Friday, September 13, 2013

நன்றியுடன் காகிதம்!

ஒரு காகிதம், பேனாவிற்கு எழுதும் கடிதமாகப் பார்க்கவும்.

கிழிபடும் என்னை வழிபடச் செய்தாய்!
சுவாசிக்க வைத்தாய்..
பிறர் வாசிக்கவும் வைத்தாய்!

கவிகளின் ஒரு கையாய்,
அறிஞரின் மறு கைபோல்,
எழுத்தாளரின் உயிர்ரேகையே..
வியப்பளிக்கும் உன் வாழ்க்கை!

மேதைகளின் மேஜைகளில்
நீங்கா இடம் உனக்கு!
பாறையோ.. பனிச்சிலையோ..
தடம் மாற்றும் திறனிருக்கு!

நித்தம் நித்தம் உனக்கு யுத்தம் யாருடனோ?!
இரத்தச் சிதரல்களாய்
என் மேல் எழுத்துக்கள்!

உன் கூரிய உதடுகள் குத்தும் முத்தம்..
சத்தமின்றி என் மேல் சரித்திரம் படைக்குதே!

நீல இரத்தம் சிந்தும் இலட்சியவாதியே..
என் நிலை நிமிர்த்தத் தான்
உன்னுடல் சாய்க்கிறாயோ?!

எதிர்பாரா உதவிக்கு நீயே இமயம்!
மறவா பண்புக்கு நானோர் உபயம்!!

                                                        என்றும் நன்றியுடன்,
                                                        காகிதம்.

No comments:

Post a Comment