Tuesday, July 9, 2013

பங்குச் சண்டை!!

அப்பத்தா இறந்துவிட்டாலென
அலறலும் இல்லை!
அய்யோ.. அம்மாவென யாரும்
பதறவும் இல்லை!

உற்றார் உறவினரென
ஒன்று கூடினர்!
ஓரிரு நாழிகைக்கு மட்டும்
ஊன்று தேடினர்!

பாசம் காரணமாகக்
கண்கள் துளி விட்டனவோ..
பொய்யோ மெய்யோ அவை
சரியாய் சொட்டினவே!

மாலை மரியாதைகளெல்லாம்
பாதங்களில் சமர்ப்பணம்!
இந்த கலியுகக்காலத்திலும்
நடப்பதவள் கொடுப்பினம்!

எழவும் கூடிட இங்கு
‘இலை’ விரித்து ஆடுகிறது!
இரவும் ஓடிட சீட்டு’கள்’
பாய் விரித்து புரள்கிறது!

பிணத்திற்கு துணையென்று
வட்டமிட்டு அமர்ந்துவிட்டு..
வெற்றிலை அரைத்தவாறே
வெட்டிக்கதை ஏனோ.. பெண்கள்!

வாய்க்கரிசி போடும்போது மட்டும்
மாரில்தட்டி அழுதுவிட்டு..
அந்த பெண்ணரசி போகும்போதே
மொத்த துக்கமும் தூரப்போகுதே..!

எமன் வந்து அழைத்ததால்
சென்றாலோ.. பிள்ளை,
எவனும் வந்து அனைக்கவில்லை
எனச் சென்றாலோ..?!

உண்மை நிலை
அறிவதற்குள் ஊதிவிட்டார்கள்..!
எரியும் சூளை
அனைவதற்குள் திரும்பிவிட்டார்கள்..!

போனது போகட்டுமென
நினைத்தார்களோ என்னவோ..
பொன்னும் பொருளும் அதற்குள்
பிரிவைக் காண்கிறது..

பங்குச் சந்தை சரிவெல்லாம்
ஒரு பக்கம் இருக்கட்டும்..
‘பங்குச் சண்டை’ சரியுமா?!
இறைவனுக்குத்தான் வெளிச்சம்!

No comments:

Post a Comment