறந்து போய் பக்கத்துல இருந்த இன்னொரு மரத்து மேல உட்கார்ந்துகிச்சாம்.
காக்காக்கு ஒரே குஷி. இன்னும் கொஞ்ச நேரத்துல வடைய சாப்பிடப் போறோம் னு. சரி சாப்பிடலாம் னு அது கடிக்கப் போகும் போது, ‘டக் டக் டக்’ னு யாரோ நடந்து வர சத்தம் கேட்டுச்சாம். கீழே குனிஞ்சு பாத்தா ஒரு நரி. மரத்து மேல இருக்குற காக்கவையும் அது வாயில இருக்குற வடையையும் அந்த நரி வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருந்துச்சாம். காக்காக்கு ஒரே பயம். ஏன் இந்த நரி நம்மள இப்படி பாக்குது னு. ஆக்ட்சுவலா.. அந்த நரிக்கும் செம பசியாம். அதுவும் முந்தின நாள் நைட் அவங்க அம்மா குடுத்த புவ்வாவ ஒழுங்கா சாப்பிடலையாம் (இந்த லைன் சொல்லும் போது மட்டும் என் பொன்னு ஒரு மாதிரி “பாசமா” பாத்தா.. அப்பா மேல ஆசை இருக்காதா பின்ன!).
எப்படியாவது காக்கா கிட்டயிருந்து அந்த வடைய எடுத்து சாப்டுறனும் னு டீப்பா யோசிச்சுதுல செம ஐடியா ஒன்னு கிடைச்சுதாம். காக்காவ பார்த்து,
“காக்கா காக்கா நீ எப்படி இவ்ளோ அழகா இருக்கே?” னு கேட்டுச்சாம்.
காக்காக்கு ஒரே கன்ஃப்யூஷன். நம்மளே கரி பூசின மாதிரி இருக்கோம். நம்மள போய் அழுகு னு சொல்றானே னு யோசிச்சுதாம். அதுக்குள்ள நரி மறுபடியும்,
“நீ ஒரு பிளாக் ப்யூட்டி” னு ஒரு ஐஸ் வச்சுதாம்.
காக்காக்கு நரி மேல டவுட் இருந்தாலும் அந்தக் கமெண்ட்டு காக்காக்குப் பிடிச்சுதாம்.
“நீ ரொம்ப நல்லா பாடுவியாமே.. என் ஃபிரண்ட்ல் எல்லாம் சொன்னாங்க.. எங்க, எனக்காக ஒரு பாட்டு பாடேன்” னு இன்னொரு பிட் போட்டுச்சாம் அந்தக் கன்னிங் நரி. காக்கா பாட வாய் தொறந்தா, அது வாயில இருக்குற வடை கீழே விழும் அதத் தூக்கிட்டு ஓடிறலாம்ங்கிறது நரியோட மாஸ்டர் பிளான். அது புரியாம நரி பேசினதுல மயங்கி அந்தக் காக்கா, ‘கா……’ னு பாட வாய் தொறந்துச்சு பாரு… வடை தொப்புக்கட்டீர்ர் னு கீழ விழுந்துடுச்சு. எப்படா வடை விழும் னு காத்துட்டு இருந்த நரி, ஒரே ஜம்ப் பண்ணி, வடைய ஏர்லயே பிடிச்சு, குடு குடு னு ஓடிப் போய்டுச்சாம்.
காக்காக்கு ஒரு நிமிஷம் என்ன நடந்துச்சுன்னே புரியலயாம். அந்நியாயமா வடைய பரி கொடுத்துட்டோமே னு ரொம்ப ஃபீல் பண்ணுச்சாம். இதுக்கு நடுவுல பாட்டி எழுந்து நடந்த எல்லாத்தையும் பாத்துட்டு இருந்திருக்கு. சோகமா உட்கார்ந்திருந்த காக்காவ பாத்ததும் பாட்டிக்கு பாவமா போய்டுச்சாம். ‘கா.. கா..’ னு அந்தக் காக்காவ கூப்டு, ஒரு வடைய சாப்பிடக் குடுத்துச்சாம் பாட்டி. காக்காக்கு ஒரே பப்பி ஷேம் ஃபீலிங் வந்துடுச்சாம். இப்படி ஒரு நல்ல பாட்டிகிட்ட போய் நம்ம திருடிட்டோமே னு ரொம்ப ஃபில் பண்ணி சாரி கேட்டுச்சாம். “பராவாயில்ல விடு. நீ என்ன ஏமாத்தி வடைய தூக்கிட்டு போன, இப்போ பாரு, அந்த நரி உன்ன ஏமாத்தி வடைய தூக்கிட்டு போய்டுச்சு. இதுக்கு தான் யாரையும் ஏமாத்த நினைக்கக் கூடாது. உனக்குப் பசியிருந்தா என்கிட்ட வந்து கேளு. நானே உனக்கு குடுக்குறேன்” னு அந்தப் பாட்டி சொல்ல, காக்கா கண்ணுல தண்ணியோட பாட்டி குடுத்த வடைய சாப்பிட……..
என் பொண்ணு “ம்ம்ம்மே…..” னு ஒரே அழ!
“ஏ தங்கம்.. ஏன்டா.. தூக்கம் வந்துடுச்சா.. தூங்கிடலாம் தூங்கிடலாம்!” னு நானும் என்னென்னவோ சமாதானம் பன்றேன்.. ம்ம்க்க்கும்..
அவ அழற சத்தம் கேட்டு அவங்க அம்மா கிட்சன் ல இருந்து ஓடி வந்து என்ன “பாசமா” நாலு வார்த்த கேட்டா பாருங்க.
அதுக்கு பதிலா, “நான் நம்ம பாப்பாக்கு சூப்பரா கதை சொல்லிட்டு இருந்தேன். அதுல அவளுக்கு அப்படியே தூக்கம் சொக்கிட்டு வந்துடுச்சு. உன்னக் கூப்பிடலாம் னு யோசிட்ட்ட்ட்ட்டே இருக்கேன், நீயே வந்துட்ட, யு ர் டூ ஃபாஸ்ட்..” அப்படினு சொல்லி முடிக்கிறேன், என்ன அவ “பாசமா” பாத்துட்டு இருந்தா. தட் சேம் “கொஞ்சம் க்ளோல் பண்றியா” லுக்.
“ஓகே!!” (இந்த இடத்துல தான் என் பொண்ணோட “பாச” லுக்கோட அர்த்தம் புரிஞ்சுது எனக்கு. தாய்க்கு மக தப்பாம பொறந்திருக்கா னு நினைச்சுகிட்டேன். ஆனா அவகிட்ட சொல்லல).
“நீ வா டா செல்லம்!” னு அவ கொழந்தைய தூக்கிக்கிட்டதும், “வே வே வ்யே வ்யே” னு ஹை பிட்ச்ல அவ பங்குக்கு ஒரு நாலு வார்த்த பேசிட்டு ஒரு வழியா அழுக நின்னுச்சு. எனக்கு இப்போ என்ன டவுட் னா, என் மனைவி என்கிட்ட சொன்ன அந்த நாலு வார்த்தைக்கும் என் பொண்ணு பேசின நாலு வார்த்தைக்கும் எதாவது சம்மந்தம் இருக்குமோங்கிறது தான்.
“ஏன் இப்படி கொழந்தைய டார்ச்சர் பண்றீங்க!”
No comments:
Post a Comment