Tuesday, June 25, 2013

திடீர் சாமி!

எனை பெற்ற மண்ணுக்கும்,
அவள் தோழிக்கும்
பத்து மைல் தூரம்!
தினமும், வேலையாக
இப்பாதையைக் கடக்கிறேன்!

இன்று, எனக்கே ஆச்சர்யம்!
காரணம்.. ஓர் திடீர் சாமி!
அதுவும்.. ஊரிலிருந்து கிளம்பிய
ஆறாவது மைலில்!
நேற்று வரை இல்லையே, இன்றெப்படி??
மூளைக்குள் முடிச்சுகள்
முடியத் தொடங்கின!

வியப்பில் ஒருவனை
விழித்து விசாரித்தேன்!
விழுந்து விழுந்து சிரிக்கத்தான்
அவன் பதிலுக்கு விவரித்தான்!

வடக்கில் சூறாவளியாம்!
இடித்த இடியில்
இமயமே பெயர்ந்ததாம்!
உச்சிப் பாறை ஒன்று
காற்றோடு வந்ததாம்!
நான் கல்லல்ல கடவுளென
அதுவே சொன்னதாம்!
பாறையில் தேங்கியிருந்த
நீர் தான் வழிந்து,
மழையாய் பெய்து
நேற்றிங்கு நிலத்தை நனைத்ததாம்!

இதென்னடா வேடிக்கையென நினைப்பதற்குள்,
‘உங்களுக்கு விவரமே தெரியாதா..?
ஓ! நேற்று ஞாயிறுல்ல..
அதான் தெரியல..!’
என்று முடித்தான்.

அட பாவிகளா..!
ஞாயிறு என்றால்
வேலைக்குத்தானடா விடுமுறை..
மூளைக்குமா விடுமுறை??
என்ன பேசுகிரீர்கள்..?
வடக்கில் அடித்த சூறாவளிக்கு
தெற்கிலென்னடா வேலை??
உங்களிடம் என்ன சொல்லி
புரிய வைப்பேன்..
இது பல மைல்கள்
தாண்டி வந்த சாமியல்ல,
ஒரு மைல் கல்
மாண்டு வந்த சாமியென்று!

ஒருவன் அங்கு
மூளை இறந்தும்
இருதயம் அளிக்குறான்!
நீங்களோ இங்கு
மூளை இருந்தும்
இறைவன் பெயர்
சொல்லி அழி(க்)கிறீர்..!

ஒன்று மட்டும் நிச்சயம்..
மூடநம்பிக்கைக்கு ஆஸ்கர் வழங்கினால்
மொத்தமும் உங்களுக்குத்தான்..!

No comments:

Post a Comment