Monday, March 23, 2015

மனைவி என்றொருத்தி!!

ஏனோ
முன்பு போல உன்னை
நான் காதலிப்பதில்லை!

உன் மீது காதலில்லாமல் இல்லை..

இந்தக் காதல் மீது தான்,
கொஞ்சம் காதல் குறைந்திருக்கிறது!!

இனிப்பு வேண்டுபவளுக்கு,
தொடர்ந்து கசப்புகளை சுவைக்கும்
வாய்ப்புகளே அமையும் பொழுது,
ஒரு கட்டத்தில்..
கசப்பின் மீதும் வெறுப்பு முளைக்கும்!
இனிப்பின் மீதும் வெறுப்பு முளைக்கும்!

அப்படித் தான்,
இந்தக் காதலும்
எனக்குப் பிடிக்காமல் போயிருக்கிறது!

காதலில்லாமல் வாழத் தெரியாதவளுக்கு
எத்தகைய பேரிடி இது!

ஆனாலும்,
வாழ்வின் இந்த அத்தியாயம்
ஒரு வகையில் பிடித்திருக்கிறது!

அழுகை அழித்து கொஞ்சம் வலிகள் பயில்கிறேன்.
அனுபவம் கிடைக்கிறது!

கோபங்கள் கொன்று புன்னகை அணிகிறேன்.
பக்குவம் பிறக்கிறது!

சண்டைகளே வேண்டாமென சரணடைகிறேன்.
வேதனை குறைகிறது!

மிகப் பிடித்தாலும் உனக்காகத் தவிர்க்கிறேன்.
அமைதி பரவுகிறது!

வேறென்னென்ன வேண்டும் கேள்,
அத்தனையும் செய்யத் தயார்!

ஆனால்..

வாரத்தில் ஒரு மாலை வேளையேனும்
எனக்கென முழுதாய் அற்பணி!

முதலில் கொஞ்சம் வீடு வா!

என்னோடு ஓரிரு வார்தைகள் பேசு!

ஒரே ஒரு குவளை காஃபி பகிர்!

உனதருகில் அமர்ந்து
உன் விரல் பிடித்துவிட அனுமதி!

உனக்கென நான் எழுதி வைத்திருக்கும்
கவிதைகளுள் ஒன்றை படி!

நிலவு எட்டிப் பார்க்க என் கை கோர்த்து நட!

பத்தடிக்கொரு முறை
நான் சாய்ந்துக் கொள்ள உன் தோள் கொடு!

முக்கியமாக,
சிடுசிடுக்காமல் எனை வீடு திருப்பு!

உனக்குப் பிடித்தமான அந்த ஐரோப்பிய உணவை
இரவுக்குச் சமைத்துத் தருகிறேன், உண்!

பிறகு குடிக்க வேண்டுமெனில் குடி!

புகைக்க தோன்றின் அதையும் செய்!

ஆனால்,
நீ செய்வதை
நீ அறியும் அளவில் மட்டும் முடி!

அப்புறமென்ன..

சுத்தகரிக்கப்பட்ட நமதறையின் அகண்ட மெத்தை விரிப்பை
வழக்கம் போல் நீயே ஆக்கிரமித்துப் படு!

கண்ணுறங்கிப் போகும் முன் ஒரே ஒரு நொடி..

முக்காலமும் இருண்டுக் கிடந்த என் முகம்
எப்படி மலர்ந்து ஒளிர்கிறதென்பதை பார்!

விலையுர்ந்த உடையோ அல்லது
எவ்வித ஆடம்பரத்தின் நிழலோ வேண்டாம்
உன் இந்த நேரம் மட்டுமே போதும் என்பதை உணர்!

அது போதும்..
நீயே கதியென வாழும் இந்தப் பைத்தியக்காரிக்கு!!

No comments:

Post a Comment