மறப்பதும் மன்னிப்பதும் எவ்வளவு முக்கியம் என்று உணர்த்தும் ஒரு நிகழ்வு நம் எல்லோர் வாழ்க்கையிலும் கடவுளால் கதையாக்கப் பட்டிருக்கிறது.
அத்தருணத்தில்,
தான் அதுவரை மன்னிக்காதவற்றை மறக்க முடியாமலும்
மறக்காதவற்றிற்காக தன்னை மன்னிக்க முடியாமலும்
மனம் அல்லாடத் தான் போகிறது!
சில உறவுகள் நம்மைத் தொடுகின்றன..
சில உறவுகளை நாமாகவே தொடுகிறோம்..
எவ்வகையாயினும் கூடி மகிழ்கிறோம்!
தோள் கோர்த்து ஒன்றாக
நன்றாகவே பயணிக்கிறோம்!
பிறகொரு நேரத்தில்,
காலத்தின் சூழ்ச்சியாலோ..
அன்பின் சிறு வீழ்ச்சியாலோ..
ஒரு தவறு நிகழ்கிறது!
ஆறாத ரணங்களால் நெஞ்சம் நிரம்புகிறது!
கோபம் குவியல் குவியலாய் முளைத்து நிற்கிறது!
உடைபட்டு அழுகிறோம்!!
பேசக் கூடாத வார்த்தைகளை விட்டு எறிந்தும்,
கடக்கக் கூடாத எல்லைகளையும் நொடியில் கடந்தும்,
ஒரு கட்டத்தில்..
ஆசையாய் தொட்ட அதே கைகளால்
கழுத்தையும் நெறிக்கிறோம்!
இன்னும் கொஞ்சம் தான்
உயிர் பிரிந்துவிடும் என்ற தருணம் அதில்,
விட்டு விடுகிறோம்..
ஒரே அடியாக!!
யோசித்துப் பார்த்தால்..
இந்தக் கோபங்கள் எல்லாமே
ஓர் நாள் கரைந்துப் போகக் கூடியவை!
கண்ணீரும் வடிந்து காய்ந்துப் போகக் கூடியதுவே!
என்ன..
இந்த ரணங்களுக்கு மட்டும் கொஞ்சம் ஆயுள் அதிகம்..
ஒரு பக்கமாய் அவை இருந்துவிட்டுத் தான் போகட்டுமே!
இவ்வுலகில் யாருக்கில்லை வலி?
மகிழ்வித்தவர்கள் வலி தருவார்கள்
என்று நாம் எதிர்ப்பார்க்கிறோமா என்றால் இல்லை!
ஆனால் தந்து விடுகிறார்கள்!!
அது போலவே தான்,
வலி தந்தவர்களும் மீண்டும் ஓர் நாளில்
நம்மை மகிழ்விப்பார்கள்!
இதையும் நம்ப வேண்டாம்..
ஒருவேளை நடந்து விட்டால்?
மறப்போமே!
இன்னுமொரு முறை
மன்னித்துத் தான் பார்ப்போமே!!
No comments:
Post a Comment