Friday, March 27, 2015

தேவதைகளின் இளவரசி – 7

எனக்கு அவளை மூன்று மாதக் கருவிலிருந்தே தெரியும். மூன்றாவது மாத ஸ்கேன் முடிந்து வெளியில் வந்த அவளது அம்மாவின் முகத்தில் பத்து நொடிகளுக்கு புன்னகையை தவிர வேறு எதுவுமே என்னால் பார்க்க முடிந்ததில்லை. பூரிப்பில் சிவந்திருந்த அவளது கன்னங்கள் நான் சொல்வதற்குச் சாட்சி. ‘பாத்தியா?’ என்று கேட்டேன். தன் இரு கைகளின் ஆள் காட்டி விரல்களை அருகருகே வைத்து என் மகள் எப்படி கைகளை ஆட்டிக் கொண்டிருந்தாள் என்பதை அவள் விவரித்தபோது எப்படியாவது கருவில் புகுந்து என் மகளை பார்த்திட முடியாதா என்று ஏங்கியது மனம். அதன் பிறகான ஒவ்வொரு ஸ்கேனுக்கும் என்னையும் உள்ளே அனுமதித்தார்கள். ‘தலை, முகம் இது, இங்கே பாருங்க.. வாயில விரல் வச்சிருக்கு.. சோ ச்வீட்!’ என்று டாக்டர் சொல்ல எங்கே எங்கேயென்று பதைபதைக்கும் ஒரு ஞானசூணியமாகவே பெரும்பாலான நேரங்களில் அங்கு நின்றுக் கொண்டிருப்பேன். ஏன் இந்தத் தந்தைகளுக்கெல்லாம் ஸ்கேனிங் பற்றிய ஒரு பயிற்சி முன்கூட்டியே அளிக்கப்படக் கூடாது என்று கடிந்துக் கொள்வேன். நேற்றோடு அவளுக்கு ஒன்பது மாதங்கள் முடிவடைந்துவிட்டது. கருவில் கையைசத்துக் கொண்டிருந்தவள் இன்று நான் எங்காவது வெளியில் கிளம்பிவிட்டால் என் மேல் ஏறிக் கொண்டு அவள் அம்மாவுக்கு ‘பை’ சொல்கிறாள். காலம் ரொம்பவே விரைகிறது. இன்று காலை கூட அவளுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் இந்த எண்ணங்கள் எல்லாம் என்னை கடந்துக் கொண்டிருந்தன. அலுவலகத்திற்கு நேரமாகவே அவளை பாட்டியிடம் விட்டுவிட்டு வந்துவிட்டேன். உடல் மட்டும் தான் இங்கு என் ஆன்மா இன்னும் அவளுடனே விளையாடிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment