Friday, April 17, 2015

எதுவும் கடந்து போகும்..

அதிகாலை முகூர்த்தம் கொண்ட
கல்யாணங்களுக்குச் செல்வதில்,
இது ஒரு பிரச்சனை!
மூன்றாம் சாமம் தொட்ட பின்பும்,
தூக்கம் கண்களை விடுவதாயில்லை!!

என் அறை மொத்தமும்
இருளால் சூழப்பட்டிருக்கிறது!

காற்று பட்டு விலகும்
ஜன்னல் திரை,
அது வழிவிடும் வெளிச்சம் மட்டும்
என் கண்கள்
உயிர்த்துக் கொள்ள உதவுகிறது!

அலைபேசியில்,
என் வயதைக் குறித்து இருந்த
இருபத்தாறு மிஸ்டு கால்களால்
மெல்ல நினைவூட்டப்படுகிறேன்…

இன்றெனது பிறந்தநாளென்பதைக் கூட
மறந்து தூங்கியிருந்திருக்கிறேன்!!

வழக்கமாக.. இந்நாட்களில்,
என்னை தழுவிக் கொள்ளும் சந்தோஷம்,
இன்று என் அறையின்
எந்த மூலையில் தேடியும் காணவில்லை!

கால் நூற்றாண்டு காலமாக,
நான் சிரித்த
அத்தனைச் சிரிப்புகளுக்கும்,
சட்டென ஒரு முற்றப்புள்ளி
வைக்கப்பட்டுவிட்டதுபோல உணர்கிறேன்!!

பாதி தூக்கம்,
தெளிவில்லாத எண்ண அலைகள்,
ஒரு வித சோகம்,
இனம் புரியாத வலி என
என்னைப் பிய்த்து மேய்கிறது இந்த நொடி!!

திடீரென,
காகிதங்கள் புரட்டப்படும் ஒரு சத்தம்!
என் படுக்கைக்கு அருகில்,
ஒரு மேஜையில்,
காற்றாடியின் தூண்டுதலால்
தன்னைத் திறந்துக் கொள்ள முயற்சிக்கிறது,
ஒரு விவாஹ பத்திரிக்கை!!

மறுகனம்,
என் கண்களிலிருந்து
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கண்ணீர் வழிகிறது!!

காலையில் கலந்து கொண்ட கல்யாணம்,
ஒரு கணம்,
கண்முன்னே வந்து மறைகிறது!!

ஒரு வழியாக.. எப்படியோ..
அழுகையின் அடையாளங்களை அழித்துவிட்டு,
அறையை விட்டு வெளியேறும் என்னை,
“ஹாப்பி பர்த் டே மாமா!”
என்று வாழ்த்தியபடி,
என் அக்காவின் நாலு வயது பொடியன்,
என் முழங்கால்களைத் கட்டிக் கொள்கிறான்!!
அவ்வளவுதான்..
நான் மீண்டும் பிறந்துவிடுகிறேன்!!!

No comments:

Post a Comment